சர்வதேச முதியோர் தினம் – 2014
சர்வதேச முதியோர் தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 1-ம் திகதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக சர்வதேச முதியோர் தினம் காணப்படுகின்றது. வயதானவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்கவேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலேயே அக்டோபார் 1ம் திகதி சர்வதேச முதியோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உட்பட நால்வரின் பிணை மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த நால்வரையும் பிணையில் விடுவிக்குமாறுகோரி நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையை இம்மாதம் 6ஆம் திகதிவரை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் நேற்றையதினம் ஜெயலலிதா ஜெயராம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கர்நாடகா உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அவசர மனுவொன்றை கையளித்தனர். இதற்கமைய ஜெயலலிதா ஜெயராம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று கர்நாடகா உயர்நீதிமன்றின் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் அரச தரப்பு சட்டத்தரணி ஆஜராகாத காரணத்தினால் மனுமீதான விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் மீளாய்வு-
இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பில் ஐ.நா மனித உரிமைக் குழு இம்மாதம் 7ம், 8ஆம் திகதிகளில் மீளாய்வு செய்யவுள்ளது. 18 பேர்கொண்ட சர்வதேச சுயாதீன நிபுணர் குழுவினரால் இந்த மீளாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையுடன் மேலும் ஐந்து நாடுகளின் மனித உரிமை நிலை தொடர்பிலும் மீளாய்வு செய்வதற்கு ஐ.நா மனித உரிமைக் குழு உத்தேசித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்தக் குழுவினர் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
14 வருடங்களின் பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை-
யாழ்தேவி ரயில் எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது. ஒக்டோபர் 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன், பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில்சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதேவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ். ரயில் நிலையமும் ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்படவுள்ளது. காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை எதிர்காலத்தில் ஆரம்பிக்க அரசு திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை வாசிக்க…… Read more