13ஆம் திகதி முதல் யாழ். வரையான தொடருந்து சேவை-

வடக்குக்கான தொடரூந்து சேவையின் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான சேவைகள் இந்த மாதம் 13ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் முகாமைத்துவ அதிகாரி பீ.எச்.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்த சேவைக்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தொடரூந்து பாதை நிர்மாணங்களுக்கு இந்தியா நிதிவழங்கலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் தமிழகத்திற்குமிடையிலான படகு சேவை-

இலங்கைக்குக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான கப்பல்சேவை அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையில் முன்னெடுத்து வரும் நிறுவனம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதி உதவியின்கீழ், தலைமன்னாருக்கான தொடரூந்து பாதை நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் பணிகள் எதிர்வரும் டிசம்பருடன் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த வருடம் முதல் தலைமன்னாருக்கும், ராமேஸ்வரத்துக்குமான கப்பல் சேவையை ஆரம்பிக்க கூடியதாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பௌரூஸுடன் இலங்கை நீதி ஒப்பந்தம்-

இலங்கைக்கும், பௌருஸ்க்கும் இடையிலான சட்ட மற்றும் நாடுகடத்தல் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள இணங்கப்பட்டுள்ளது. பௌரூஸின் ஜனாதிபதி எலசாண்டர் லுகசென்கோ இதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறார். குற்றச் செயல்கள் தொட்ட தகவல் பரிமாற்றங்களின் பொருட்டு இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடம் இலங்கையுடன் இவ்வாறான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள இணங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட வாகனங்கள் உள்நுழைவு-

கட்டுநாயக்க அதிவேக வீதியில் நீர்கொழும்பு மற்றும் கண்டி வீதியில் வாகனங்கள் உள்நுழைதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் வார நாட்களில் காலை 7மணி தொடக்கம் 9மணிவரை கட்டுநாயக்க அதிவேக வீதிக்குள் நீர்கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் வாகனங்கள் உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை வாசிக்க…..

அதிகமான தேர்தல்கள் எனது ஆட்சியிலேயே நடத்தப்பட்டது-ஜனாதிபதி

இலங்கையில் ஆகக்கூடிய தேர்தல்கள் தமது ஆட்சிக்காலத்திலேயே நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை இதன்மூலம் தெளிவாவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வத்திகானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, இத்தாலியின் ரோம் நகரிலும், ஐரோப்பாவிலும் வாழ்கின்ற இலங்கை சமூகத்தினரை சந்தித்தபோதே இந்த விடயங்களைக் கூறியுள்ளார். இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நாட்டிற்குள்ளேயே தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது. அதில் தலையிடுவதற்கான எவ்வித பண்பாட்டு ரீதியான உரிமையும் சர்வதேச சமூகத்திற்கு இல்லை இலங்கையின் விடயங்களில் தலையிடுவதன் ஊடாக, நாட்டில் ஸ்திரமின்மையை தோற்றுவிக்கவும், புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை நாட்டிற்கு எதிரான போலியான பிரசாரங்களையும், கருத்துகளையும் தோற்கடிப்பதற்கும், இலங்கையின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் முன்வருமாறு இலங்கை சமூகத்தினரிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் கூறியுள்ளார்.

மோதிரம் மீட்கச் சென்ற யுவதியைக் காணவில்லையென முறைப்பாடு-

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள புளியங்கண்டலடி கிராமத்திலிருந்து காணாமல்போன தனது மகள் பற்றி மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில், நேற்று முறையிட்டுள்ளதாக யுவதியின் தாய் கந்தசாமி தங்கநாயகம் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஏற்கெனவே வாகரைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தங்கநாயகம் மேலும் தெரிவித்துள்ளார். கந்தசாமி நிரோஜினி (வயது 20) என்ற தனது மகள் செப்டெம்பர் 22ஆம் திகதி, அடகு வைத்துள்ள மோதிரம் ஒன்றை அடகு மீட்பதற்காக வாகரை மக்கள் வங்கிக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தாய் கந்தசாமி தங்கநாயகம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தனது மகள் காணாமல்போன பின்னர் ஆறு அலைபேசி இலக்கங்களில் இருந்து நபர்கள் தொடர்புகொண்டு தெளிவற்ற முறையில் பேசுவதாகவும் காணமல்போன யுவதின் தாய் கூறியுள்ளார். அதிலொரு நபர் தான் யாழ்ப்பாணம் மானிப்பாயிலிருந்து பேசுவதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என யுவதியின் தாய் மேலும் கூறினார். இன்னொருநபர் தான் கொழும்பிலிருந்து பேசுவதாகக் கூறியதாகவும் தாய் தெரிவித்தார். இந்த முறைப்பாடு சம்பந்தமாக தாங்கள் விசாரணைகளை நடத்தவுள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு விசாரணை அதிகாரி அப்துல் அஸீஸ் குறிப்பிட்டுள்ளார்.