அமெரிக்க எமி விருதுக்கு ‘மோதல் தவிர்ப்பு வலயம்’ பரிந்துரை-
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய மோதல் தவிர்ப்பு வலயம் விவரணப்படம் அமெரிக்காவின் உயர் தொலைக்காட்சி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விவரணப்படம் நேற்று 2014ஆம் ஆண்டின் சர்வதேச ´எமி´ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விருதை பெறும் விவரணப்படம் குறித்த அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி நியூயோர்க்கில் வெளியிடப்படவுள்ளது. மனித குலத்துக்கு எதிரான கொடுமைகளை, போர்க்குற்றங்களை சாட்சியங்களுடன் இந்த விவரணப்படம் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக எம்மி விருதுகளை அமெரிக்கா வழங்கி வருகின்றது. 10 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுப் பட்டியலில் சிறந்த ஆவணப் படங்களுக்கான பிரிவில் ´மோதல் தவிர்ப்பு வலயம் விவரணப்படமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி-
சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறை ஊழியர்களுக்கு இதுவரை தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை எனவும், இதனால் தூதர் பிரதேசங்களில் இருந்து சேவைக்குவரும் சிறை ஊழியர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார். அதனால் சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் அவரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை வாசிக்க…
கொழும்புத் துறைமுக வாகன உதிரிப்பாக களவு தொடர்பில் இருவர் கைது-
கொழும்புத் துறைமுக வாகன பிரிவில் வாகன உதிரிபாகங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுங்கப் பரிசோதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகப் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதால் தன்னால் கருத்து கூற முடியாது என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துக்களால் 717 பேர் உயிரிழப்பு-
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் 717 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவிக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் விபத்துக்களால் 2,300 பேர் காயமடைந்ததாக அதன் தலைவர் காமினி ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார். இரவு வேளைகளில் மின் விளக்கின்றி, சைக்கிள் ஓட்டுவது விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். அத்துடன், பிரதான மார்க்கங்களுக்கு அருகில் பயணிக்கும் விலங்குகளும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவிக்கின்றது.
வெளிநாட்டு சட்டவிரோத பணம்-
இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை எடுத்துசென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க வானூர்தி மையத்தில் வைத்து இந்த மூவரும் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் குறித்த மூவரும் சிங்கப்பூர் வானூர்தியில் ஏறுவதற்குத் தயாரானபோதே கைதுசெய்யப்பட்டுள்ளனர் இவர்களிடம் இருந்து 101ஆயிரம் யூரொக்கள், 37ஆயிரம் பிராங்க் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்;கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச செயலகம், நெடுந்தீவு பிரதேச செயலக பணிமனை திறந்துவைப்பு-
வடபகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ். வேலணை பிரதேச செயலகக் கட்டடத்தொகுதி மற்றும் மின்சார சபையின் கட்டடம் ஆகியவற்றை இன்று திறந்து வைத்துள்ளார். கேஜார் நிறுவன நிதித் திட்டத்தின்கீழ் 50 மில்லியன் செலவில் வேலணை பிரதேச செயலக கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் புதிய பணிமனையையும் இன்று திறந்து வைத்துள்ளார்.
பட்டினியில் இலங்கை முன்னேற்றம்-
பூகோள பட்டினி சுட்டியில் கடந்த வருடம் 43ஆவது இடத்திலிருந்த இலங்கை, இவ்வருடம் 39ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இலங்கையில் பட்டினி கிடக்கும் மக்களில் தொகை குறைந்துள்ளபோதும் கடுமையான பட்டினி மட்டம் இன்னும் காணப்படுகிறது.