2015 ஜனவரி முதல் இரட்டை பிரஜாவுரிமை-ஜனாதிபதி-

தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இரட்டை பிரஜாவுரிமை, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய சட்டத்தொகுதியின் கீழ் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இரட்டைப் பிரஜாவுரிமை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டிருந்தது. அதேபோல், இலங்கையின் வங்கியொன்றை இத்தாலியிலும் மிலான் நகரில் இலங்கைக்கான துணை தூதரகத்தையும் நிறுவப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளர் இந்த சந்திப்பின்போது, இலங்கை பிரஜைகள் 1,200 பேர் கலந்துகொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பிடமும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை-

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாட்டை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பாதுகாப்பு படையினரிடமும் விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களில் பாதுகாப்பு படையினரிடம் விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவிற்கு இதுவரை 19ஆயிரத்து 471 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதில் 5000 முறைப்பாடுகள் பாதுகாப்பு தரப்பினராலும், 14ஆயிரத்து 471 முறைப்பாடுகள் பொதுமக்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமர்வுகளை நடத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாவது முறையாக விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்-

ஊவா மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உறுப்பினர்கள் இருவரும் இன்றையதினம் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பதுளை மாவட்டத்தில் 14,161 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட சமந்த வித்தியாரத்ன மற்றும் மொனராகலை மாவட்டத்தில் 5,785 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட ஆர்.எம்.ஜயவர்த்தன ஆகியோர் ஊவா மாகாண ஆளுநர் நந்த மெத்திவ் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதேவேளை, ஊவா தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நாளை சத்தியபிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

தியாகராஜா துவாரகேஸ்வரன் யாழ். பொலிஸாரினால் கைது-

thiyagarajah thuvarageswaranமறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரர் தியாகராஜா துவாரகேஸ்வரன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நல்லூர் செட்டித்தெரு வீதியில் வைத்து நேற்று இரவு யாழ். பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் வழித்தடலினை பொலிஸார் பார்வையிட்டபோது, ஏற்பட்ட தகராறில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ். பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு மக்களுக்கு 300 மில்லியன் இழப்பீடு-

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு இழப்பீடு வழங்கவென அரசாங்கம் இவ்வருடம் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின்போது கை,கால்கள் இழந்த மற்றும் வீடு, சொத்துக்களை இழந்த பொது மக்களுக்கு இவ்வாறு இழப்பீடு வழங்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் கூறியுள்ளது. இதன் ஒரு கட்டமாக வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி கிளிநொச்சி-இரனைமடு பகுதியில் இழப்பீடு வழங்கும் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதன்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு 130 மில்லியன் இழப்பீடு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் சஜித் பிரேமதாஸவே அடுத்த பிரதமர்-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மேலும் சில எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. ஏனைய கட்சிகளுடன் ஐதேக பேச்சுவார்த்தை நடத்தி வருவதை ஐதேகவின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் உறுதி செய்துள்ளார். எதிர்வரும் வாரங்களிலும் ஐதேக வேறு சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவே பிரதமர் என ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் தொகுதி கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனை கூறியுள்ளார். சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற யோசனையை தான் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்க உள்ளதாக ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

கோபியின் மனைவி, நாட்டைவிட்டு வெளியேற தடை-

புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் பதவிய காட்டுப்பகுதியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட கோபி என்றழைக்கப்படும் கஜீபனின் மனைவியான கஜீபன் சர்மிளா, நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சுவிட்ஸர்லாந்துக்கு நேற்று செல்லவிருந்தார். சுவிட்ஸர்லாந்துக்கு செல்வதற்கான விஸாவை அவர் வைத்திருந்தபோதும் அவரது கணவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதனால் அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நோனிஸின் வெற்றிடத்துக்கு தல்பாஹேவா-

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர்; கிறிஸ் நோனிஸ் இராஜினாமா செய்து கொண்டதையடுத்து அவரது வெற்றிடத்துக்கு மாலைதீவின் உதவி உயர்ஸ்தானிகர் சானக்க எச் தல்பாஹேவா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கிறிஸ் நோனிஸின் இராஜினாமா கடிதத்தை வெளிவிவகார அமைச்சு ஏற்றுக்கொண்டது. இதனையடுத்தே பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தின் நிர்வாகக் கடமைகளை பொறுப்பேற்குமாறு தல்பாஹேவா, வெளிவிவகார அமைச்சினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன அமெரிக்காவில் வைத்து தன்ரைன தாக்கியதாக குற்றஞ்சாட்டியே கிறிஸ் நோனிஸ் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

யாழ். இளைஞன், இறம்பொடையில் மரணம்-

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கைச்சேர்ந்த 24வயதான நாகராசா விஜலேந்திரன் என்ற இளைஞன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்றுகாலை 11.10க்கு இடம்பெற்றுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் இரசாயன ஆய்வுகூட பரிசோதகராக கடமையாற்றும் இவர், யாழ்ப்பாணத்திலுள்ள சிலருடன் இறம்பொடைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். அவருடைய சடலம், கொத்மலை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒன்பது மாதங்களில் 1,500 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்-

