மஹிந்த போட்டியிட்டால் நான் போட்டியிட மாட்டேன்- சரத் பொன்சேகா-

untitledநடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்வதாகவும், அதற்காக கிடைக்கப்பெறும் விருப்பங்கள் மிகவும் பலமானதாக அமைந்திருக்கவேண்டும் என்றும் ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும்படி தன்னிடம் ஐ.தே.கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின், நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம். காரணம் மூன்றாவது தடவையாக போட்டியிடுவதற்கு சட்டபூர்வ உரிமையோ அல்லது தார்மீக உரிமையோ அவருக்கில்லை. அது ஒரு சட்டவிரோத தேர்தலாகவே கருதப்படும். எப்படியும் நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டோமாயின், அது எமது கட்சியை பாதிக்கும். எனவே கட்சியை முன்னேற்றுவதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் சரியான முறைமையை நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சரத் பொன்சேகா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக ஆட்சியை கலைக்குமாறு கோரிக்கை-

தமிழகத்தில் நிலவும் சட்ட – ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாக ஆட்சியை கலைக்கும்படிமனு கையளிக்கப்படவுள்ளதாக திராவிட முன்னேற்ற கழகம் தெரிவித்தள்ளது. இது தொடர்பில், தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மனு கையளிக்கவுள்ளதாக திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக, கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் இடம் பெற்ற போராட்டங்களை ஆய்வு செய்துள்ளதாக தி.மு.க தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழக அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டவும் திராவிட முன்னேற்ற கழகம் தயாராகி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறுவனைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டு-

Siruvanai kaapattriya iranuvam (1)சுமார் 20 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஒன்றறை வயது சிறுவனான சிவக்குமார் சிந்துஜனைக் காப்பாற்றிய இராணுவத்தினர் இருவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் கடமையாற்றும் 57வது படையணி, 3வது கஜபா ரெஜிமென் அதிகாரிகள் கடந்த 2ம்திகதி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது குழந்தை கிணற்றில் விழுந்து விட்டதாகவும், அதனைக் காப்பாற்றுமாறும் குறித்த இராணுவத்தினரிடம் உதவி கோரியுள்ளார். இதனையடுத்து கோப்ரல் விஜித பெரேரா மற்றும் கோப்ரல் டீ.எம்.லீலாரத்ன ஆகியோர் கிணற்றில் குதித்து சிறுவனைக் காப்பாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க…

இலங்கையின் மனித உரிமை தொடர்பில் ஆராய்வு –

ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 112ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமானது. இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை தொடர்பான ஐந்தாவது அறிக்கை 18 பேர் அடங்கிய குழுவினால் மீள்பரிசீலனை செய்யப்பட உள்ளது. இந்த மீள் பரீசீலனையில் பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பாக இன்றைய தினமும் ஆராயப்பட உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மீனவர் பிரச்சினை குறித்த கலந்துரையாடல்-

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் முகங்கொடுக்கும் பிரச்சினை குறித்து இந்திய பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது, இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 82 விசை படகுகளை மீட்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக மீனவ பிரதிநிதிகள் கூறுகின்றனர். ராமேசுவரத்தில் நேற்று கூடிய மீனவ கூட்டமைப்பு உறுப்பினர்களின் சந்திப்பின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.