19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம்-

19 aavathu arasiyalamaippuஒளிமயமான நாளை என்ற தேசிய சபையினால் தயாரிக்கப்பட்ட 19வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் நேற்று மக்கள் விமர்சனத்திற்காக வெளியிடப்பட்டது. இதன்போது, உரையாற்றிய அதன் இணைப்பாளர் அத்துரலியே ரத்தன தேரர், யாப்பு சீர்த்திருத்தப்படாமல் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது ஏற்புடையதல்லவென குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான, தினேஷ் குணவர்த்தன, வாசுவேத நாணயக்கார, திஸ்ஸ வித்தாரன, பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தவிர, எதிர்கட்சிகள் சார்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, விஜேதாச ராஜபக்ச, சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட அரசியலமைப்பு சீர்த்திருத்தம் பலவற்றிற்கு 19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மூலம் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், ஜனாதிபதி பதவி ரத்து செய்யப்படும் என அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணைப்பு-

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி, நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும் பிரதமரை நியமிக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கான நகல்வரைபை வெளியிட்டு வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தூய்மையான நாளைக்கான தேசிய சபை என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தூய்மையான நாளைக்கான தேசிய சபை அமைப்பின் யோசனையை ஏற்றுக்கொள்ளாமல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அவரை தோல்வியடைய செய்வதற்கான சகலவற்றையும் செய்வேன் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் தனதுரையில் சூளுரைத்தார்.

அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் …

• ஜனாதிபதி அரச தலைவராக இருப்பார் என்பதுடன் பிரதமர் அரசாங்கத்தின் தலைவராக இருக்கவேண்டும்.

• ஜனாதிபதி இன்னும் அரசியல் கட்சியின் தலைவராக இல்லாமல் நாட்டின் ஐக்கியம் அல்லது ஒருமைப்பாட்டுக்கு அல்லது அழிவுக்கான நிலைமையொன்று ஏற்பட்டால் நாட்டை பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படல் வேண்டும்.

• அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை20-25க்கு மட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 35க்கும் அதிகமாக இருகக்கூடாது.

• அமைச்சுகளுக்கான நிறைவேற்று குழு முறைமையை ஏற்படுத்தல் வேண்டும்.

• நாடாளுமன்ற தேர்தல் முறைமையில் விருப்பு வாக்கு முறைமையை நீக்குவதற்காக தேர்தல் முறைமை மாற்றப்படல் வேண்டும்.

• அரசியலமைப்புக்குள் சுயாதீன ஆணைக்குழுக்கள் சட்டமாக்கப்படல் வேண்டும். அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக பிரதமர்,சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒருவர் மற்றும் நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்குகளினால் ஐவர் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.

• இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை நாட்டுக்குள் அமுல்படுத்தல்.

ஆகிய யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.