ஜனாதிபதி தேர்தல் விவகாரம் கட்சிகளுடனான பல்முனை சந்திப்புகள் சூடுபிடிப்பு.

sriஅடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுடைய பங்காளிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்தனியாக சந்தித்துவருகின்றார். இதன் ஒரு கட்டமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்தவாரம் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தங்களுடைய முழுமையான ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வழங்கவிருப்பதாக மலையக மக்கள் முன்னணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் மற்றும் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்று கோரியுள்ள அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார்.
அதன்பின்னர், அரசாங்கத்திலுள்ள ஏனைய பங்காளி கட்சிகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, லண்டனுக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பும் அவர், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் இதில் ஜனாதிபதி  தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வு குறித்து விரிவாக ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்கையில், ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களில் பலர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துகொள்ளவிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் கூறிவருகின்றமை தெரிந்ததே.