நெடுந்தீவுக்கு முழுமையான மின்சார விநியோகம்-

imagesயாழ். நெடுந்தீவுக்கு நாளைய தினம் முதன்முழுமையாக மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. 40 வீதமான மின்சாரமே இதுவரை நெடுந்தீவுக்கு விநியோகிக்கப்பட்டு வந்ததாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் நெடுந்தீவு கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கும் வகையில், 1,082 குடும்பங்களுக்கான மின்சாரம் விநியோகிக்ப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியாவில் குழந்தையைக் கடத்திய பெண் கைது-

வவுனியாவில் இரண்டு வயதுக் குழந்தையை கடத்தியதாக கூறப்படும் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரிலுள்ள அடகுக் கடையொன்றுக்கு அருகில் தாயுடன் இருந்த குழந்தையே, பெண்ணொருவரால் கடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குழந்தையின் தந்தையது நண்பி எனத் தெரிவித்து, குறித்த பெண் குழந்தையை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், சந்தேகநபரான பெண், குழந்தையின் தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது கணவர் பெற்றுக்கொண்ட பணத்தை மீளக் கையளிக்கும்வரை குழந்தையை ஒப்படைக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டதுடன், குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.