ஐ.தே.க உயர்மட்டக் குழு, தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பு-

ஐ.தே.கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சிலர் இன்றுமுற்பகல் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்ததாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரச உத்தியோகத்தர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்காக குறைந்தது 45 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்முதல் சர்வதேச கண்காணிப்பாளர்கள் செயற்பட வேண்டுமெனவும் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வத்திக்கானுக்கு விஜயம்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வத்திக்கான் செல்கின்றார். வத்திக்கான் பயணமாகும் ஜனாதிபதி, பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரைச் சந்திக்கும் ஜனாதிபதி, அவரது இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2015 ஜனவரி 13ம் திகதி பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை கொழும்பு உயர் மறைமாவட்டம் மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, வத்திக்கான் செல்லும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் அடங்குகின்றார். இந்த விஜயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தனக்கு அனுமதி அளித்துள்ளதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கட்சியின் அனுமதியுடன் இதற்கு முன்னரும் ஜோன் அமரதுங்க, ஜனாதிபதியுடன் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தேகொட இராணுவ முகாமில் வெடிப்பு-

மத்தேகொடை இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் இன்றுகாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் பரவிய தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்று மத்தேகொட முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். இன்றுகாலை 7.30 அளவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குழுவொன்று ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இராணுவத்தின் தீயணைப்பு வாகனங்களுடன், கோட்டே மற்றும் தெஹிவளை நகர சபைகளின் தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக பிரிகேடியர் ருவன் வனிகசூரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நங்கூரமிட்ட பாக். கடற்படைக் கப்பல்-

பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தலைமை மாலுமி ஷஹீட் இல்யாஸ் தலைமையில் பி.என்.எஸ் என்.எ.எஸ்.ஆர் மற்றும் எஸ்.எ.ஐ.எப் ஆகிய இரு கடற்படை கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நான்கு நாட்கள் தரித்து நிற்கவுள்ளன. பாகிஸ்தானின் எஸ்.எ.ஐ.எப் கடற்படைக் கப்பல் சீனாவின் கு22P போர்க்கப்பலைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக மேற்படி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடக்கூடியது.

இலங்கை தொடர்பில் மீண்டும் அறிக்கை சமர்ப்பிப்பு-

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில், இலங்கை தொடர்பான புதிய அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 40 பக்கங்களைக் கொண்டதான இந்த அறிக்கையில், இலங்கையின் மனித உரிமைகள் உள்ளிட்ட நிலைமைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் குழுவில் விவாதத்துக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.