ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு கூட்டமைப்பு பங்கேற்பு

tna2410214_3tna2410214_5வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக தேநீர் விருந்துபசாரமொன்றை ஜனாதிபதி வழங்குவது வழமையாகும். இந்த தேநீர் விருந்துபசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த கைலாகு செய்து பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாங்கறியாதவனின் திட்டம் எப்படி: ஜனாதிபதி

m_241014_1நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியதுடன் மக்களின் மனங்களை கவரும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை 1.30க்கு கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததும். சம்பிரதாயபூர்வமான வரவு-செலவுத்திட்ட பெட்டியை இம்முறையும் எடுத்துவராத நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோவையுடன் அவைக்குள் பிரவேசித்தார்.

அப்போது அவையிலிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று மேசைகளில் தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். எதிரணியினர் தங்களுடைய ஆசனங்களிலேயே அமர்ந்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 10ஆவது வரவு-செலவுத்திட்டத்தின் முதலாவது பகுதியில், கடந்த கால செயற்பாடுகளை எடுத்தியம்பிய ஜனாதிபதி, நாட்டில் புரையோடிபோயுள்ள பிரச்சினைகளுக்கு நாட்டுக்குள்ளேயே தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தியதுடன் வெளிநாட்டு தலையீடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைந்து கொண்டு பிரச்சினைக்கு தீர்வு ஒத்துழைக்கவேண்டும் என்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறும் கூட்டமைப்புக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, கிராம அபிவிருத்தியை புகழ்ந்த ஜனாதிபதி, அவற்றை காட்டு யானைகள் துவம்சம் செய்வதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இதன்போது எதிரணியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள், அரசாங்கத்தை அச்சுறுத்தும் யானைகள் இருப்பதாக கூறினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த ஜனாதிபதி, அரசாங்கத்தை அச்சுறுத்தும் யானைகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று சிரித்து கொண்டே கூறினார். இதனால் சபையில் சிரிப்பொலி எழுந்தது.

அந்த சிரிப்பொலிக்கு மத்தியில் உரையை தொடர்ந்த ஜனாதிபதி, வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது பகுதியை வாசிப்பதற்கு முன்னர் இது முக்கியமான பகுதியென்றும் கவனமாக செவிமடுக்கவும் என்றும் எதிரணியிடம் கேட்டுக்கொண்டார். இரண்டாவது பகுதியில், நிவாரணங்கள், முன்மொழிவுகள், சம்பள அதிகரிப்புகள், வரி குறைப்புகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் அடங்கிய முன்மொழிவுகளை வைத்தபோது ஆளும் கட்சியினர் மேசைகளில் தட்டி ஆரவாரம் செய்தனர். வரவு-செலவுத்திட்டத்தை சுமார் மூன்று மணிநேரம் இடைவிடாது வாசித்த ஜனாதிபதி, மாலை 4.32க்கு உரையை நிறைவுசெய்துவிட்டு எதிரணியை பார்த்து பாங்கறியாதவனின் திட்டம் எப்படி என்று வினவிட்டு சபையிலிருந்து வெளியேறிவிட்டார். இதனையடுத்து அவைத்தலைவரும் அமைச்சருமான நிமல் சிறி பாலடி சில்வா சபையை 25ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிவரையும் ஒத்திவைத்தார்.