சுதந்திர இலங்கையின் 69வது வரவுசெலவுத் திட்டம்

m_241014_3இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நாட்டின் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றினார். மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து முன்வைக்கின்ற 10வது வரவுசெலவுத் திட்டம் இது. வரும் ஜனவரி மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில், சட்டரீதியான சர்ச்சைகளுக்கு மத்தியில் மூன்றாவது தவணைக்காகவும் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்படும் இந்த வரவுசெலவுத் திட்டம் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டிருந்ததைப் போல வாக்கு வங்கியை இலக்குவைத்து இம்முறை வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொடுப்பனவுகளும் அதிகரிப்புகளும் குறிப்பாக, அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா குறைந்தபட்ச சம்பளம், ஆயுதப்படைகளில் இருப்பவர்களின் பெற்றோருக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா கொடுப்பனவு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓய்வூதிய காப்புறுதி முறை, மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 ரூபா கொடுப்பனவு போன்றன இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களுக்கு 4000 ரூபா ஊக்குவிப்புத் தொகை, வயது முதிர்ந்தவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபாவுக்குப் பதிலாக 2000 ரூபா, ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபா மேலதிகக் கொடுப்பனவு போன்றனவும் மகிந்த ராஜபக்ஷிவின் 10 வரவுசெலவுத் திட்டத்தில் அடங்குகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இலவச விதைநெல், அறுவடை நெல்லுக்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையில் 6 ரூபாய் அதிகரிப்பு இப்படி ஏராளமான அதிகரிப்புகளையும் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையை 2017க்குள் பூர்த்திசெய்தல், நாட்டின் விமானசேவைகளையும் விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ததல், கொழும்பு நகரில் நவீன கட்டுமானங்கள் என பல்வேறு கட்டுமான முதலீடுகளையும் அவர் அறிவித்துள்ளார். கொழும்பு நகரில் குடிசைகளில் வாழும் சுமார் 50 ஆயிரம் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை அடுத்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவதுடன், பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை புதுப்பிக்கும் வேலைத்திட்டத்திற்காக 750 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும் மகிந்த ராஜபக்ஷ இங்கு கூறினார். அதிகரித்த பாதுகாப்புச் செலவினம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் பிரகாரம், இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில், வழமைபோல பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கே அதிகளவு நிதி (285 பில்லியன் ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு மொத்தமாக 113 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சுக்கு 180 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அமைச்சுகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் பொறுப்பிலேயே இருக்கின்றமை தொடர்பில் கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.