குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலய பரிசளிப்பு விழா, சரஸ்வதி சிலை திறந்துவைப்பு-
யாழ். குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், சரஸ்வதி சிலை திறப்பு விழாவும் நேற்றுமாலை (17.10.2014) நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. தம்பிராஜா தவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வைத்தியக்கலாநிதி கணேசலிங்கம் சுஜந்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. தில்லைநாதன் தர்மலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்வில் ஆசியுரையினை சைவாகம ஜோதி சி.கிருஷ்ணசாமி குருக்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சரஸ்வதி சிலை திறப்புவிழா இடம்பெற்றது. சிங்கப்பூரில் வசிக்கின்ற குப்பிளான் விக்னேஸ்வரா வித்தியாலய பழைய மாணவர் திரு. கிருஷ்ணர் அவர்கள் இப்பாடசாலையில் சரஸ்வதி சிலையினைக் கட்டுவதற்கு அனுசரணை வழங்கி உதவியிருந்தார். புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சரஸ்வதி சிலையினை திறந்து வைத்து உரையாற்றினார். தொடர்ந்து பிள்ளைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது. அத்துடன் சிங்கப்பூரில் வசிக்கும் திரு. கிருஷ்ணன் அவர்களின் உதவியின்கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அப்பகுதியைச் சேர்ந்த 200பேருக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.