யாழ்தேவி மூலம் இரண்டு நாட்களில் 9 லட்சம் ரூபாய் வருமானம்-
24 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட யாழ்தேவி ரயில் கடந்த இரண்டு நாட்களில் 09 லட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் இன்று தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி பளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி புகையிரத சேவையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத சேவைகளில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவையில், 6 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைக்கப்பட்டுள்ளதாக நா.தபானந்தன் கூறியள்ளார். அந்தவகையில், இரு தினங்களும் 9 லட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதிவிசேட இருக்கைகளுக்கான பதிவுகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்படுவதால் அதிவிசேட இருக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செந்தில் தொண்டமான் உள்ளிட்ட நால்வர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்-
ஊவா மாகாண சபை அமைச்சர்களாக சசீந்ர ராஜபக்ஷ, செந்தில் தொண்டமான், அநுர விதானகமகே, சாமர சம்பத் தஸநாயக்க, குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சசீந்ர ராஜபக்ஷ – நிதித் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி, காணி, கலாசார, சமூகநல, கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கட்டுமாண அமைச்சராகவும், செந்தில் தொண்டமான் – வீதி அபிவிருத்தி, வீடு, நீர்வள மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும், அநுர விதானகமகே – விவசாய, நீர்பாசன, விலங்கு உற்பத்தி, மீன்பிடி, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், சாமர சம்பத் தஸநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், மின்சார எரிசக்தி, சிறு கைத்தொழில் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சராகவும், குமாரசிறி ரத்நாயக்க – சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் பாதுகாப்பு மகளிர் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
புலிகள்மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கம்-
புலிகள் இயக்கம்மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ் வழக்கில் புலிகள் சார்பாக நெதர்லாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இவ் வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின்போது 2009ஆம் ஆண்டுக்குப் பின் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை. தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் புலிகள் போராட விரும்புகின்றனர் என வாதிடப்பட்டது. மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புலிகள்மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை என கூறுமளவிற்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்கறிஞர் கோப் வாதிட்டார். இன்று இவ் வழக்கில் புலிகள் இயக்கம்மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உலக உணவு தினம் அனுஷ்டிப்பு-
உலக உணவு தினம் வருடந்தோறும் ஒக்டோபர் 16-ம் திகதி உலக நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. 1945-ம் ஆண்டில் இதே நாளில் ஐ.நா நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவுகூர ஐநா இந்நாளைச் சிறப்புநாளாக அறிவித்தது. நவம்பர் 1979-ம் ஆண்டில் இவ்வமைப்பின் 20-வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150-ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் 80 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம். அதிகபட்சமாக ஆப்ரிக்காவில் தான் 20சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இலங்கையில் இருக்கும் சிறைக்கூடமே தமிழர்களுக்கான நரகமாகும்-அனந்தி சசிதரன்-
நரகம் என்ற ஒன்று இருப்பது என்றால் அது இலங்கையில் தமிழர்களுக்காக இருக்கும் சிறைக்கூடம் மட்டுமே என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, போர் முடிவடைந்து சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் சந்தேகத்தின், பேரில் கைது செய்யப்பட்டு வருடக் கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யவேண்டும் எனப் பல முறை வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியும் எந்தவொரு முன்னேற்றமும் காணப்பட்டிருக்கவில்லை. சிறையில் திடீர் திடீரென தமிழ் அரசியல் கைதிகள் மரணமடைவதும் அதற்காக அரச தரப்பினில் நியாயங்கள் கூறப்படுவதும் உண்மைகள் மறைக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்ற விடயமே. Read more