கொழும்பு கரையோரப் பகுதிகளில் விஷேட போக்குவரத்துத் திட்டம்-

Colombo karaiyora paguthikalilவெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான கடற்கரையோர வீதிகளில், நாளை முதல் விஷேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வார நாட்களில் மாத்திரம் மீள அறிவிக்கப்படும் வரை இந்நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி காலை 07.00 மணி முதல் 09.30 வரை வெள்ளவத்தை கடற்கரைப் பகுதிகளில் நெல்சன் வீதி சந்தியிலிருந்து சார்லிமன்ட் சந்திவரை கொழும்பு நோக்கி மட்டும் வாகனப் போக்குவரத்து இடம்பெறவுள்ளது. அதேபோல் மாலை 04.00 மணிமுதல் 06.30 வரை வெள்ளவத்தை கடற்கரை வீதியின் சார்லிமன்ட் சந்தியில் இருந்து நெல்சன்வீதி சந்தி வரை தெஹிவளை நோக்கிச் செல்லும் வாகனப் போக்குவரத்துக்கள் மட்டும் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். பாதை புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரச விடுமுறை தினங்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்நடவடிக்கை நடைமுறையில் இருக்காதென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலய தேருக்கு தீவைப்பு-

unnamedவவுனியா, இறம்பைக்குளம், n ஹாரோவப்பத்தானை வீதியில் அமைந்துள்ள அந்தோனியார் தேவாலயத்தின் தேர் இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகம் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. தேர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் கதவு திறந்திருப்பதையும் அங்கிருந்து புகை வருவதையும் பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்கு இன்று அதிகாலை வந்தவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில், தேர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, தேர் எரிந்து கொண்டிருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக தண்ணீரினால் தீயை இவர்கள் அணைத்தபோதிலும், தேரின் கீழ்ப்பகுதி எரிவடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல்போனோர் தொடர்பில் 19,500 முறைபாடுகள் பதிவு-

நாட்டில் நிலவிய யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பில் 19,500 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பகிரங்க விசாரணைகளில் பெறப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு விசேடகுழு ஒன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளீயூ. குணதாச கூறியுள்ளார். ஏழு மாவட்டங்களில் பொதுமக்களிடம் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆணைக்குழுவின் அடுத்தகட்ட பகிரங்க விசாரணை முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் யாவும் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் தேவியின் யாழ். நோக்கிய பயணம்-

சுமார் 24 வருடங்களின் பின்னர் யாழ் தேவி புகையிரத சேவை நாளை யாழ்ப்பாணம் வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் திறந்து வைக்கவுள்ளார். தற்போது கொழும்பில் இருந்து பளை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை நாளை முதல் யாழ்ப்பாணம் வரை பயணிக்கவுள்ளது. இதேவேளை நேற்று யாழ் தேவி புகையிரதத்தின் இறுதிக்கட்ட பரீட்சார்த்த சேவை இடம்பெற்றது. பளையிலிருந்து மாலை 04.00 மணியளவில் இந்த இறுதிக்கட்ட பரீட்சார்த்த சேவை ஆரம்பிக்கப்பட்டு, 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை சென்றடைந்தது.

வெடிப் பொருட்களை கொண்டுசெல்ல முயன்றவர் கைது-

அனுமதிப் பத்திரமின்றி வெடிபொருட்களை பிளாஸ்டிக் பொருட்களில் மறைத்து வைத்து கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் மட்டக்களப்பு வாழைச்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறையை சேர்ந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. 25 ஜெலன்னைட் குச்சிகளும், 5 டெட்டென்டர்கள் மற்றும் ஒரு தொகை மருந்து வெடிநூலும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ளவர் வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் அகதிக் கொள்கையில் மாற்றம்-

இலங்கை அகதிகள் தொடர்பான தமது கொள்கையில் அவுஸ்திரேலியா மாற்றத்தை கொண்டு வரும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவுஸ்திரேலிய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கையை பின்பற்றி வருகிறது. இந்த விடயம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை உள்ளிட்ட பல்வேறு சர்வதே அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே இலங்கை அகதிகள் தொடர்பான தமது கொள்கையில் அவுஸ்திரேலியா மாற்றத்தை கொண்டுவரும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது அவுஸ்திரேலியா ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவத்தை பெற முயற்சிப்பதை ஆஸி வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலியா அகதிகள் விவகாரத்தில் தம்மீதான விமர்சனங்களை மாற்றிக் கொள்ளும் நோக்கில், அகதிக் கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தூதுக்குழு இலங்கைக்கு வருகைதர ஏற்பாடு-

இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு, அடுத்தமாத முற்பகுதியில் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாகஇந்திய மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இலங்கை மற்றும் இந்திய மீன்பிடித்துறை சார் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை புதுடில்லியில் நடைபெற்றிருந்தது. இதன்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் எழுந்த முரண்பாட்டினால் அந்த பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தன. இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, இந்தியாவின் தூதுக்குழு இலங்கை வருவதாக கூறப்படுகிறது.