யாழ்தேவி மூலம் இரண்டு நாட்களில் 9 லட்சம் ரூபாய் வருமானம்-

yaldevi24 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட யாழ்தேவி ரயில் கடந்த இரண்டு நாட்களில் 09 லட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் இன்று தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி பளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி புகையிரத சேவையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத சேவைகளில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவையில், 6 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைக்கப்பட்டுள்ளதாக நா.தபானந்தன் கூறியள்ளார். அந்தவகையில், இரு தினங்களும் 9 லட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதிவிசேட இருக்கைகளுக்கான பதிவுகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்படுவதால் அதிவிசேட இருக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செந்தில் தொண்டமான் உள்ளிட்ட நால்வர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்-

senthilஊவா மாகாண சபை அமைச்சர்களாக சசீந்ர ராஜபக்ஷ, செந்தில் தொண்டமான், அநுர விதானகமகே, சாமர சம்பத் தஸநாயக்க, குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சசீந்ர ராஜபக்ஷ – நிதித் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி, காணி, கலாசார, சமூகநல, கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கட்டுமாண அமைச்சராகவும், செந்தில் தொண்டமான் – வீதி அபிவிருத்தி, வீடு, நீர்வள மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும், அநுர விதானகமகே – விவசாய, நீர்பாசன, விலங்கு உற்பத்தி, மீன்பிடி, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், சாமர சம்பத் தஸநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், மின்சார எரிசக்தி, சிறு கைத்தொழில் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சராகவும், குமாரசிறி ரத்நாயக்க – சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் பாதுகாப்பு மகளிர் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

புலிகள்மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கம்-

imagesCA47OAWZபுலிகள் இயக்கம்மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ் வழக்கில் புலிகள் சார்பாக நெதர்லாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இவ் வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின்போது 2009ஆம் ஆண்டுக்குப் பின் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை. தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் புலிகள் போராட விரும்புகின்றனர் என வாதிடப்பட்டது. மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புலிகள்மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை என கூறுமளவிற்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்கறிஞர் கோப் வாதிட்டார். இன்று இவ் வழக்கில் புலிகள் இயக்கம்மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு தினம் அனுஷ்டிப்பு-

Pஉலக உணவு தினம் வருடந்தோறும் ஒக்டோபர் 16-ம் திகதி உலக நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. 1945-ம் ஆண்டில் இதே நாளில் ஐ.நா நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவுகூர ஐநா இந்நாளைச் சிறப்புநாளாக அறிவித்தது. நவம்பர் 1979-ம் ஆண்டில் இவ்வமைப்பின் 20-வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150-ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் 80 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம். அதிகபட்சமாக ஆப்ரிக்காவில் தான் 20சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கையில் இருக்கும் சிறைக்கூடமே தமிழர்களுக்கான நரகமாகும்-அனந்தி சசிதரன்-