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் சுமார் 1,500 போலி பேஸ்புக் கணக்குகளை முடக்கியுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவிக்கின்றது. போலி கணக்குகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படுவதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அந்த நிறுவனத்தினால் போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இணையத்தளங்கள் தொடர்பாக இந்த வருடம் 1,800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதில் அநேகமானவை போலி பேஸ்புக் கணக்குகளுடன் தொடர்புபட்டு காணப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் கூறியுள்ளார். போலி பேஸ்புக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தொடர்பில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் காரியாலயத்திற்கு நுழைய முற்பட்டவர் கைது-

போலி ஆவணங்களை காண்பித்து பிரதமர் காரியாலயத்திற்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தடுப்பு பிரிவினர் இவரை கைதுசெய்துள்ளர். குறித்த நபர் வென்னப்புவ – லுணாவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச மரதனில், வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காந்தரூபன் 7ஆம் நிலை-

sarvadesa marathanil vavuniya (1)இன்று (05.10.2014) காலை கொழும்பில் எல்.எஸ்.ஆர் சர்வதேச மரதன் நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் 3000-3500 க்கு மேற்பட்ட உலக நாடுகளின் வீரர்கள் பங்குபற்றிய மேற்படி நிகழ்வில் வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் வீரரும், களனிப் பல்கலைக்கழகத்தின் மாணவனுமாகிய கணபதி காந்தரூபன் 7ஆம் நிலையை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வில் இலங்கைக்கு முதல் 10 இடங்களில் 4ஆம் மற்றும் 7ஆம் நிலைகள் கிடைத்தன. இவ் தேசிய வீரனின் வெற்றிகள் தொடர மனதார வாழ்த்துகின்றோம்.

யாழ். தொல்புரம் மத்தி சனசமூக நிலைய வாணிவிழா-

yaal tholpuram maththi sanasamuka nilaiyam (3)yaal tholpuram maththi sanasamuka nilaiyam (1)யாழ். தொல்புரம் மத்தி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற வாணி விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திரும தி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், இந்த சனசமூக நிலையம் பல ஆண்டுகாலமாக இவ்வாறான வாணி விழாவை நடாத்தி இவ் ஊர் சிறார்களதும் இளையவர்களதும திறமைகளை வெளிக்கொண்டு வருவதை பலகாலமாக நான் நன்கு அறிவேன். அது மட்டுமல்லாது நாடகங்களை மேடை ஏற்றுவதிலும் இவ் சனசமூக நிலையத்தினரின் பங்களிப்பு போற்றக்கூடிய ஒன்றாகும். இன்று எமது தழிழ் சமூகத்தின் இருப்பையும் உறுதியினையும் வெளிப்படுத்துவது எமது பண்பாடு சார்ந்த அம்சங்களே. இப் பண்பாட்டு அம்சங்களே எமது தேசியத்தின் இருப்பையும் உறுதியினையும் வெளிப்படுத்தும் மிக முக்கியமான அம்சமாகும். இந்த நாட்டில் எமது இனம் தமக்கென தனித்துவத்தினை கொண்டிருப்பதற்கான காரணமும் எமது பண்பாடு சார்ந்த அம்சங்கள் என்றே கூற முடியும். தமிழர்கள் எப்படியும் வாழலாம் என்பவர்கள் அல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற தனித்துவத்தினை கொண்டவர்கள் நாம். எமது பணபாடு உலகில் தனித்துவம் வாய்ந்த பண்பாடு இந்த பண்பாட்டின் வழிநின்று எமது இனத்தின் வரலாற்றறை உறுதிப்படுத்த வேண்டும். நடைபெற்று முடிந்த யுத்தத்தின்பின் எமது இனத்தின் இருப்பான மூல வேராகிய எமது பண்பாட்டையும் கலாச்சாரத்தினையும் சிதறடிப்பதற்காக பல நடவடிக்கைகள் திட்டமிட்டு நடாத்தப்படுகின்றது. இதன் வாயிலாக பண்மைக் கலாச்சரம் உருவாக்கப்பட்டு எமது தனித்துவத்தினை இல்லாது ஒழிப்பதே அவர்களது முக்கிய நோக்காக உள்ளது., இவ்வாறான பன்மைக் கலாச்சாரம் உருவாகும்போது எமது தனித்ததுவம் இல்லாது போகும் நிலை உருவாகும் இதுவே அவர்களது நீண்டகால நோக்காகும். இத்; தன்மையை எமது சமூகத்தில் ஊடுருவ விடாது தடுத்து எமது பண்பாடடையும் கலாச்சரத்தையும் காப்பது இன்றைய காலப்பகுதியில் உள்ள ஒவ்வைருவரதும் கடமை ஆகும். கடநத கால போராட்ட வரலாற்றில் எமது தனித்துவத்தை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காக மண்ணிற்கு விதையானவர்களின் கனவையும் இலட்சியத்தினையும் நிறைவு செய்ய எமது பண்பாட்டின் வழியில் நாம் நடை போடுவது மிக முக்கியமான ஒன்றாகும் என்றார்.