சர்வதேச முதியோர் தினம் – 2014
சர்வதேச முதியோர் தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 1-ம் திகதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக சர்வதேச முதியோர் தினம் காணப்படுகின்றது. வயதானவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்கவேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலேயே அக்டோபார் 1ம் திகதி சர்வதேச முதியோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உட்பட நால்வரின் பிணை மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த நால்வரையும் பிணையில் விடுவிக்குமாறுகோரி நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையை இம்மாதம் 6ஆம் திகதிவரை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் நேற்றையதினம் ஜெயலலிதா ஜெயராம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கர்நாடகா உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அவசர மனுவொன்றை கையளித்தனர். இதற்கமைய ஜெயலலிதா ஜெயராம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று கர்நாடகா உயர்நீதிமன்றின் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் அரச தரப்பு சட்டத்தரணி ஆஜராகாத காரணத்தினால் மனுமீதான விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் மீளாய்வு-
இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பில் ஐ.நா மனித உரிமைக் குழு இம்மாதம் 7ம், 8ஆம் திகதிகளில் மீளாய்வு செய்யவுள்ளது. 18 பேர்கொண்ட சர்வதேச சுயாதீன நிபுணர் குழுவினரால் இந்த மீளாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையுடன் மேலும் ஐந்து நாடுகளின் மனித உரிமை நிலை தொடர்பிலும் மீளாய்வு செய்வதற்கு ஐ.நா மனித உரிமைக் குழு உத்தேசித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்தக் குழுவினர் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
14 வருடங்களின் பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை-
யாழ்தேவி ரயில் எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது. ஒக்டோபர் 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன், பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில்சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதேவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ். ரயில் நிலையமும் ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்படவுள்ளது. காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை எதிர்காலத்தில் ஆரம்பிக்க அரசு திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை வாசிக்க……
எதிர்க்கட்சியை இலக்கு வைக்கும் தாக்குதல்கள் அதிகரிப்பு-கபே-
ஐக்கிய தேசியக் கட்சியை மீளமைக்கும் வகையிலான தேர்தல் தொகுதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாவலபிட்டி பகுதி வீடொன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டின்மீது நேற்று கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அதன்பின் பெற்றோல் குண்டும் வீசப்பட்டதாகவும் கபே இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென கபே இன்றுவிடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கபேயின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுவர் தினம் – 2014-
சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் இன்று கொண்டாடப்படுகின்றது. 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991ஆம் ஆண்டு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச சிறுவர் தினத்தின் தேசிய நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறவுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணிகளும், கலை நிகழ்வுகளும், கருத்தரங்களும் இன்று இடம்பெறவுள்ளன. இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு பிரஜையாக உருவாக்கபட வேண்டியது அவசியமானது.
சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஆயிரம் ரூபா கொடுப்பனவு-அமைச்சர் பீலிக்ஸ்-
குறைந்த வருமானம் பெறும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு எதிர்வரும் நாட்களில் ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக சமூகசேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இதுவரை அகில இலங்கை ரீதியில் 70வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் 22 இலட்சம் பேர் உள்ளனர். அதில் 240,000 பேருக்கு இவ்கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கிணங்க இம்மாதம் முதல் இவ்கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இவ்கொடுப்பனவுகளை வழங்கவென மாதம் ஒன்றுக்கு 24கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சமூகசேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.