இனப்படுகொலை பிரேரணையை ஏற்க வடக்கு மாகாணசபை மறுக்கிறது- சிவாஜிலிங்கம்.

imagesCA52LB32இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்ற பிரேரணை வடக்கு மாகாணசபையில் ஏற்கப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், இல்லையேல் தமது உறுப்பினர் பதவியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ‘தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இங்கு இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டும், வட மாகாணசபை அது தொடர்பான தனது பிரேரணையை கடந்த ஐந்து மாதங்களாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது என்று சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியிருக்கின்றார். ‘இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவை நடத்திவருகின்ற விசாரணைகள் இம்மாதம் 31 ஆம் திகதியுடன் முற்றுப் பெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில்’ இந்தப் பிரேரணை முக்கியத்துவம் பெற்றிருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிவாஜிலிங்கத்தின் பிரேரணையானது தேசிய அளவில் முக்கியத்துவம் மிக்கது என்பதால் தன்னால் அது தொடர்பில் முடிவெடுக்க முடியாது என்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கவனத்திற்கு அதனைக் கொண்டு வந்ததாகக் கூறினார். கூட்டமைப்பின் தலைமை இது தொடர்பாக அதன் இணைப்புக்குழு கூட்டத்திலும் உயர்மட்டக் கூட்டத்திலும் ஆராய்ந்து 11 விடயங்களை உள்ளடக்கி முதலமைச்சருக்குத் தெரிவித்திருந்ததாகவும் சிவஞானம் கூறினார். ‘கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில், இனப்படுகொலை என்ற சொற்பதம் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்திருந்த தலைவர் சம்பந்தன், இந்தப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான சமயம் இதுவல்ல என கூறியிருந்தார். இதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஆகும்’ என்றார் சிவஞானம்.

ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் ஐதேக மீது ‘புலி முத்திரை’

imagesCA7JKKB4இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் (2015) ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ‘ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். எந்தத் திகதியில் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் திகதி உறுதிப்படுத்தப்பட்டவுடன் அதனைக் கூறுகின்றேன்’ என்று கூறினார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல. இலங்கையில் ராஜபக்ஷ ஆட்சியை அகற்றும் நோக்குடனேயே விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் 2006-ம் ஆண்டில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட விடயத்தில் நடைமுறை ரீதியான தவறுகள் நடந்திருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில் நடக்க இருக்கின்ற சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளூர் அரசியல் மேடைகளில் முக்கிய பிரசார விடயமாக சூடுபிடித்திருக்கிறது. ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய லண்டன் பயணம் தொடர்பில் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய லண்டன் விஜயத்தையும் தொடர்புபடுத்தி கொழும்பின் தெருக்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அமைச்சர்கள் பலருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஐரோப்பிய விஜயத்திற்கும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றது என்று அரசியல் மேடைகளில் தெரிவித்து வருகின்றனர். ‘அவர் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டு வந்தார். விடுதலைப் புலிகளின் டயஸ்போரா பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்ததை நாங்கள் கண்டோம்’ என்றார் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த. ஆனால் அரசாங்கத்தின் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சி மறுக்கின்றது. ‘மக்களுக்கு கொடுத்த பொய் வாக்குறுதிகள் தொடர்பில் பதில்கூற முடியாத நிலையில், இந்த அரசாங்கம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புலி முத்திரை குத்தி தங்களின் இயலாமையை மறைக்கப் பார்க்கின்றது’ என்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க. இதனிடையே, பாப்பரசர் பிரான்சிஸ் ஜனவரி 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாப்பரசர் விஜயம் மேற்கொள்கின்ற காலத்தில் தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை ‘தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியில் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது அவ்வளவு நல்லது அல்ல’ என்று தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக திருச்சபை தலைவர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் கூறியிருந்தார்.