Header image alt text

கண்ணீர் அஞ்சலி!

Posted by plotenewseditor on 31 October 2014
Posted in செய்திகள் 

கண்ணீர் அஞ்சலி!

110987

 தாயின்மடியில்  : 03,04,1935     —    இறைவன்அடியில் : 24,10,2014

புளொட் பிரான்ஸ்கிளைப் பொறுப்பாளர் தோழர் யோன்சன் அவர்களின் தாயார் அமரர் திருமதி செல்லத்துரை மரியமகேஸ்வரி அம்மையாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!
தாயையும், தாய் நாட்டையும் பிரிந்து கண்ணீர்மல்கும் தோழனே! உன் உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தோழர்கள் நாமும் துயர் பகிர்ந்து கொள்கின்றோம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி கிழக்கு தச்சன்தோப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மரியமகேஸ்வரி அவர்கள் 24-10-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். Read more

பதுளை மாவட்டத்தில் இயற்கையனர்த்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரினில் நாமும் பங்கேற்கின்றோம்.

landslid_witness_012வாழ்வனைத்தும் போராடிப் போராடி அடிப்படை வசதிகளற்று வாழும் மலையக மக்கள் வாழ்வில் பேரிடியாகும் பதுளை மாவட்டம் கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு. இவ் அனர்த்தத்தில் உயிரிழந்த நம் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கை யாக்குகின்றோம். உயிரிழந்த எம் உறவுகளின் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு, அவர்களின் துயருடன் நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்துகொள்ளுகின்றோம்.

imagesCAMSPTJDதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)                                          

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

ஏழு மாவட்டங்களில் தொடரும் மண்சரிவு அபாயம்-

sri_lanka_landslideபதுளை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7மணிவரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு பணிமனை அறிவித்துள்ளது. இதன்படி பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பதுளை மாவட்டத்தின் எல்லை – வெல்லவாய, ஹப்புத்தளை – பெரகலை, பெரகலை – வெல்லவாய, பதுளை – இஸ்பிரிங்வெளி, பசறை – லுணுகலை, அட்டாம்பிட்டி – வெலிமட, பதுளை – பண்டாரவளை, பதுளை – மகியங்கனை மற்றும் ஹாலிஎல –வெலிமட வீதிகளை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மீரியாபெத்த மண்சரிவு காரணமாக மலையகத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது மலையகத்திலுள்ள பிரதான நகரங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் வெள்ளை மற்றும் கறுப்பு நிறக்கொடிகளை ஏந்தி தமது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மூன்றாவது நாளாக மோப்ப நாய்களைக் கொண்டு தொடரும் மீட்பு பணி-

untitledபதுளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது.. இராணுவத்தினர் இரண்டு பிரிவாக பெக்கோ இயந்திரங்களை கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசேட தேடுதலும் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரேன் பெனாண்டோ, ஐதேக தேசிய அமைப்பாளர் தயா கமகே உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன், உரையாடி, அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

மண் சரிவில் 144 பேர் மாயம், இடம்பெயர்ந்தவர்கள் விபரம்-

malyakamஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய புதுப்பிக்கப்பட்ட தகவலின்படி மீரியாபெத்த மண்சரிவு காரணமாக 144 பேர் இன்னும் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 410 குடும்பங்களைச் சேர்ந்த 1,413பேர் இவ் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு கொஸ்லாந்தை சிறிகணேசா தமிழ் வித்தியாலயத்திலும், பூனாகலை தமிழ் வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர எல்லை, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு ஏற்படுமென்ற அச்சம் காரணமாக 76 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மீரியாபெத்தை அனர்த்தத்தை தொடர்ந்து, பூனாகலை எல்.எல்.ஜீ. தோட்டப் பிரிவில் உள்ள மக்கள் அப்பிரிவில் ஏற்பட்ட நில வெடிப்பின் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அதேநேரம், அச்சத்தில் இடம்பெயர்ந்த மற்றொரு பிரிவினர் பூனாகலை ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை-2013ல் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு-

