ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிப்பு-
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிணை மனு மற்றும் தண்டனையை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இந்நிலையில் பிணை மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். மதிய உணவு இடைவேளைக்காக 2.30 மணிவரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் கூடியது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பிணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். முதலில் பிணை கிடைத்ததாக வெளியான தகவல் கேட்டதும், பெங்களுர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பெரும் உற்சாகமடைந்தனர். இனிப்புகள் பரிமாறப்பட்டன. பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். அதாவது, அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங் நிபந்தனை பிணை வழங்கப்படுவதற்கு ஆட்சேபம் இல்லை என்ற நிலையில் இந்த மகிழ்ச்சி நிலவியது. இந்நிலையில் வாதம் முடிந்தபிறகு மதியம் 3.35 மணியளவில் நீதிபதி தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியபோது, இந்த வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் குற்றவாளிக்கு பிணை வழங்க எந்த வித முகாந்திரமும் இல்லை என்றும், குற்றவாளி தரப்பில் கோரப்பட்ட தண்டனைக்குத் தடை கோரும் மனு மற்றும் பிணை மனுவை நிராகரிப்பதாகவும் அறிவித்தார். ஜெயலலிதா பிணை மனு நிராகரிக்கபட்டதாக செய்தி வெளியானவுடன் அதிமுக தொண்டர்கள் பெரும் சோகம் அடைந்திருந்தனர்.
ரணில் முன்னிலையில் ஹரீன் சத்தியப்பிரமாணம்-
ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது. ஊவா மாகாண எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, பிரதான கொறடாவாக ஜே.எம். ஆனந்த குமாரசிறி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கள கூட்டமைப்பு உருவாக்கப்படும்: ஞானசார தேரர்-
தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொதுபல சேனா அமைப்பு ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், இந்நாட்டின் தலைவர்களாக மாற, பொதுபல சேனா ஒருபோதும் இடமளிக்காது என்றும் இந்நாட்டின் தலைவர்களை, பொதுபல சேனாவே உருவாக்கும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்த தேரர், இந்த நாட்டின் தலைவர்கள் திருந்துவதற்காக இக்காலப்பகுதியை வழங்குகின்றேன். அவர்கள் திருந்தவில்லையாயின், அதற்குரிய நடவடிக்கையை தான் எடுப்பதாகவும் கூறியுள்ளார்.
மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டை விநியோகம்-
துரித கதியில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்போருக்கு, மூன்று நாட்களில் அடையாள அட்டையை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. தேவையான ஆவணங்களை சரியான முறையில் அனுப்பிவைக்கும் விண்ணப்பதாரிகளுக்கு இவ்வாறு அடையாள அட்டை துரிதகதியில் வழங்கப்படவுள்ளது. அடையாள அட்டைக்காக விண்ணப்பம் செய்து அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ஆட்பதிவு திணைக்களத்தின் 011-2555616 மற்றும் 011-2506458 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு விபரங்களை அறியமுடியும். இதேவேளை, விரைவில் இலத்திரனியல் அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச கடலில் தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள்-
மியன்மார் கடலில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை மீனவர்கள் நிர்க்கதியான நிலையில் தத்தளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மீனவர்கள் பயணித்த படகுகள் புயல் காற்றில் சிக்கி மியன்மார் கடற்பரப்பில் தத்தளித்து வருவதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 35 மீன்பிடிப் படகுகள் புயலில் சிக்கியுள்ளன. இதில் 180க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயணித்துள்ளனர். மீனவர்களை மீட்பதற்கு மியன்மார் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மியன்மார் அரசாங்கத்துடன் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார். அந்த வழியாக பயணித்த கப்பல்களிடமும் உதவி கோரப்பட்டுள்ளது. இந்தப் படகுகளுடன் பயணித்த மேலும் 3 படகுகளில் பயணித்த 15 மீனவர்களை மியன்மார் அதிகாரிகள் சட்டவிரோதமாக நாட்டின் பரப்பிற்குள் பிரவேசித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறை காவலர்கள் தொழிற்சங்க நடவடிக்கை-
சிறைச்சாலைகள் சிலவற்றின் காவலர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு சிறைச்சாலையில் காவலர்கள் சுகயீன விடுமுறை அறிவித்து இன்று கடமைக்குச் செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது. சிறை காவலர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் சரீரப் பிணையில் விடுதலை-
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்ட தியாகராசா துவாரகேஸ்வரன் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ். நீதவான் முன்னிலையில் நேற்றுமாலை சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு ஏ9 வீதி வழியாக செல்லாமல், மாற்று வழியில் சென்றதால் குறித்த பஸ்ஸை பொலிஸார் நிறுத்தியுள்ளனர். இதன்போது போக்குவரத்து சட்டத்திற்கு அமைய பொலிஸார் தண்டச் சீட்டொன்றை வழங்கியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த துவாரகேஸ்வரன், பொலிஸர் வழங்கிய தண்டச் சீட்டை கிழித்தெறிந்துள்ளதுடன், அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இதற்கமைய கைதுசெய்யப்பட்ட அவர் யாழ். நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.