பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் யாழ். ஆயர் சந்திப்பு-

பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் அவர்களுக்குமிடையில் யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. பிரித்தானிய உயர்த்தானிகராக பதவியேற்ற பின்னர் முதன்முதலாக யாழிற்கு நேற்று விஜயம் செய்த உயர்ஸ்தானிகர் யாழில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது, யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களையும் சந்தித்தார். அச்சந்திப்பின்போது, ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மற்றும் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு என்ற பெயர் பறிபோன பின் யோசிப்பதில் பயன் இல்லை – செல்வம் எம்பி-

imagesகூட்டமைப்புக்கென ஒரு யாப்பு எம்மிடம் வரையப்பட்டால் அதனை யாரும் கொண்டு செல்லமுடியாது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நேற்று வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக்கட்சி , டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகியன பதிவு செய்வதில் விரைவாக செயற்படாது விட்டால் தேர்தல் ஆணையாளர் கூறியது போல் தை மாதத்திற்கு பின்னர் இருந்து யோசிப்பதில் பயன் இல்லை. தேர்தல் ஆணையாளரும் பலர் இப் பெயரை கேட்பதனால் நீங்கள் உங்கள் செயற்பாட்டை செய்யாது விட்டால் கூட்டமைப்பின் பெயரை யாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை கூறியுள்ளார். ஆகவே நாம் அவ்விடயத்தில் துரிதமாக செயற்பட வேண்டும். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்ய வேண்டுமென அதன் தலைவர் ஒத்துக்கொண்டிருக்கின்றார். இது தொடர்பில் நாம் வலுவாக செயற்படவுள்ளோம். ஆகவே ஒற்றுமையாக இந்த பதிவை செய்து முடிப்போம். இதேவேளை அண்மையில் மாவை சோதிராஜா தெரிவித்த கருத்தையும் இரா. சம்பந்தன் அவர்கள் மறுத்துள்ளார். அவர் அவ்வாறு தெரிவிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். இவ்விடயத்திலே திருமலையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட குழுவில் மாவை சேனாதிராஜாவும் உள்ளடங்கியுள்ளார். இந்நிலையில் அவர் எந்த ரீதியில் இவ்வாறு தெரிவித்தார். என்பதனை அவரிடமே கேட்க வேண்டும். இந்நிலையில் ஆனந்தசங்கரிபோல் மற்றவர்களும் கட்சியை கொண்டுபோக விடமுடியாது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் தேர்தலை முன்னிலைப்படுத்தி கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. வலுவான ஒரு யாப்பு எம்மிடம் வரையப்பட்டால் அதனை யாரும் கொண்டு செல்லமுடியாது என்பது எனது கருத்து. அந்தவகையில் மக்களின் ஆணையானது நாம் ஒன்றுமையாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற செயற்பாட்டோடும் நாங்கள் செயற்பட வேண்டும் என்பதேயாகும். அந்த ஆணையை தொடர்ச்சியாக எமது மக்கள் காட்டிவருகின்றார்கள். ஆகவே அந்த ஆணையையும் சிந்தனையையும் நாம் எந்தக்காலத்திலும் புறந்தள்ள முடியாது. வருகின்ற தேர்தலிலும் தனித்தனியாக தேர்தலில் கட்சிகள் போட்டியிட்டால் மக்கள் எம்மை புறந்தள்ளுவார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது. இதேவேளை மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சின்னத்திற்காகவே வாக்களிக்கின்றார்கள் என்பதற்காக அந்த கட்சியும் அந்த சின்னமுமே பெரியது என நினைப்பது தவறானதாகும். இந்நிலையில் எமக்கிடையில் உள்ள முரண்பாடுகளை வெளியில்காட்டி எமது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதறடிக்க விரும்பவில்லை. ஆகவே மாவை சேனாதிராஜாவுடனும் பேசி நாம் சளைக்காமல் ஒற்றுமையாக வலுவான கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான செயற்பாட்டை நாம் விரைவாக முன்னெடுப்போம். அதனூடாக எமது மக்களின் இலச்சியத்தினையும் நிரந்தர தீர்வையும் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகவுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் கிளிநொச்சி உரை தொடர்பாக அவரிடம் கேட்டபோது, அரசாங்கமும் ஜனாதிபதியும் தமிழ் மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் நாயை விடவும் மோசமாகவே கருதுவதாக தனது சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதி தனது வாயில் இருந்து மிக மோசமான வார்த்தையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களால் தெரிவு செயய்ப்பட்ட அமைப்பாக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அமைப்பாகவே உள்ளது. இந் நிலையில் கூட்டமைப்போ தமிழ் மக்களோ எடுப்பார் கைப்பிள்ளையாக ஜனாதிபதி எண்ணக்கூடாது. இந் நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் நாம் அவரது உரையை வன்மையாக கண்டிக்கின்றோம். இன்று நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது, கடல் வளத்தில் நாம் தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது, எமது மக்கள் அவாகளின் உறவினர்கள் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள நிலையில் எமது பூர்வீக நிலங்கள் பாதுகாப்பு வலயம் என தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு குவிக்கப்பட்டுள்ளது. அதிகளவான இராணுவத்தினர் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு எமது மக்கள் இந்த தேசத்தில் நசுக்கப்படுகின்ற நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந் நிலையில் அவர் போகின்ற இடங்கள். அவர் செய்கின்ற வேலைகள், அவர் ஜனாதிபதி தேர்தலுக்காக செய்யும் முஸ்தீபுகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பங்கேற்க வேண்டும் என நினைப்பதற்கு தமிழ் மக்களோ கூட்டமைப்போ எடுப்பார் கைப்பிள்ளை இல்லை. சிங்கள குடியேற்றங்கள் செய்யப்படவேண்டும் என்ற ரீதியில் அவர் உரையாற்றியுள்ளார். அந்தவகையில் பார்க்கும்போது எமது பூர்வீகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை அரசு திட்டமிட்டு செய்கின்றது. அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்கு குறைந்துவிடும் என்ற பயத்தினால் தற்போது தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் செயற்பாட்டில் ஜனாதிபதி இறங்கியுள்ளார். தமிழ் மக்களுக்கு இருபதனாயிரம் காணி துண்டுகளை வழங்குவது என்ற நிலை காணப்பட்டாலும் அதன் பின்னால் சிங்கள குடியேற்றங்கள் அமையப்போகின்றது என்ற ஐயப்பாடு எம்மிடம் இருந்தது. அத்தடுன் எம்மையும் அழைத்து தனது செயற்பாட்டை நிறைவேற்றி எமது ஒத்துழைப்பும் கிடைத்தாக காட்ட அவர் எண்ணியுள்ளார் எனபதனை நாம் ஊகித்துக்கொண்டோம். இவ்வாறான நிலைகளை நாம் கருத்தில் கொண்டே அவரது வருகையில் நாம் கலந்து கொள்வதை புறக்கணித்திருந்தோம். இதேவேளை தமிழ் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டது போன்று சிங்கள மக்களும் குடியேற்றம் செய்யப்படவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உண்மையில் எமது மக்கள் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தமது பூர்வீக நிலங்களை பறிகொடுத்து வாழும் நிலையில் இவ்வாறான கருத்தை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இவ்வாறான செயற்பாட்டை நாம் எதிர்ப்போம் என்பதுடன் போராடுவோம்.