kumulamunaiமுல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை மகாவித்தியாலயம், செம்மலை மகாவித்தியாலயம் மற்றும் அலம்பல் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் இருந்து கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை-2013ல் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் நேற்றுமுற்பகல் குமுழமுனை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் திரு. ம.கமலகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சிததார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி உ.முனீஸ்வரன் (வலயக் கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. ந.விஜயரத்தினம்(அதிபர் செம்மலை மகாவித்தியாலயம்), மேர்வின் ஜீவராசா(அதிபர் அலம்பில் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், திரு. க.சிவநேசன்(பவன்) தமிழீழ மக்கள் விடுதலைக்கழக வன்னிப் பிராந்திய இணைப்பாளர்), திரு. கே.தவராசா (தலைவர், சாய் சமுர்த்தி, தண்ணீருற்று) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதன்போது பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கான நிதிப்பங்களிப்பினை லண்டனிலே வசிக்கின்ற புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு.தர்மலிங்கம் நாகராசா அவர்கள் வழங்கியிருந்தார். இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த மூன்று பாடசாலைகளுமே யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைகளாகும். இங்கு எதுவித வசதிகளும் இல்லாததுடன், நகரப் பாடசாலைகளைப் போலல்லாது இப்பாடசாலைகள் பௌதீக வழங்கல் மிகவும் குறைந்த பாடசாலைகளாகும். இத்தகைய வசதிகளற்ற நிலையிலும் இந்த மாணவர்கள் தங்களது திறமைகளைக் காட்டி க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இப்போது இவர்கள் உயர்தரக் கல்வியைக் கற்கின்றார்கள். இப்பகுதி பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உதவிகளை செய்துவருகின்ற லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சார்ந்த திரு. தர்மலிங்கம் நாகராசா அவர்கள் இவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தான் தொடர்ந்தும உதவுவதாக உறுதியளித்திருக்கின்றார். குறிப்பாக இந்த வன்னிப் பகுதியிலே பல பாடசாலைகள்; மற்றும் ஏழைச் சிறார்களுக்கு அவர் தொடர்ந்து உதவி வருகின்றார். இந்த வகையிலேயே அவர் இப்பிள்ளைகளுக்கான பாராட்டுவிழா நிகழ்விற்கான உதவியினையும் வழங்கியிருக்கின்றார். அத்துடன், இந்தப் பிள்ளைகளின் வளர்ச்சியிலே நாமெல்லோரும் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த கிராமங்களின் அபிவிருத்தியானது இந்தப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலேதான் தங்கியிருக்கின்றது என்று தெரிவித்தார்.

kumulamunai (16)kumulamunai (3)kumulamunai (2)kumulamunai (4)kumulamunai (8)kumulamunai  (5)kumulamunai  (7)kumulamunai (6)kumulamunai (12)kumulamunai (13)kumulamunai (14)kumulamunai (10)kumulamunai (11)kumulamunai (9)

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் பலர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்-

landslid_witness_012பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஆயினும் அரசாங்க புள்ளிவிபரத் தகவல்களின்படி 350 பேர் வரை மண்சரிவுக்குள் அகப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீரற்ற காலநிலையால் நேற்றுமாலை நிறுத்தப்பட்ட மண்சரிவு மீட்புப்பணிகள் இன்றுகாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மண்சரிவால் இடம்பெயர்ந்துள்ள 818 பேர் இரு பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொஸ்லாந்தை தமிழ் வித்தியாலயத்தில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேரும் பூணாகலை தமிழ் மாகா வித்தியாலயத்தில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியிலுள்ள 300ற்கும் அதிகமான குடும்பங்களின் 1,200 பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட செயலர் டீ.பீ.ஜி.குமாரசிறி தெரிவிக்கின்றார். நுவரெலியா பிரதேச செயலர் பிரிவில் இதுவரையில் 104 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவர்களது வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் லபுகல தோட்டத்திலிருந்து 150 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொத்மலை வௌண்டன் தோட்டத்தில் 17குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. 50 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். மண்சரிவு அபாயத்தினால் வலப்பனை லிடெஸ்டெல் தோட்டத்தில் 17 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார்.

koslanda_image_007 koslanda_image_011 koslanda_image_016 malayakam1 malayakam2

மலையகமெங்கும் துக்கதினம் அனுஸ்டிக்க கோரிக்கை

sri_lanka_landslideபதுளை. கொஸ்லாந்தை, மீறியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையக மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலையகமெங்கும் ஒருவார காலம் துக்க தினம் அனுஸ்டிக்க வேண்டும் என மலையக சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மலையக சிவில் அமைப்புக்களான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம் மற்றும் மலையக பாட்டாளிகள் கழகம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதுளை – கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு, கறுப்புநிற உடை அணிந்து, இன்று வியாழக்கிழமை 30ஆம் திகதி முதல் ஒரு வார காலத்தை, சோக வாரமாக அனுஷ்டிப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொஸ்லாந்தைக்கு விஜயம்-

janathipathi koslanthaikku vijayam (1)பதுளையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மீறியபெந்த தோட்டத்தை பார்வையிடவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுமுற்பகல் கொஸ்லாந்தை பகுதிக்குச் சென்றிருந்தார். அவர் அங்குள்ள பாதிக்கபபட்ட மக்களுடன் உரையாடியுள்ளார். மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை பாதுகாக்குமாறு சிறுவர் பாதுகாப்பு சபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

