மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரிக்கை-
சிவில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசன அமுலாக்கத்தை கண்காணிக்கும் ஐ.நா நிபுணர்கள் குழுவினது மாநாட்டில், இலங்கை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் இம்மாநாட்டில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன. தீர்க்கப்படாதுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், காணாமல் போதல்கள், தனிமனித சுதந்திரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், சர்வதேச அமைப்புகள் தாக்கல் செய்திருந்த அறிக்கைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் 48 மணித்தியாலத்துக்குள் தங்களின் விளக்கத்தை முன்வைக்குமாறு, மனித உரிமைகள் குழு இலங்கையின் பிரதிநிதிகளிடம் கோரியிருந்தது. இதன்படி இன்று பெரும்பாலும் இதற்கான விளக்கத்தை இலங்கைப் பிரதிநிதிகள் முன்வைப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
புராதன பெறுமதி பொருட்களுடன் புளியங்குளத்தில் இருவர் கைது-
புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றை கனடாவிற்கு கொண்டுசெல்வதற்கு முயற்சித்த இரண்டு பேர் வவுனியா – புளியங்குளம் பகுதியில் வைத்து அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஆட்டோவை புளியங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த பெரியமடு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதனைச் சோதனை செய்துள்ளனர். இதன்போது குறித்த ஆட்டோவிலிருந்து 5 சங்குகள் உள்ளிட்ட புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புராதன பொருட்களுடன் புளியங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வடமாகாண சபைக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்-
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர்கள் வடமாகாண சபைக்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இழுவைப் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாற்றினார். பின்னர் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் மீனவர்களின் பிரச்சினைக்கான தீர்வு காணப்படுமென முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இதனால் மீனவர்கள் தமது அர்ப்பாட்டத்தினை நிறைவு செய்தனர். கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் வாக்குறுதியினை நிறைவேற்ற தவறினால், மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை வாசிக்க….
யாழ்ப்பாணத்தில் 551 பேருக்கு அரச நியமனங்கள்-
யாழ். மாவட்டத்தில் 551 பேருக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்ப கணக்கியல், வர்த்தக முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ள 423 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கின்றார். அரச திணைக்களங்களில் ஒரு வருடகால பட்டதாரி பயிலுனராக இவர்கள் நியமனம் பெற்றுள்ளநிலையில், பயிற்சிக் காலத்தின் பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்படுவார்கள் எனவும் அரசாங்க அதிபர் கூறினார். இதேவேளை, கிராம சேவையாளர் உத்தியோகஸ்தர் பதவியில் பயிற்சியை நிறைவுசெய்த 95 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், யாழ். மாவட்டத்திற்கான கிராம சேவையாளர் உத்தியோகஸ்தர் பதவிக்கு 33 புதிய பயிலுனர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிடுகின்றார். யாழ். மாவட்ட செயலகத்தில் இவர்களுக்கான நியமன கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சேது சமுத்திர திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு-
சேதுசமுத்திர திட்டதை முன்னெடுப்பதற்காக இந்திய மத்திய அரசாங்கம் 302 கோடி இந்திய ரூபாய்களை ஆரம்ப நிதியாக ஒதுக்கியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிறுவனத்துக்கு இந்த நிதி வழங்கப்படுவதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கான இந்திய அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. சேது சமுத்திர திட்டத்தினால் இலங்கை – இந்திய கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படுமென கூறப்பட்டு வருகிறது. எனினும் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டத்தை மேற்கொள்வதாக பாரதீயே ஜனதா கட்சி அரசு உறுதியளித்துள்ளது,
பாதசாரிக் கடவையில் விபத்து: மாணவன் படுகாயம்-
மட்டக்களப்பு, சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி வித்தியாலயத்தில் முதலாமாண்டில் கற்கும் சந்திவெளி ஜின்னாஹ் வீதியைச் சேர்ந்த சௌந்தரராஜா ஜெயநாதன் (வயது 6) என்ற மாணவனே விபத்தில் படுயாகமடைந்துள்ளார். இம்மாணவன், பாடசாலை முன்னாலுள்ள பாதசாரிக் கடவையை கடக்கும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்மீது மோதியுள்ளது. உடன் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லிணக்கத்துக்கு பிரித்தானியா தொடர்ந்து ஒத்துழைப்பு-
இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு தொடர்ந்தும் ஊக்கமளிக்கப்படும் என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹுகோ ஸ்வைர் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்துள்ள தமிழ் அமைப்புக்களுடன் அவர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த பிரித்தானியா அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹுகோ ஸ்வைர் மேலும் கூறியுள்ளார்.
கண்டி விபத்தில் 19பேர் காயம்–
கண்டியிலுள்ள லும்பினி கல்லூரிக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் காயமடைந்த 19பேர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தேகமவிலிருந்து கொழும்புக்கு பயணித்த தனியார் பஸ் வண்டி கண்டி – கொழும்பு வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் .சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தினைத் தொடர்ந்து இரண்டு பஸ் வண்டிகளின் சாரதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வீ.இராதாகிருஸ்ணன் பிரதி அமைச்சராக நியமனம்-
மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய வீ.இராதாகிருஸ்ணன் தாவரவியல் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பிரதி அமைச்சராக இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாகவும் நீண்டகால வாக்குறுதியின் அடிப்படையில் தனக்கு பிரதி அமைச்சு வழங்கப்பட்டுள்ளதாகவும் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வழங்கப்பட்டுள்ள பிரதி அமைச்சைக் கொண்டு மக்களுக்கு இயன்றளவு சேவை செய்யவுள்ளதாகவும் வீ. இராதாகிருஸ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்: விஷேட பஸ் சேவைகள் ஆரம்பம்-
சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே தொழிற்சங்க ஒன்றியத்தின் அமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த வேலைநிறுத்தம் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க இலங்கை போக்குவரத்துச் சபை விஷேட பஸ்கள் சேவைகளை மேற்கொண்டுள்ளன.