தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்பு-

Tamil_News_686500191689தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் இன்றுபிற்பகல் 1மணியளவில் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து ஏனைய அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில், ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பதவியேற்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தன. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமையை அடுத்து, அவர் இயல்பாகவே தமது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார். அத்துடன் அவரின் அமைச்சரவையும் பதவியிழந்தது. இதனையடுத்து சிறையிலுள்ள ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரில் அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்றுமாலை கூடி பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக தெரிவுசெய்தனர். இதன்போது ஜெயலலிதா அனுப்பிய கடிதம் ஒன்றும் வாசிக்கப்பட்டது இந்நிலையில் தமிழக ஆளுநர் ரோசைய்யா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பன்னீர்செல்வம் தாம் அமைச்சரவையை அமைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இதேவேளை பன்னீர்செல்வம் கடந்த 13 வருடத்தில் இரண்டாவது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றுள்ளார் ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு ஒன்றின்போதும் பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

எங்கும் தப்பி ஓட மாட்டேன்! ஜெயலலிதா-

Tamil_News_884116768837சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும், தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக தனித்தனியாக பிணை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு பிணை மனுவுடன் தீர்ப்பின் நகலும் ஆயிரம் பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா தனது பிணை மனுவில், ‘தனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பெங்களுர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை என்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர, நான் ஒரு சாதாரண நபர் அல்ல மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. பிணையில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

திருமலை அரசாங்க அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

திருகோணமலை மாவட்ட, அரசாங்க அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு கோரி, திருமலை பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இன்று திருமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கருகில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். கடந்த 2006ஆம் ஆண்டு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர்ஜெனர்ல் டி.டி.ஆர்.டி சில்வாவுக்கு எதிராகவே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருமலை பிரதேச செயலர்களின் அரச கடமைகளை செய்வதற்கு, அரச அதிபர் தடையாக இருப்பதாகவும் அவரை உடனடியாக இடம்மாற்ற கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச அதிபரை இடம்மாற்றம் செய்வதற்கான கடிதம் இம்மாதம் 15ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன் அவருடைய பதவிக்கு வேறோருவரும் நியமிக்கப்பட்டார். இருந்தும், இடம்மாற்ற கடிதத்தை நிராகரித்துவிட்டு அரச அதிபர் சேவையில் ஈடுபட்டுள்ளார் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். இதேவேளை, அரச அதிபரை இடம்மாற்றம் செய்யக்கூடாது என கோரி திருமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு முன்பாக, அலுவலக ஊழியர்களும் பொதுமக்களும் மற்றுமொரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கந்தளாய் கோமரங்கடவல பிரதேசத்திலுமிருந்து பொதுமக்கள் வந்து கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகளை வாசிக்க…

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படை உதவி-

விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்த இந்திய மீனவர்கள் குழுவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். நான்கு மீனவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூர்ய தெரிவித்துள்ளார். கச்சத்தீவுக்கு அருகில் இந்தப்படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் மீட்கப்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை அண்மையில் இலங்கை கடற்பரப்பில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று வந்துள்ளமை தொடர்பில் முழு அவதானத்தையும் செலுத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் சகல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதாக இந்தியா கூறியுள்ளது.

வாக்காளர் பெயர் பட்டியல் சீர்திருத்தம் நாளையுடன் நிறைவு-

2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் சீர்திருத்தம் நாளையுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. தேர்தல்கள் செயலகத்தின் பிரதி ஆணையாளர் எம் எம் மொஹமட் இதனை தெரிவித்தார். இந்நிலையில் வாக்காளர் பெயர் பட்டியில் தமது பெயர்களை பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் இன்றும் நாளையும் பதிவு செய்துக் கொள்ளுமாறு பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார். இதனிடையே, எதிர்வரும் தேர்தல்கள், புதிய வாக்காளர் பெயர் பட்டியலின் டியே இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.