பேதமின்றி மீரியபெத்த மக்களுக்கு உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை-

imagesஇன மதபேதமின்றி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு உதவ இலங்கையர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து எமது சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். உதவியற்ற மக்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமை என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா, ஐ.நா உதவத் தயார்-

பதுளை, கொஸ்லாந்தை – மீறியபெத்தை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. மண்சரிவு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ_டன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தகவல் அறிந்துள்ளதோடு உதவி அறிவிப்பையும் விடுத்துள்ளார். இந்தியாவின் உதவி அறிவிப்புக்கு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை மீரியாபெத்தையில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஐ.நா சபையின் மனிதாபிமான பிரிவு அறிவித்துள்ளது. ஐ.நாவின் பேச்சாளர் ஸ்ரீவன் டுஜாரிக் இதனைத் ஐ.நாவின் செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பில் இன்று மேலுமொரு அறிக்கை-

இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இன்று வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்களின் அமுலாக்கம் குறித்து ஆராய்வதற்கான கூட்டத்தொடரின் போது, இலங்கை தொடர்பில் கடந்த 8ம் மற்றும் 9ம் திகதிகளில் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. ஜெனீவாவில் இடம்பெற்றிருந்த இந்த கூட்டத்தின் போது சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் இலங்கை தொடர்பான அறிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கைகளின் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றே இன்று வெளியிடுவதாக கூறப்படுகிறது.

மீனவர் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வு-

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இடைக்கால தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். மீனவர் விடயத்தில் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதுவரையில், தற்காலிக தீர்வு வழங்குவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா அவர்கள் கூறியதுடன், கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை மீட்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இ.போ.ச பஸ் மீது கிளிநொச்சியில் கல்வீச்சு-

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின்மீது கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பஸ் மீதே கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸார் கூறுகின்றனர். கல்வீச்சுக்கு இலக்கான பஸ், கிளிநொச்சி பொலிஸாரின் பொறுப்பில் உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடபகுதி பயணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய தொலைபேசி, தொலைநகல் இலக்கங்கள்-

vadapakuthi payanaththitkuட பகுதிக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்லும்போது பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே இது தொடர்பான தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்கள் பத்திரிகைவாயிலாக வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் அந்த இலக்கங்களில் தவறுகள் காணப்பட்ட காரணத்தினால் மீண்டும் அவை திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதன்படி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பொதுத் தொலைபேசி இலக்கமான 0112430868 அல்லது 0112430875 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பாதுகாப்பு அனுமதி அதிகாரி (எம்.எல்.ஓ.) பிரிவுக்கு மாற்றுமாறு கூறி அங்குள்ள அதிகாரியுடன் தொடர்பு கொள்ளமுடியும். அத்துடன் பயணம் தொடர்பான தகவல்களை 0112328109 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்போது பெறுபவர், பாதுகாப்பு அனுமதி அதிகாரி (எம்.எல்.ஓ.) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு என குறிப்பிட்டு அதன்கீழ் பெயர், வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம், பயணம் செய்யும் இடம், காரணம், தங்கும் இடம் மற்றும் தங்கும் காலப்பகுதி, அனுப்புபவரின் பக்ஸ் இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு மேற்கூறிய தொலைநகல் இலக்கம் ஊடாக தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரியாபெத்த மண்சரிவு , 14சடலங்கள் மீட்பு, சுமார் 300 பேர் மாயம்-

meetiyapeththa man sarivu (2)meetiyapeththa man sarivu (1)பதுளை மாவட்டம், ஹல்துமுல்லை – கொஸ்லாந்தை – மீரியாபெத்த தோட்டத்தில் இன்றுகாலை இடம்பெற்ற மண்சரிவினால் அங்கு வசித்த 66 குடும்பங்களைச் சேர்ந்த 300பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் மண்ணுக்குள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அங்கு மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் இராணுவத்தினர், காவற்துறையினரோடு பிரதேச வாசிகளும் இணைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில் 14பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் 7,8,9,10,11 மற்றும் 12 ஆகிய 6 லயன் குடியிருப்புக்கள், 1 கோயில், 5 குவார்ட்டஸ், 2 பால் சேகரிக்கும் நிலையம், 2 வாகனம் திருத்துமிடம், 1 வைத்திய நிலையம், கடைகள் என பல இடங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. மண்சரிவினால் மீரியாபெத்த தோட்டம் சேறு நிரம்பிக் காணப்படுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புக் குழுத் தலைவர் யாழ் விஜயம்-

