சர்வதேச விசாரணைகளை இலங்கை நிராகரித்தமை வருத்தமளிக்கிறது-

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது. இதேவேளை, யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கான, ஐ.நா சபையின் அழைப்பை இலங்கையின் மூத்த அதிகாரிகள் நிராகரித்தமை தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சுதந்திரமாக விசாரணை செய்ய, 2014ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை மறுப்புத் தெரிவித்துள்ளது வருத்தமளிப்பதாக சர்வதேச கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோர் சாட்சியமளிப்போர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றார்களா என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் நெருக்குதல்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சிறுபான்மையினரின் உரிமைகள் பெருமளவில் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள கண்காணிப்பகம், உயிரிழந்த தமது சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தல் மற்றும் தமிழில் தேசிய கீதம் இசைத்தல் போன்ற எளிய செயற்பாடுகளும் மறுக்கப்படுவதாக கூறியுள்ளது. அத்துடன் அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இலங்கை அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வதோடு, ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.