ilankaiyil irukkum siraikoodameநரகம் என்ற ஒன்று இருப்பது என்றால் அது இலங்கையில் தமிழர்களுக்காக இருக்கும் சிறைக்கூடம் மட்டுமே என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, போர் முடிவடைந்து சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் சந்தேகத்தின், பேரில் கைது செய்யப்பட்டு வருடக் கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யவேண்டும் எனப் பல முறை வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியும் எந்தவொரு முன்னேற்றமும் காணப்பட்டிருக்கவில்லை. சிறையில் திடீர் திடீரென தமிழ் அரசியல் கைதிகள் மரணமடைவதும் அதற்காக அரச தரப்பினில் நியாயங்கள் கூறப்படுவதும் உண்மைகள் மறைக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்ற விடயமே. இலங்கை தமிழரசுக்கட்சி மாநாட்டின்போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இன்றுவரை எந்த ஆக்கபூர்வமான பதிலும் கிட்டியிருக்கவில்லை. சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் படும் துன்பம் கொஞ்சம் நஞ்சமல்ல. சிலமாதங்களுக்கு முன்பு அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் சிங்கள கைதிகளுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டால் சிறை உத்தியோகத்தர்களால் தமிழ் கைதிகள் மட்டும் தாக்குதலுக்குள்ளாகியமை பற்றி நாம் பத்திரிகைகள் வாயிலாக அறிந்தோம். எனினும் தமிழ் அரசியல் கைதிகள் அமைதியாக தங்கள் விடுதலையை நோக்கி காத்திருந்தபோது சிங்கள கைதிகளுடன் அவர்களை சிறைச்சாலை அதிகாரிகள் அடைத்து வைத்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை 8 நாட்கள் நடத்தியதை தொடர்ந்து அவர்களை பழைய படியே தமிழ் அரசியல் கைதிகளின் சிறையில் அடைப்பதாக கூறிவிட்டு இன்றுவரை அந்த வாக்குறுதியை சிறை அதிகாரிகள் நிறைவேற்றி இருக்கவில்லை என்பதை அறியமுடிகிறது. சட்டமும் நீதியும் இந்தநாட்டில் தமிழர்களுக்கு மட்டும் புதைகுழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டதா? மனிதம் மரணித்த பூமியில் நீதியையும் நியாயத்தையும் நாங்கள் எங்கே தேடமுடியும்? நரகம் என்ற ஒன்று இருப்பது என்றால் அது இலங்கையில் தமிழர்களுக்காக இருக்கும் சிறைக்கூடம் மட்டுமே என்பதே உண்மையாகும். போதிய உணவோ மருத்துவமோ சுகாதார வசதியோ சட்ட உதவியோ இன்றி நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுவதை நாம் அனைவரும் கண்டும் காணாது மௌனம் காப்பது மனவேதனையை அளிக்கிறது. தமிழ் அரசியல் கைதிகள் பாரபட்சமாக சிறையில் அடைக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது, சித்திரவதை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அத்துடன் காலவரையறை விதிக்கப்பட்டு சகல தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களின் நல்லெண்ணத்தை இந்த அரசு பெற்றுக் கொள்ளவேண்டுமானால் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அவ்வாறில்லாமல் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் மக்களை அணி திரட்டி அகிம்சை வழி போராட்டங்களை, முன்னெடுக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவிப்பதோடு அனைத்து தமிழ் உறவுகளையும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுங்கள் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

இரணைமடு நன்னீர் மீன்பிடியாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு-

கிளிநொச்சி, இரணைமடு குளத்தில் நன்னீர் மீன்பிடியாளர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்க விதிமுறைகளுக்கு புறம்பாக சிலர் மீன்பிடியில் ஈடுபடுவதுடன், தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக தெரிவித்து நேற்றையதினம் மாலை முதல் நன்னீர் மீனவ தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். தமது கோரிக்கைகளுக்கு அமைய பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, நேற்றுமாலை முதல் தொழிலுக்கு திரும்பவுள்ளதாக நன்னீர் மீன்பிடியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீர்மானமற்ற நிலையில் கனடாவில் இலங்கை அகதி-

கனடாவில் அகதி அந்தஸ்த்து பெற்ற இலங்கை தமிழர் தீர்மானமற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கனடாவின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கோகுலரத்னம் அருளானந்தம் என்கிற குறித்த இலங்கையர், கனடாவில் பாதுகாப்பு வீசாவை பெற்றுள்ளார். அதனால் அவரை இலங்கைக்கு நாடுகடத்த முடியாது. எனினும் அவர் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே அவரால் கனடாவில் நிரந்தர குடியுரிமையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மீண்டும் குடிவரவுத் துறை திணைக்களத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று கனடா தகவல்கள் கூறுகின்றன.

ஐரோப்பிய தடை குறித்து பேச்சுவார்த்தை-

untitled eஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக, இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எ.எப்.பி. இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளின் போது சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்று தெரிவித்து, இலங்கையில் இருந்து மீனினங்களை இறக்குமதி செய்வதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டுமுதல் இது தொடர்பில் எச்சரிக்கப்பட்டு வந்தநிலையில், இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் இத் தடை தொடர்பில் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சு கூறியுள்ளது.

ஜனாதிபதி அமைச்சர் விமல் வீரவன்ச சந்திப்புக்கு ஏற்பாடு-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் நாளையதினம் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நாளை முற்பகல் 11 மணிக்கு இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுமென கூறப்படுகிறது.