மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரிக்கை-

சிவில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசன அமுலாக்கத்தை கண்காணிக்கும் ஐ.நா நிபுணர்கள் குழுவினது மாநாட்டில், இலங்கை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் இம்மாநாட்டில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன. தீர்க்கப்படாதுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், காணாமல் போதல்கள், தனிமனித சுதந்திரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், சர்வதேச அமைப்புகள் தாக்கல் செய்திருந்த அறிக்கைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் 48 மணித்தியாலத்துக்குள் தங்களின் விளக்கத்தை முன்வைக்குமாறு, மனித உரிமைகள் குழு இலங்கையின் பிரதிநிதிகளிடம் கோரியிருந்தது. இதன்படி இன்று பெரும்பாலும் இதற்கான விளக்கத்தை இலங்கைப் பிரதிநிதிகள் முன்வைப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

புராதன பெறுமதி பொருட்களுடன் புளியங்குளத்தில் இருவர் கைது-

புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றை கனடாவிற்கு கொண்டுசெல்வதற்கு முயற்சித்த இரண்டு பேர் வவுனியா – புளியங்குளம் பகுதியில் வைத்து அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஆட்டோவை புளியங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த பெரியமடு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதனைச் சோதனை செய்துள்ளனர். இதன்போது குறித்த ஆட்டோவிலிருந்து 5 சங்குகள் உள்ளிட்ட புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புராதன பொருட்களுடன் புளியங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாண சபைக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்-

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர்கள் வடமாகாண சபைக்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இழுவைப் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாற்றினார். பின்னர் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் மீனவர்களின் பிரச்சினைக்கான தீர்வு காணப்படுமென முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இதனால் மீனவர்கள் தமது அர்ப்பாட்டத்தினை நிறைவு செய்தனர். கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் வாக்குறுதியினை நிறைவேற்ற தவறினால், மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more