வடக்கு தொடரூந்து சேவையில் பாரிய லாபம்-

yaldeviவடக்கு தொடரூந்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 4 நாட்களில் 30 லட்சம் ரூபாவரை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் வணிகத்துறை பிரதானி ஜீ.டபிளியு. சிரிரகுமார தெரிவித்துள்ளார். புதிதாக பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரை தொடரூந்து சேவைகள் விஸ்தரிக்கப்பட்டதன் பின்னர் அதிகளவிலான பயணிகள் தொடரூந்து சேவையை நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குளிரூட்டப்பட்ட நகரங்களுக்கு இடையிலான தொடரூந்து சேவை பெட்டிகளில் மாத்திரம் பயணித்தவர்களிடம் இருந்து சராசரியாக 5 லட்சம் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. இதுதவிர, சாதாரண சேவைகளின் போதும் அதிகளவான பயணிகள் தொடரூந்தை பயன்படுத்துவதாக வணிகத்துறை பிரதானி ஜீ.டபிளியு. சிரிரகுமார குறிப்பிட்டுள்ளார். எனினும், அதிகளவு லாபம் ஈட்டப்பட்டபோதிலும், அவற்றில் ஒரு தொகை பராமரிப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க….

நுவரெலியா மகிந்த மாவத்தையில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

நுவரெலியா ஹாவா-எலிய மகிந்த மாவத்தையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் பாரியதொரு ஆர்ப்பாட்டம் இன்றுகாலை 9மணியளவில் இடம்பெற்றது. இந்த ஆர்பபாட்டத்தினை நுவரெலியா ஹாவா-எலியவில் அமைந்துள்ள நு-பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த அதிபர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர், பழைய மாணவ மாணவியர் மற்றும் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் நடாத்தியிருந்தனர். மகிந்த மாவத்தையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் தமக்குரியதென மகிந்த மாவத்தைப் பிரதேச மக்கள் வாதத்தில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் குறித்த மைதானமருகே அமைக்கப்பட்டிருந்த மேடையும் அப்பகுதி மக்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்த மைதானம் தமது பாடசாலைக்குரியதெனவும், அதனைப் பெற்றுத் தருமாறும் வலியுறுத்தியே நு-பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது மைதானம் தமக்குரியதென பாடசாலையைச் சேர்ந்தவர்களும், தமக்கே உரியதென அப்பகுதி மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மத்திய மாகாணசபை உறுப்பினரும் பிரதியமைச்சர் கௌரவ வீ.இராதாகிருஸ்ணன் அவர்களின் புதல்வருமான திரு. ராஜாராம் அவர்களும், நுவரெலியா மேயரும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து இரு தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் இந்த மைதானம் நு-பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரிக்குச் சொந்தமானதென முடிவுசெய்யப்பட்டது.

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை-

மன்னார் மனிதப் புதைகுழி தோண்டும் நடவடிக்கைகளை நிறைவுசெய்வது தொடர்பிலான இறுதி அறிக்கை எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போது அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அனுராதபுரம் விஷேட சட்ட வைத்திய அதிகாரி தனஞ்சய வைத்தியரத்ன குறிப்பிட்டுள்ளார். மன்னார் – திருக்கேதீஸ்வரம் வீதியில் நீர்க்குழாய் பொறுத்தும் நடவடிக்கைகளின்போது, அங்கு பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்டதோடு, நீதிமன்றத்தின் உத்தரவின்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடற்படையைச் சேர்ந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு-

திருகோணமலை, சம்பூர் கடற்படை முகாமைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நீச்சல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மிரிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 22வயதான அவர் உடன் மீட்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே மரணமாகியுள்ளார். சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு சந்திப்பு-

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் அந்தக் குழுவுக்கு அறிவுரை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுக்கும் இடையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கலந்துரையாடலில் கலாநிதி டெஸ்மன் டி சில்வா, இந்தியாவின் சிரேஷ்ட பிரதிநிதி அவ்தாஸ் கௌசல் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கூறியுள்ளார். இதன்போது தேசிய மனிதச் சட்டம் மற்றும் தேசிய மனித உரிமைகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டதாக மெக்ஸ்வெல் பரணகம மேலும் குறிப்பிட்டார்.

அம்பியூலன்ஸ் லொறி விபத்தில் வைத்தியர், உதவியாளர் பலி-

புத்தளம் மாவட்டம் முந்தல் – பந்துலுஓய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. கொத்தாந்தீவு வைத்தியசாலையில் இருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு நோயாளியை ஏற்றிச்சென்று பின்னர் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் அம்பியுலன்ஸில் பயணம் செய்த வைத்தியர் மற்றும் அவரது உதவியாளருமே இவ்வாறு பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை 04.00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த மேலும் மூவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பும் நடவடிக்கை-

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் நடவடிக்கை இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் ஒரு இலட்சம் தபால் அட்டைகளை அனுப்பும் இந்நிகழ்வின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை, யாழ். தபால் திணைக்களத்தில், அக் கட்சியின் பொதுச் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் ஆரம்பித்து வைத்தார். இதன்படி முதலாவது தபால் அட்டையை தபால் அதிபரிடம் அவர் கையளித்தார். இதனையடுத்து அக்கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்களும் தபாலட்டைகளை அனுப்பினர்.