ஜ.நாவின் பயங்கரவாத எதிர்ப்புக்குழுத் தலைவர் ஜீன் போல் மற்றும் அவரது குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இந்த விஜயத்தின்போது, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்ததன் பின்னர், அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பாக படங்களுடன் விளக்கமளிக்கப்பட்டதோடு, யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாகவும், விரிவாக கேட்டறிந்தனர். மேலும் யாழ். நிலவரம் தொடர்பாக அதிகாரிகள் என்ன கூறினார்கள் என அரச அதிபரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, யாழ். மாவட்டத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தமக்குள் கதைத்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது என்றார். இச்சந்திப்பில், கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு அரச அதிபர் வேதநாயகம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். Read more

மாதகல் தேவாலய மாலைநேர பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்-

untitledயாழ்ப்பாணம், மாதகல் புனித தோமையர் தேவாலய வளாகத்தில் இன்று மாலைநேரப் பள்ளிக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந்த மாலைநேரப் பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்திற்கான நிதியாக வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் (1,00,000) கொடுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது நலன் விரும்பிகளும், இதற்கான மிகுப்பணத்தை கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். தேவாலய பங்குத்தந்தை அருட்பணி கனீஸியஸ்ராஜ் அடிகளார் இங்கு உரையாற்றுகையில், மாலைநேரப் பள்ளிக்காக உதவி வழங்கியமைக்காகவும், உதவி வழங்குவதாக தெரிவித்திருப்போர்க்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறியதுடன், வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நலன்விரும்பிகளும் இந்த கட்டிட வேலைகளுக்காக தம்மால் இயன்ற உதவிகளை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இந்த வைபவத்தின்போது தேவாலய பங்குத்தந்தை அருட்பணி கனீஸியஸ்ராஜ் அடிகளாரும், அன்புக் கன்னியர் மடத்தின் சார்பில் கலந்துகொண்டிருந்த அருட்சகோதரி லெற்ரீஷியா, அருட்சகோதரி சகுந்தலா ஆகியோரும் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுமாக மாலைநேரப் பள்ளிக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்கள். மேற்படி மாலைநேர பள்ளியில் அப் பகுதியைச் சூழ இருக்கக்கூடிய வறிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

mathakal st thomas church 28.10 (7)mathakal st thomas church 28.10 (6)mathakal st thomas church 28.10 (5)mathakal st thomas church 28.10 (4)mathakal st thomas church 28.10 (3)mathakal st thomas church 28.10 (2)mathakal st thomas church 28.10 (1)

நிறைந்த எதிர்பார்ப்புள்ள தமிழ் மக்களும் கூட்டமைப்பின் கருத்தியல் மோதல்களும்-கபில்- 

thamil thesiya koottamaippu indiaஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு அவ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் நியாயத்தை பெற்றுக்கொடுத்து அவ்வினத்தின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் உரம் சேரப்பது உலக வரலாற்றில் நாம் கண்ட உண்மைகள். குறிப்பாக ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர்களுக்காக மாட்டின் லூதர் கிங் என்ற மனிதர் வழியிட்டமைபோன்ற உன்னத உதாரணங்களை கண்ணூடாக கண்ட சமூகமாக இன்று தமிழினமும் உள்ளது.  இவ்வாறான நிலையிலேயே ஒடுக்கபபட்ட அல்லது பெரும்பான்மை இனத்தால் நசுக்கப்பட்ட ஒரு தேசிய இனமாக நிலைபெறும் தமிழினமும் 60 வருட காலத்தில் சாதித்தவை எது என்ற கேள்விகளுக்கு அப்பால் அவ் இனத்தின நிலையை உலகிற்கு அறியத்செய்த பெருமை நிறைவேறியிருப்பது யதார்த்தம். இந் நிலையிலேயே நிர்க்கதியான தமிழனத்தின் இருப்புக்கு மீட்பராக தமிழ் மக்கள் கருதிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற கருவி இன்று உள்ளக கருத்தியல் மோதலில் சிக்கியிருப்பது பெரும் துர்ப்பாக்கிய தருணமாகவேயுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசன செயற்பாட்டின் ஊடாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு பல்வேறான சிக்கல் நிறைந்த பாதைகளை கடந்து இன்று ஆக்கபூர்வமான நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிய தருணத்தில் சிக்கல் நிறைந்த பாதையை மீள தெரிவு செய்து விடுமா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் கேள்விமேல் கேள்வியாக உருப்பெற்று வருகின்றது. Read more

