இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதி சந்திப்பு-
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்;டு இங்கு வருகை தந்துள்ள இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ராதாகிருஸ்ண மத்தூர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்புகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இன்றுகாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடாத்திய சந்திப்பின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது, இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது இரண்டு நாடுகளின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பு-
ஜனாதிபதித் தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி நடத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதியின் 2ஆவது பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இந்நிலையில் இரண்டாவது பதவிக்காலத்தின் நான்காம் ஆண்டு, இவ்வருடம் நவம்பர் 18ஆம் திகதி பூர்த்தியாகிறது. நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர், தேர்தல் அறிவிப்பு விடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி ஒருவர் பதவியேற்று நான்கு வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலையா அல்லது நாடாளுமன்ற தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், 2016ல் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்-
நீண்ட காலமாக வழக்குகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் ஜெயக்குமாரியை விடுவிக்க கோரி வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் வவுனியா நீதிமன்ற வளாகம் வரை சென்றபோது, நகரசபை பிரதான விதியில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். எனினும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் சென்றமையினால் அவர்களை நீதிமன்றம்வரை செல்ல பொலிஸார் அனுமதித்திருந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்திற்கு முன்பாக கூடியவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியாக சிறிது நேரம் நின்றதன் பின்னர் மீண்டும் நகரசபை மைதானத்தை வந்தடைந்தனர். இதன்போது ஜெயக்குமாரியை விடுவிக்க வேண்டும், நிபந்தனை இன்றி அரசியல் கைதிகளை விடுதலை செய், தாயையும் மகளையும் பிரிக்காதே, நீதி வேண்டும் நீதி வேண்டும் அரசியல் கைதிகளுக்கு நீதி வேண்டும், எமது வாழ்வு எமது கைகளில் அந்நியரிடமில்லை, போடாதே போடாதே பெய் வழக்கு போடாதே போன்ற வாசகங்களை ஏந்தியிருந்தனர். இப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோதராதலிங்கம், ஈ.சரவணபவன், வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், தென்னிலங்கை மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாதிரிமார், காணாமல் போனோரின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலையக கட்சிகளையும் சந்திக்கவிருப்பதாக கூட்டமைப்பு தெரிவிப்பு-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை விரைவில் சந்திக்க எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவிருந்தும் இறுதி நேரத்தில் அது பிற்போடப்பட்டிருந்தது. மீண்டும் அந்த பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சிக்கப்படுகின்ற போதும், அதற்கான திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த இணக்கப்பாடை ஏற்படுத்திக் கொள்வதற்காக, இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பை சக்திமயப்படுத்தும் நோக்கில் மலையக தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் நடத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையில் இரு பிரேரணைகள் நிறைவேற்றம்-
வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி சுவீகரிப்பு தொடர்பான விசேட அமர்வு வட மாகாண சபையில் நேற்று இடம்பெற்றது. மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நேற்றைய விசேட அமர்வு ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. காணி சுவீகரிப்பு தொடர்பாக வடமாகண முதலமைச்சரும், மாகாண காணி அமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அதன் பின்னர் மாகாண சபை உறுப்பினர்களும் வாதங்களை முன்வைத்தனர். 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் காணி அதிகாரத்தை நடைமுறைபடுத்துமாறும், வருட இறுதிக்குள் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்து மக்களை மீள்குடியேற்றுமாறும் கோருகின்ற இரண்டு தீர்மானங்களும் நேற்றையதினம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து வட மாகாண சபையின் அமர்வுகள் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு சபைத் தவிசாளரால் ஒத்திவைக்கப்பட்டது.
ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு-
ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் முன்னெடுக்கப்படுவதாக அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது. சம்பள குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு ரயில்வே நிலையப் பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நிதியமைச்சின் செயலருடன் நேற்றுமாலை இடம்பெற்ற அவசர பேச்சுவார்தையின்போது, இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக 14 நாட்கள் காலஅவகாசம் கோரப்பட்டதாக ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பட்டாளர் ஜானக பெர்னாண்டோ கூறியுள்ளார். ஆயினும், நிதியமைச்சின் செயலரின் கோரிக்கைக்கு ஒன்றிய பிரநிதிகள் உடன்படாத நிலையில், தமது பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடுவதற்கான மற்றுமொரு சந்தர்ப்பத்தை இன்று வழங்குமாறு நிதியமைச்சின் செயலரிடம் கோரியுள்ளதாக ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றிய ஏற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய தினத்திற்குள் தங்களின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமென எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தமது சங்க பிரதிநிதிகளுடன் இன்றுமுற்பகல் பேச்சு நடத்தப்படவுள்ளதாகவும் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கூறியுள்ளார்.
அகதி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-
அவுஸ்திரேலியாவின் அகதிக் கொள்கையை எதிர்த்து நாளை அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. அகதிகள் செயற்பாட்டு குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளன இலங்கையிலிருந்து சென்ற அகதிகளை நவுரு மற்றும் மானஸ் தீவுக்களில் தங்கவைத்தல் மற்றும் புதிதாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் அவர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் திட்டமும், பாரிய மனித உரிமை மீறல் செயலாகும். இதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அகதிகள் செயற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்து நாளை சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக அவ் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பகுதியில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது-
அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் கைத்துப்பாகியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை முதலாம் பிரிவை சேர்ந்த ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், மகசீன் ஒன்றும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரை சம்மாந்துறை நீதவான் நீதுமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரயில் தொழிற்சங்க வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு நீதிமன்றம் தடை உத்தரவு-
ரயில் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மனு ஒன்றை பரிசீலித்த பின்னர் நீதிமன்றத்தால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.