யாழ் விடத்தல்பளை கமலாசினி வித்தியாலய பரிசளிப்பு விழா-
யாழ். விடத்தல்பளை கமலாசினி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா-2014 நேற்று 20.10.2014 திங்கட்கிழமை காலை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. நாகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சர்வேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக முன்னைநாள் ஓய்வு நிலை அதிபர் திரு. கதிரித்தம்பி மற்றும் வரணி, வைத்திய அதிகாரி உயர்திரு. வீ. ஆறுமுகம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்ட குழாய்க்கிணறும், அதற்குரிய குடிநீர்க் குழாய் கட்டமைப்பும் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலைப் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.