ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் வேண்டாமென இடதுசாரிகள் கோரிக்கை-

அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படுவதற்கு தீர்மானித்துள்ள ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பதவியில் இருக்க முடியும். அத்தோடு மூன்றில் இரண்டு பலம்கொண்ட அரசாங்கமும் இருக்கிறது. இவ்வாறிருக்கையில் அவசரமாக ஜனாதிபதி தேர்தலொன்றிற்கு செல்லத் தேவையில்லையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் அந்த செய்திகள் மேலும் கூறுகின்றன. இலங்கை கம்யூனிச கட்சியின் செயலர் சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர, லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியை சந்தித்து உரையாடியபோதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பலம் கொண்ட அரசாங்கமொன்று இருக்கிறது. அத்தோடு இரண்டு வருடம் பதவிக்காலம் உள்ளது. எனவே அந்த 2 வருட காலத்தில் இரு வரவு – செலவுத் திட்டங்களை சமர்ப்பிக்க முடியும். எனவே அதனூடாக மக்களுக்கு நல்ல நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியும். அதன் பின்னர் தேர்தலொன்றிற்கு செல்வதே சிறந்தது என அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க……

உயர் கல்வி அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்மீது நீர்த்தாரை பிரயோகம்-

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதி கட்டிடம் ஒன்றை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த கட்டிடத்தை திறக்க உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சென்றபோது பம்பகின்ன சந்தியில் அமைச்சரை வழிமறிக்கும் வகையில் மாணவர்கள் இன்றுகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மாணவர்களை அகற்றுவதற்கு என்று கூறி பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர். எனினும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விடுதி கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 112 புதிய முறைப்பாடுகள்-

காணாமற் போனோரை கண்டறியும் ஆணைக்குழு கடந்தவாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் சாட்சியங்களை பதிவு செய்யச் சென்றபோது புதிதாக 112 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இந்த முறைப்பாடுகள் தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்ய விரைவில் முறைப்பாளர்களுக்கு மற்றொரு தினம் ஒதுக்கப்படுமெனவும ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.கெலி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சாட்சியங்களை பதிவு செய்தபோது 170 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;. அத்துடன் 112 புதிய முறைப்பாடுகளும் கிடைத்ததாகவும் இது தொடர்பான சாட்சியங்களும் விரைவில் பதிவு செய்யப்படுமெனவும் ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் நாளைய தினத்திற்கான அனைத்து வழக்கு விசாரணைகளும் பிற்போடப்பட்டுள்ளன. அதற்கமைய, பிற்போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபப்படும் என மன்னார் நீதவான் அறிவித்துள்ளார். நாளை பொது விடுமுறை தினம் என்கின்ற காரணத்தால் வழக்குகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த விளக்கமறியல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த மூன்றாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுபலசேனாவுக்கு நோர்வே மறைமுகமாக ஆதரவு – திஸ்ஸ வித்தாரண-

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பிறகு பொதுபலசேனாவை ஊக்குவித்து தனது நோக்கத்தை அடைய நோர்வே நாடு மறைமுகமாக பொதுபலசேனாவுக்கு நிதி வழங்கி வருகின்றது என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொதுபலசேனா கட்சி மக்களுக்கிடையில் உள்ள இன ஐக்கியத்தை சிதைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது. தமிழ் மக்களிடம் சிநேகபூர்வமாக உள்ளது. தற்போது தமிழ் கூட்டமைப்பின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜா பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். இனப்பிரச்சினையை தீர்க்க ஆதரவு வழங்காமல் இழுத்தடிப்பதன் மூலம் பாதிக்கப்படுவது தமிழ் கூட்டமைப்பல்ல வட பகுதி தமிழ் மக்களே என்பதை அவர்கள் உணர வேண்டும். ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு வாக்கு அதிகரிப்புக்கான காரணம் மக்களின் பொருளாதாரப் பிரச்சினை, ஊழல் மோசடி, வீண்செலவுகள் போன்ற பிரச்சினைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காமை. ஐ.தே.கட்சி என்னதான் கூறினாலும் அவர்களால் ஒருநாளும் ஆட்சிக்கு வர முடியாது. அதேநேரம் இந்த நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும். என்பதில் லங்கா சமசமாஜ கட்சி உறுதியாக உள்ளது. இன்றைய ஆட்சியைக் கவிழ்க்க மேற்குலக நாடுகள் மறைமுக முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நாட்டில் ஐ.தே.கட்சியை ஆட்சியில் அமர்த்தி தங்களது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். மேற்குலக நாடுகள் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற இந்நாட்டு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என மேலும் கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு பக்கச்சார்பானது-சீ.பீ.ஏ-

மொழி பெயர்ப்பு பிழைகள் ஏற்பட்டுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பிழையானது என காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் பாரியளவில் மொழி பெயர்ப்பு பிழைகள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் குற்றம் சுமத்தியிருந்தது. கடந்த வாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற அமர்வுகளின்போது மொழிபெயர்ப்பு பிரச்சினைகள் ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தது. எனினும் இக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெறும் வளங்களைக் கொண்டே ஆணைக்குழு பணிகளை மேற்கொண்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். தமது மொழிபெயர்ப்பாளர் ஓய்வுபெற்ற பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளர் எனவும் ஏனையவர் சட்டஉதவி ஆணைக்குழுவில் பணியாற்றுபவர் எனவும் பரணகம கூறியுள்ளார். மொழிபெயர்ப்பாளர்கள் சில சொற்களை விட்டிருக்கலாம். அது விசாரணைகளில் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. காலைமுதல் மாலை வரையில் மொழி பெயர்ப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிலபிழைகள் ஏற்படுவது வழமையானதே. ஆணைக்குழு வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகளை நடத்தி வருவதனால் வெறும் பிழைகளையோ தவறுகளையோ சுட்டிக்காட்ட முடியாத தரப்பினர் சின்னச்சின்ன பிழைகளை பூதாகாரமாக்கிக் காண்பிக்க முயற்சிக்கின்றனர். காணாமல் போதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு தனியான ஓர் குழு நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது. படைத்தரப்பைச் சேர்ந்தவர்களோ அல்லது பொலிஸாரோ விசாரணைகளில் பங்கேற்பதனை அங்கீகரிக்க மாட்டார்கள் என்ற காரணத்தினால் ஓய்வு பெற்ற நீதவான்களை விசாரணைக்குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் பங்கேற்போரை புகைப்படம் எடுத்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி எமக்கு இதுவரையில் எவரும் முறைப்பாடு செய்யவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார். ஆனாலும் யுத்தக் குற்றச்சாட்டில் இருந்து அரசைக் காப்பாற்றும் வகையில் ஜனாதிபதி ஆணைக்குழு செயற்படுவதாகவும் அது பக்கச்சார்பானது என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது,