24 வருடங்களின் பின் யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவை-

yaldeviyaal_deevi_00624 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ் வரையான ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் வரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் முதலாவது அனுமதிசீட்டு கொள்வனவுடன் இன்று முற்பகல் 10 மணிக்கு பளையிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட ரயில் 11.15மணியளவில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. இந்த பயணத்தின்போது கொடிகாமம் மற்றும் நாவற்குழி தொடரூந்து நிலையங்களின் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஆரம்பித்து வைத்தார். ரயில் கட்டணமாக முதலாம் வகுப்புக்கு 1500 ரூபாவும், இரண்டாம் வகுப்புக்கு 800 ரூபாவும், மூன்றாம் வகுப்புக்கு 320 ரூபா அறவிடப்படவுள்ளது.

 வெள்ளவத்தை மெரைன் ட்ரைவ் வீதியில் விசேட போக்குவரத்து-

wellawatte marine driveகொழும்பு வெள்ளவத்தை மெரைன் ட்ரைவ் வீதியில் இன்றுமுதல் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நெல்சன் வீதியிலிருந்து சார்லிமன்ட் வீதி வரையான மெரைன் ட்ரைவ் வீதி ஒருவழிப் பாதையாக செயற்படுத்தப்படுகின்றது. வார நாட்களில் காலை 7மணி தொடக்கம் காலை 9.30 வரை குறித்த வீதியில் கொழும்பை நோக்கி மாத்திரமே வாகனங்களை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பிற்பகல் நான்கு மணி தொடக்கம் மாலை 6.30 வரை வெள்ளவத்தையை நோக்கி மாத்திரம் குறித்த வீதியில் வாகனங்களை செலுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீதிப் புனரமைப்பு காரணமாக இந்த விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

நவநீதம்பிள்ளையின் விசாரணை ஜனவரியில் நிறைவு-

navipillaiyin visaaranaiஇலங்கைமீதான நவநீதம்பிள்ளையின் யுத்தக்குற்ற விசாரணை ஜனவரியில் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நிகழ்ந்ததாக கூறப்படும் யுத்தக்குற்றம் மற்றும் காணாமல்போனோர் தொடர்பில், ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினர், எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி விசாரணைகளை நிறைவுசெய்து அறிக்கை தயாரிப்பரென ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரின்போது இவ்வறிக்கை கையளிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கடந்த வாரம் ஜெனீவாவில் ஒன்றுகூடி ஆராய்ந்தும் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகளை வாசிக்க….

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்கள் முன்னணி மோதல்-

நுவரெலிய கொத்மலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நுவரெலிய மாவட்ட எம்.பி வி. இராதாகிருஸ்ணன் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கான வரவேற்பு நிகழ்வும் கொத்மலை அபிவிருத்தி கூட்டமும் இன்று இடம்பெற்றன இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண உறுப்பினர் எம் ரமேஸ் தமது செயலாளர்மீது தாக்குதல் நடத்தியதாக பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மத்திய மாகாண சபை உறுப்பினர் எம் ரமேஸ் கூறுகையில், வாக்குவாதம் மோதலாக மாறியது என கூறியுள்ளார்.

157 இலங்கை அகதிகள் தொடர்பான விசாரணை-

இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்து படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற 157 இலங்கையர்கள் தொடர்பான வழக்கு நாளை அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது இந்த விசாரணையின்போது அவுஸ்திரேலிய கடல் எல்லைக்கு அப்பால் வைத்து அகதிகளை இடைமறித்து நாடு கடத்தமுடியுமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. கடந்த ஜூன் 13ஆம் திகதி இந்த அகதிகள் படகு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கிறிஸ்மஸ்தீவுக்கு அப்பால் வைத்து இடைமறிக்கப்பட்டது. இதன்பின்னர் சுமார் ஒரு மாதக்காலம் குறித்த அகதிகள் நடுக்கடலில் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டனர் பின்னர் அவர்கள் நாவுறு தீவுக்கு அனுப்பப்பட்டனர் இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள விசாரணையில பங்கேற்பதற்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அவுஸ்திரேலிய நீதிமன்றம் முன்னிலையாகவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மனித கடத்தல் தொடர்பில் இலங்கை – இந்தோனேஷியா பேச்சு-

மனித கடத்தல்களை முடக்கும் வழிகள் பற்றியும் இருநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இலங்கை மற்றும் இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு ஜகார்த்தாவில் இன்றையதினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அகில இலங்கை வைத்திய சங்கம் ஆர்ப்பாட்டம்-

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை வைத்திய சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து பேரணியாக சென்று சுகாதார அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.