தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

Tamil_News_150992989541சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்ததை தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 6 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி 4 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளார். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா பதவி இழக்கும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த 2001ல் வழக்குகளில் சிக்கி ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்தார். இந்த முறையும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்ததும், கோர்ட் அறையில் இருந்த ஒ.பன்னீர்செல்வத்துடன் ஜெயலலிதா சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால், பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி உறுதி என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாநிலங்களவை எம்.பி. நவநீதகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன், அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இவர்கள் இன்று காலை சென்னை திரும்ப உள்ளனர். அதிமுக உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் கூடி புதிய முதல்வர் பெயரை இறுதி செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிகிறது. மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருவர் முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார். அதன் பிறகு இது குறித்த தகவல் கவர்னர் ரோசையாவுக்கு தெரிவிக்கப்படும். புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதிய அமைச்சர்கள் யார், யார் என்ற பட்டியல் அறிவிக்கப்படும். அமைச்சரவை பட்டியலில் ஏற்கனவே அமைச்சர் பதவி வகித்தவர்களுக்கு அதே இலாகா ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, சிலர் புதிதாக அமைச்சரவை பட்டியலில் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்று கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் சென்னை விரைந்துள்ளனர்