அவுஸ்திரேலிய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு-

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று கடந்த தினம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பேர்த்தில் வைத்து அவுஸ்திரேலிய அமைச்சர் ஜுலி பிஷப்பை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தற்போது இலங்கையிலிருந்து அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்காதவாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அகதிகளின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. இந்நிலைமையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தைகளில் அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ் ஆசனங்களை முன்பதிவு செய்ய புதிய முறை-

தெற்கு அதிவேக வீதி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில், கையடக்கத் தொலைபேசிமூலம் ஆசனங்களைப் முன்பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாதம் 21ம் திகதிமுதல் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதன்படி கண்டியிலிருந்து காலி வரையான பயணிகள் போக்குவரத்து பஸ்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பயணத்தை ஆரம்பிக்க இரு வாரங்களுக்கு முன் தொடக்கம் ஒரு மணித்தியாலங்களுக்கு முன்வரையான காலப்பகுதியில், 365 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன்மூலம் ஆசனங்களைப் பதிவு செய்ய முடியும்.

ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை நிறுவுநர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும்-

யாழ். சுன்னாகம், கந்தரோடை, ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலையின் நிறுவுநர் நினைவு தினமும், 04ஆவது பரிசளிப்பு விழாவும் 1ஆவது சிறப்பு மலர் வெளியீடும் 10.10.2014 வெள்ளிக்கிழமை நேற்று பிற்பகல் 1மணியளவில் யாழ் ஒறேற்றர் மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலையின் அதிபர் திரு.வ.நந்தீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆசியுரையினை ஸ்கந்தன் ஆலய பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ இ.சோமேஸ்வரசர்மா அவர்கள் வழங்கியதுடன், பிரதம விருந்தினராக ஸ்கந்தாவின் கொழும்பு பழைய மாணவர் சங்க உபதலைவர் டொக்டர் அ.சக்திவேல் அவரகளும், சிறப்பு விருந்தினராக உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி தி.தர்மலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் இளைப்பாறிய பிரதிஅதிபர் திரு.கனக. புவனேந்திரநாதன் அவர்கள் நினைவுப் பேருரையாற்றினார். திருமதி.க.சக்திவேல் அவரகள் பரிசில்களை வழங்கிவைத்தார். வெளியீட்டுரையினை இளைப்பாறிய இசைஆசிரியர் திரு.சி.சிவஞானராஜா அவர்கள் வழங்க, செல்வி வை.சாவித்திரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் சச்சி காலமானார்-

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை சச்சிதானந்தம் நேற்று முன்தினம் காலமானார். சச்சி ஐயா என அழைக்கப்பட்ட அவர், 1950ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தீவகம் – ஊர்காவறறுறையில் பிறந்தார். ஊடகத்துறைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே தனித்து வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழநாடு மற்றும் தினக்குரல் போன்ற பத்திரிகைகளின் ஊடகவியலாளராகவும், விநியோக முகாமையாளராகவும் சச்சிதானந்தம் அவர்கள் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். அவரின் இறுதிக்கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளது.

பொது வேட்பாளர் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம்-

தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு முன்வைக்கின்ற தீர்வுத் திட்டங்களின் அடிப்படையிலேயே, எதிர்வரும் தேர்தல்களில் எந்த தரப்புக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது. 13ஆம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம், அதனோடு தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் போன்றவற்றுக்கு வேட்பாளர்கள் வழங்குகின்ற முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி கூறியுள்ளார்.

சத்தியாக்கிரகம் இருந்த மாணவர்கள் மீது தாக்குதல்-

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுள்ள இடத்திற்கு சிலர் தீ வைத்துள்ளதோடு, குறித்த மாணவர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவ சங்க அமைப்பாளர் ரசிந்து ஜெயசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதல் காரணமாக 12 மாணவர்கள் மற்றும் இரு பிரதேசவாசிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எது எவ்வாறிருப்பினும் நேற்று இரவு 11.30 அளவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் நால்வர் சிகிச்சைபெற்று வெளியேறியுள்ளதாகவும், அறுவர் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதேவேளை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மூன்று கடைகள் தீக்கிரை-

யாழ். கொடிகாமம் பொதுச் சந்தையில் உள்ள மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளன. சாவகச்சேரி பிரதேச சபைக்குச் சொந்தமான மூன்று கடைகள் நேற்றிரவு 8.30 அளவில் தீக்கிரையானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடைகளுக்கு தீ மூட்டியவர்கள் பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். எனினும், சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. பொதுச் சந்தையிலுள்ள புடவைக்கடை, பனை உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் என்பன தீயினால் முழுமையாக எரிந்து சேதமாகியுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை பாலத்தோப்பூரில் பிள்ளையார் சிலை உடைப்பு-

திருகோணமலை மூதூர் பாலத்தோப்பூர் முருகன் கோயிலில் உள்ள பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத சிலரால் நேற்றிரவு பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் இதுவரை முறைப்பாடு செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விமான சேவைகள் தாமதம்-

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடியகல்வு மற்றும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள கணினிகளில், தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக விமான சேவைகள் தாமதம் ஏற்படும் என்று விமான நிலையத்தின் குடியகல்வு குடிவரவு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.