ஊவா மாகாண முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ பதவிப்பிரமாணம்-

shasheendraஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்த மித்ர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாண சபைக்கு ஏனைய கட்சிகள் சார்பில் தெரிவான உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லண்டன் பி.பி.ஸி தமிழோசையைக் காப்பதற்கு கை கொடுக்குமாறு வேண்டுகோள்-

கடந்த 74 ஆண்டுகாலமாக லண்டனிலிருந்து இயங்கி வரும் தமிழோசையை இந்தியத் தலைநகர் டெல்லிக்கு நாடு கடத்துவதற்கு பி.பி.ஸி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்தியா பொலிஸி எனும் திட்டத்தின் கீழ் இந்திய சாகரத்துக்குள் சேர்த்துவிட பி.பி.ஸி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு பக்கசார்பற்ற சர்வதேச தமிழ் செய்திநிறுவனம் தமிழோசையாகும். இது இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட தரப்பினரின் ஆதரவையும், அதே சமயம் விமர்சனத்தையும் தமிழோசை பெறுவதன்மூலம் தெளிவாகின்றது. இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கு பி.பி.ஸி தமிழோசை இன்னமும் அவசியமானதாக உள்ளது. இந்நிலையில் தமிழோசையை லண்டனில் இருந்து டெல்லிக்குக் கொண்டு செல்வது தமிழ்பேசும் இலங்கை சிறுபான்மை சமூகங்களுக்கு பேரிழப்பாகும். பி.பி.ஸி சிங்கள சேவை லண்டனில் இருக்க, தமிழோசையை மட்டும் டெல்லிக்கு அனுப்புவது அந்தசேவை அதிகம் தேவைப்படும் மக்களுக்கு பெரும் இழப்பாக அமையும். எனவே இதனைத் தடுப்பதற்காக தயவு செய்து பி.பி.ஸி நிர்வாகத்துக்கும், பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கும் அனுப்புவதற்கான கீழுள்ள விண்ணப்பத்தில் பெயரைப் பதிவு செய்வதுடன் முகநூலிலும் பகிர்ந்துகொள்ளுமாறு கேடடுக்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.petitions24.com/signatures/save_the_london_bbc_tamil_broadcast/start/0

மேலும் செய்திகளை வாசிக்க….

மட்டக்களப்பு மத்திய சிறையில் மோதல்; கைதிகள் மூவர் காயம்-

மட்டக்களப்பு மத்திய சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் கைதிகள் மூவர் காயமடைந்துள்ளனர். மோதலில் காயமடைந்த மூன்று கைதிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென கூறப்படுகிறது. சிறைக்கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நேற்று மாலை குழு மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது. ஐந்தாம் குறுக்கு கல்லடி மட்டக்களப்பைச் சேர்ந்த கே. புஸ்பராஜா (வயது28), வாழைச்சேனை பறக்கத் வீதியைச் சேர்ந்த ஏ.எம். ஜெமீல் (வயது22), சாகாமம் பொலிஸ் சாவடி வீதி, பொத்துவில் எனும் முகவரியைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ. றினோஸ் (வயது22) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

திருகோணமலையில் 53 கிராம உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்-

திருகோணமலை மாவட்டத்தில் 53 கிராம உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. போட்டிப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன், மேலும் 11பேருக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வசதி-

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம், செவ்வாய்க்கிழமை(30) தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடிவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தெஹிவளை துப்பாக்கிச்சூட்டில் இரு இளைஞர்கள் படுகாயம்-

கொழும்பு, தெஹிவளை பொக்குன வீதியில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு இளைஞர்களும் மழை காரணமாக குறித்த பிரதேசத்தில் வீதியோரமாக நின்றிருந்தபோது, வீதியில் நடந்து சென்ற துப்பாக்கி ஏந்திய இருவர், இளைஞர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்னர், காயமடைந்துள்ள இளைஞன் மற்றும் அவரது ககோதரன்மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டநிலையில்; அவர்கள் உயிர்தப்பியிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு-

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனுமீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிணை மனுமீதான விசாரணை, இன்று பெங்களுரிலுள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் சட்டத்தரணி ராம் ஜெத்மலானி ஆஜரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக அரசு சட்டத்தரணியாக பணியாற்றிய பவானி சிங், மீண்டும் அரசு தரப்பில் ஆஜராகினார். ஆனால், பவானி சிங்கை அரச தரப்பு சட்டத்தரணியாக் கருதுவதில் குழப்பம் இருப்பதாக நீதிபதி ரத்தினகலா அதிரடியாக அறிவித்தார். ஏனெனில், சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க மட்டுமே பவானி சிங் அரசு சிறப்பு சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். அந்த வழக்கு கடந்த சனிக்கிழமையோடு முடிந்துவிட்டது. எனவே, பவானி சிங்கின் பதவிக் காலம் அத்தோடு நிறைவடைந்துவிட்டது என்று நீதிபதி தெரிவித்தார். சிறப்பு நீதிமன்ற வழக்கோடு பவானி சிங்கின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராகும் சட்டத்தரணி யார் என்பதை இன்னும் கர்நாடக அரசு தீர்மானிக்கவில்லை. எனவே, அரச தரப்பு சட்டத்தரணி யார் என்பதை தீர்மானித்து சொல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ரத்தின கலா. இந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கர்நாடக அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் இணைந்து ஆலோசனை நடத்தி, ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணைக்கு யாரை அரச சட்டத்தரணியாக நியமிப்பது என்பதை அறிவிக்க வேண்டும். கர்நாடக அரசு நினைத்தால் பவானி சிங்கையே அரசு தரப்பு சட்டத்தரணியான தொடரச் செய்ய முடியும். அல்லது புதிதாக மூத்த சட்டத்தரணி யாரையாவது கூட நியமிக்க முடியும். கர்நாடக அரசின் முடிவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும். இதில் வினோதம் என்னவென்றால், வழக்கில் ஆஜராக சென்ற பவானி சிங்கும் தனது பதவிக்காலம் முடிந்துவிட்டதால், இனிமேல் இதில் ஆஜராக கூடாது என்ற கோணத்தில் யோசிக்கவில்லை. கர்நாடக அரசு தரப்பிலும் ஜெயலலிதா தரப்பிலும் கூட இதுகுறித்த முன்யோசனை இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், நீதிபதி இந்த விடயத்தை சரியாகக் கேட்டு, நீதிமன்றத்தை ஒரு நிமிடம் திக்குமுக்காட செய்துவிட்டார். இப்போதுதான் இரு தரப்புமே அரச தரப்பு சட்டத்தரணி குறித்த யோசனையை தொடங்கியுள்ளது. இந்த குழப்பத்தால், ஜெயலலிதா சிறையில் இருப்பது சரியில்லை. எனவே, அவருக்கு பிணை வேண்டும் என்று ஜெத்மலானி வாதிட்டார். ஆனால் நீதிபதி ரத்தின கலாவோ, அப்படி அவசரமாக பிணை வேண்டும் என்றால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்யுங்கள் என்றார