இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை-அமெரிக்கா-
இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு மென்மைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக்கப்பட்டிருந்தன. எனினும் அவ்வாறான எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜேன் சாகீ தெரிவித்துள்ளார். அதேநேரம், இலங்கையுடனான அமெரிக்காவின் சீரான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. எனினும், நிலையான சமாதானத்தையும், மக்களின் நல்வாழ்க்கையையும் இலங்கை உறுதி செய்யும் பட்சத்திலேயே இது சாத்தியப்படும் என்றும் அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜேன் சாகீ குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் முறைபாடுகள் மொழிப்பெயர்ப்பில் பிழைகள்-
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும், சாட்சி வழங்கியோருக்கும் இடையில் மொழிப்பெயர்ப்பு பிரச்சினைகள் காணப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. காணாமல் போனோரின் உறவினர்கள் வழங்கிய பல முறைபாடுகள் பிழையாக மொழிப் பெயர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆணைக்குழுவின் அதிகாரிகள் எழுப்பிய கேள்விகள் பிழையாக மொழிப்பெயர்க்கப்பட்டு மக்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அதிகாரிகள், எந்த திசையில் இருந்து எறிகணைகள் வந்தன? என்று கேள்வி எழுப்பியபோது, அந்த கேள்வி எந்த முகாமில் தங்கி இருந்தீர்கள் என்று மொழிப் பெயர்க்கப்பட்டதாகவும் அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தானியாவில் சந்திப்பு-
பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அங்குள்ள ஐக்கிய தேசிய கட்சியின் கிளைக் காரியாலயத்தில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் சர்வதேச பொறுப்பாளர் சாகல ரத்னாயக்கவும் கலந்து கொண்டிருந்தார். எதிர்வரும் தேசிய தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி முகம் கொடுக்கவுள்ள முறைமைகள் மற்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய அரசாங்க மற்றும் எதிர்கட்சி தரப்புக்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வான் ஆற்றில் விழுந்ததில் மூவர் மரணம்-
கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று ஆற்றில் விழுந்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவனெல்லை, உயன்வத்தையைச் சேர்ந்த மொஹமட் யூசுப் இம்தியாஸ் (வயது 45), மொஹமட் பாரூக் (வயது 53), பாத்திமா மிசிரியா (வயது 49) ஆகியோரே மரணமடைந்துள்ளனர். ஹஸீர் மொஹமட் (வயது19) என்பவரே காயமடைந்துள்ளார். மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள உறவினரின வீட்டுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சடலங்கள் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதால் விபத்து சம்பவித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கச்சதீவை கோரும் தமிழகத்தின் புதிய முதல்வர்-
கச்சத்தீவு விடயத்தில் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் வழியையே, தற்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார். கச்சத்தீவு இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்து – இலங்கை உடன்படிக்கையின் கீழ் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இதனை மீளப்பெற முடியாது என்று மத்திய அரசாங்கம் முன்னதாகவே அறிவித்திருந்தது. எனினும் மத்திய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது-
வவுனியா – மாமடுவ வாவி பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் இன்று (03) அதிகாலை மாமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா – போகஸ்வௌ வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அநுராதபுரம், கல்கிரியாகம, மற்றும் கெக்கிராவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து பூஜை பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.