யாழ். கோண்டாவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா-2014-
யாழ். கோண்டாவில் இந்துக்கல்லூரியின பரிசளிப்பு விழா-2014 இன்றுமுற்பகல் 10 மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. தவகீஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சுவாமிஜீ பிரமச்சாரி ஜாக்ரத சைதன்ய (சின்மயா மிஷன்) ஆச்சாரியார் அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. கந்தையா கேதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களும் பெருமளவாக இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இன்றைக்கு பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பெரிய பாடசாலைகளை நோக்கி அனுப்புகின்ற ஒரு மனநிலையிலேயே இருக்கின்றார்கள் இதனால் சிறிய பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் தொகை குறைந்துகொண்டே வருகி;ன்றது. சமுதாயம் இன்று இருக்கின்ற நிலையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளை பெரிய பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக வெகு தொலைவிற்கு அனுப்பிவிட்டு பிள்ளைகள் திரும்பி வரும்வரையில் நீங்கள் பயந்து கொண்டிருக்கும் நிலை உள்ளது ஒரு விடயமாகும். மற்றையது உங்கள் சொந்த ஊர்ப் பாடசாலைகளினுடைய வளர்ச்சியினையும் அது தடுக்கின்றது. ஆகவே இதைவிடுத்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் ஊர்ப் பாடசாலைகளிலேயே கல்வி கற்பிப்பதன்மூலம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி, பாடசாலைகளின் வளர்ச்சி, கிராமத்தின் கல்வி வளர்ச்சி என்பவற்றை உறுதிசெய்து கொள்ள முடியும். இப்போது கிராமிய பாடசாலைகளில் இருக்கின்ற அதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பிள்ளைகளின் கல்வியிலே மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார்கள். ஆகவே நீங்கள் கூடுமானவரையில் உங்கள் பிள்ளைகளை உங்களுடைய கிராமத்துப் பாடசாலைகளுக்கு அனுப்புவதன்மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியையும், இந்தப் பாடசாலைகளின் வளர்ச்சியினையும் உங்கள் கிராமத்தின் கல்வி வளர்ச்சியினையும் உறுதிசெய்யுங்கள் என்று தெரிவித்தார்.