தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிணையில் செல்ல அனுமதி-
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு, இந்திய உயர் நீதிமன்றம் இன்றுபகல் நிபந்தனையுடனான பிணையை வழங்கியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு பிணை கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே பெங்களுர் மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மீள்முறையீடு செய்யப்பட்டது. இதனை இன்று விசாரணை செய்த இந்திய உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் தரப்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ காரணங்களை கருதி, அவரை நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்தமை தொடர்பான வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க பொதுச்செயலளருமான ஜெயலலிதா ஜெயராம், அவரின் தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினர்களான வி.சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகளாக காணப்பட்டதுடன் இவர்கள் நால்வருக்கும் 4 வருட சிறைத்தண்டனை விதித்து பெங்களுர் தனி நீதிமன்ற நீதிபதி ஜோன் மைக்கல் டி குன்ஹா கடந்த மாதம் 27 திகதி தீர்ப்பளித்திருந்தார். ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் இன்று பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிபதி அளித்த தீர்ப்பையும் இந்திய உயர் நீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் இடாப்பில் இருந்து பொன்சேகா பெயர் நீக்கம்-
ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை 2014 வாக்காளர் இடாப்பிலிருந்து அகற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாஸ இதனை ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்கொடி வழக்கு மற்றும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் 3 வருட சிறைத்தண்டனையும், அதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் அவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இத் தீர்ப்புகளின் காரணமாக சுமார் 3 வருடங்கள் சரத் பொன்சேகா சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார். எனினும் அவரது சிறைத்தண்டனை முடிவடைவதற்கு இரு மாதங்கள் இருக்கையில் அரசியலமைப்பின் 34வது பிரிவின்மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி, பொதுமன்னிப்பின்கீழ் சரத் பொன்சேகாவை விடுதலை செய்திருந்தார்.
தந்தையைக் காணவில்லையென மகள் முறைப்பாடு-
மட்டக்களப்பு – மயிலம்பாவெளிப் பகுதியிலிருந்து காணாமல்போன தனது வயோதிபத் தந்தையை கண்டுபிடித்துத் தருமாறு, மகள் ஜோசப் சிறியானி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்துள்ளார். ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு வி.சி.றோட் கொலனியைச் சேர்ந்த இராமசாமி ஜோசப் (வயது 73) என்பவர், கடந்த 31.12.2013அன்று காணாமல் போனதாகவும், இது விடயமாக உடனே ஏறாவூர் பொலிஸில் முறையிட்டதாகவும், எனினும் இதுவரை தேடிப்பார்த்தும் தந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் மகள் சிறியானி தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். சம்பவதினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற தந்தை இதுவரை என்ன ஆனார் என தெரியவில்லை எனவும் அவர் கூறினார். இம் முறைப்பாடு சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்துமென மட்டு. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி அப்துல் அஸீஸ் கூறியுள்ளார்.
பாதுகாப்புச் செயலரின் இந்திய விஜயம்-
இந்தியா செல்லவுள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தியா- இலங்கை இடையேயான பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றபோது இந்திய- இலங்கை பாதுகாப்புத்துறை செயலர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே அடுத்தவாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த பயணமானது பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது இந்திய பயணமென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் – மன்னிப்பு சபை
இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுகளை, நியுசிலாந்து அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை இதனைக் கோரியுள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபையில் நியுசிலாந்து புதிய நிரந்தர அங்கத்தும் இல்லாத நாடாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்பு சபை இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை விடயங்கள் குறித்து பாதுகாப்பு சபை போதுமான அளவில் செயற்படவில்லை. இந்த நிலைமையை நியுசிலாந்து மாற்ற வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று-
உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. வறுமை ஒழிப்புத் தினம் 1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பிரகாரம் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பட்டினியில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நாளாக வருடந்தோறும் உலகளாவிய ரீதியில் இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. உலகில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்மேடு சரிந்து விழுந்ததில் இரு இராணுவத்தினர் உயிரிழப்பு-
கந்தளாய் – கோமரங்கடவல பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் அதனுள் புதையுண்டு இரு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த இராணுவத்டதினர்மீதே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இவ்விபத்து இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.