ஜெயலலிதாவுக்கு நான்கு வருடங்கள் சிறை-

Tamil_News_476707100869சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி அவர் தமிழக முதல்வர் பதவியை இழப்பார் எனத் தெரியவருகிறது. 

கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் திகதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி 27.6.1996-ம் திகதி தமிழக இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பேரில் பொலிசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் 14.8.1996-ம் திகதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே 07.9.1996-ம் திகதி இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லமநாயுடு நியமிக்கப்பட்டார். விசாரணை அதிகாரி நல்லமநாயுடு உத்தரவின் பேரில் 18.9.1996-ம் திகதி ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுநாள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை செய்யப்பட்டன. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வீடுகளிலும் பொலிசார் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் 07.12.1996-ம் திகதி அன்று ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

Tamil_News_596213936806அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் இலஞ்ச ஒழிப்பு பொலிசார் சோதனை நடத்தினர். 19 வாகனங்கள், 7,109 சேலைகள், 389 ஜோடி செருப்பு, 214 சூட்கேஸ், 26© கிலோ தங்க-வைர நகைக 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் வழக்கில் சேர்க்கப்பட்டன. ஜெயலலிதா தனது வருமானத்தை விட ரூ.66 கோடியே 64 இலட்சத்து 42 ஆயிரத்து 318 மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

3.1.1997-ம் திகதி ஜெயலலிதா பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

19.11.1999 ம் திகதி தொடங்கிய விசாரணை 18.7.2001ம் திகதி வரை நடைபெற்றது. மொத்தம் 259 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யபட்டன. அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2001-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 79 சாட்சிகளிடம் மறு விசாரணை நடந்தது. இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் முதல் நபர் (ஜெயலலிதா) முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு 27.12.2003-ம் திகதி அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தனிக்கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது. ஏ.எஸ்.பச்சாபுரே நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அரசு சிறப்பு வக்கீலாக ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டார்.

09.5.2005-ம் திகதி அன்று ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு ஆகிய 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்று 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க பெங்களூர் தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து 14.7.2005-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து லண்டன் ஓட்டல் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 2010-ம் ஆண்டு வரை தமிழில் இருந்த வழக்கு ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் 88 ஆயிரம் பக்கங்கள் ஆகும். குற்றப்பத்திரிகை மட்டும் 13 ஆயிரத்து 600 பக்கங்களை கொண்டுள்ளது.

பெங்களூர் தனிக்கோர்ட்டில் 252 அரசு தரப்பு சாட்சிகளும், 99 எதிர்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து கடந்த 2011-ம் ஆண்டு அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுமாறு கோரி மனு செய்தார்.
அதைத்தொடர்ந்து அப்போதைய தனிக்கோர்ட்டு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவின் பேரில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் நவம்பர் 21, 22 ஆகிய திகதிகளில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
2012-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் திகதி அரசு சார்பில் ஆஜராகி வந்த அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா பதவியை இராஜினாமா செய்தார். அதே மாதம் 29-ம் திகதி அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார்.

13.8.2013-ம் திகதி அன்று இந்த வழக்கில் அரசு தரப்புடன் தி.மு.க. விடுத்த கோரிக்கையை அப்போது நீதிபதியாக இருந்த பாலகிருஷ்ணா ஏற்றுக்கொண்டார்.
அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை நீக்க வேண்டும் என்று கோரி 23.8.2013-ம் திகதி கர்நாடக ஐகோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்தது.

அதைத்தொடர்ந்து 26.8.2013-ம் திகதி அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கர்நாடக அரசின் உத்தரவை இரத்து செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் அவர் தொடர்ந்து ஆஜராகி வாதாட நீதிபதிகள் அனுமதி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் தனது இறுதி வாதத்தை தொடங்கினார். 25 நாட்கள் அவர் வாதிட்டு தனது தரப்பு நியாயங்களை எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து சசிகலா சார்பில் வக்கீல் மணிசங்கர் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் வக்கீல் அமித் தேசாய் 8 நாட்களும் ஆஜராகி வாதிட்டனர். அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் 15 நாட்கள் இறுதி வாதம் செய்தார். அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 20-ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவித்தார். ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல் நபரான ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருப்பதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டை பெங்களூர் பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூர் நகர பொலிஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வசதியாக தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றுமாறு யோசனை தெரிவித்ததால் நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்கு ஆவணங்களை மாற்ற வசதியாக வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 27-ம் திகதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். (நன்றி நக்கீரன்)