யாழ் – கொழும்பு ரயில் சேவையில் மேலதிக ரயில்களை இணைக்க நடவடிக்கை-

railயாழ் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளுக்கு, மேலதிக ரயில்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளில் ஏற்பட்டுள்ள ஆசனத் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. ரயில் போக்குவரத்தில் ஈடுபடும் யாழ். தேவி, கடுகதி, குளிரூட்டப்பட்ட கடுகதி, தபால் ரயில் சேவைகள்மூலம் அதிக பயணிகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் மீள ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைக்கு அதிகமான பயணிகள் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்வதால், ஆசனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கமையவே, மேலதிக ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழில் இளைஞரை காணவில்லையென முறைப்பாடு-

16 வயது இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். குருநகர் தொடர்மாடி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்ரியன் ஜீவன் (வயது 16 ) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். கடந்த 24 ஆம் திகதி காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை. கடந்த 3 தினங்களாக உறவினர்களின் வீடுகளில் தேடி வந்த நிலையில் இளைஞர் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண சபை காணி தொடர்பான தீர்மானம் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு-

northern_provincial_council1காணிகள் சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரும் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தினை உள்ளடக்கி வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் எழுதிய கடிதம் விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்படும் என ஜானதிபதி செயலளார் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். காணிகள் சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம் தமது அலுவலகத்தில் கிடைகப்பெற்றுள்ளதாகவும் அதனை கூடுமான விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கவுள்ளதாகவும் ஜானதிபதியின் செயலளார் லலித் வீரதுங்க வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ். சிறையில் இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் நிறைவு-

ilankai india meenavar pechchuயாழ். சிறையில் 24 இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தம்மை விடுவிக்க கோரி நேற்றுக்காலை முதல் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று முற்பகல் சிறைச்சாலைக்கு சென்று மீனவர்களுடன் இந்திய துணைத் தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. மீனவர்களின் விடுதலை தொடர்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினை பெற்றுத்தருவதாக தாம் இந்திய மீனவர்களுக்கு உறுதி வழங்கியதாக துணைத்தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி கூறியுள்ளார்.

இலங்கை திரும்ப விருப்பமில்லை -இலங்கை அகதிகள்-

ilankai thirumpa viruppamillaiஇந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் 67 வீதத்தினர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்புவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது டிஐஎஸ்எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவில் தங்கியுள்ள 520 குடும்பங்களில் 23வீதத்தினர் மாத்திரமே இலங்கைக்கு செல்ல விருப்பம் வெளியிட்டுள்ளனர் இவர்களில் 48.2 வீதமானோர் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை செல்லவே விரும்புகின்றனர். இந்தியாவில் 111 முகாம்களில் 67ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர் மீதமுள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு வெளியே வசிக்கின்றனர்.

தவறுதலான துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அலுவலர் காயம்-

உப காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காலி – நெலுவ காவல்நிலையத்தில் பணியாற்றும் பிறிதொரு காவல்துறை அலுவலர் காயமடைந்துள்ளார். காவல்துறையினரின் ஆணையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை பின்தொடர்ந்து சென்ற காவல்துறை குழுவினர் அதன் சாரதியை கைது செய்தனர் இதன்போது, முச்சக்கரவண்டி சாரதிக்கும், காவல்துறை உப அத்தியட்சகருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உப பரிசோதகரின் உத்தியோகபூர்வ துப்பாக்கி வெடித்ததன் காரணமாக அவருடன் சென்றிருந்த பிறிதொரு அலுவலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அலுவலர் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கனடாவில் மூன்று தமிழர்கள் தேர்தலில் வெற்றி-

canada vil moontru tamils vetriகனடாவின் ரொறொன்ரோ நகர தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி வொனிற்றா நாதன், ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல் மற்றும் மார்க்கம் நகராட்சி மன்ற உறுப்பினர் லோகன் கணபதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவின் மிகப்பெரிய நகரமான ரொறொன்ரோவின் அடுத்த மேயராக ஜோன் ரொறி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றி ரொறொன்ரோ நகர சபையில் இடம்பெற்ற வோட் சகோதரர்களின் கொந்தளிப்பான ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் பலி-

british il ilankai tamil deadபிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டுக்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 43 வயதான ஜெயரட்னம் கந்தையா என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், 2000ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்று 14 வருடங்கள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more