Header image alt text

யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-2014

punnalaikattuvan  (1)யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-2014 நேற்று (24.10.2014) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. த.லோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரூபா உதயரட்ணம் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி கமலினி பாலசுப்பிரமணியம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். முதலில் வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியிலிருந்து ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் (1,50,000) கொடுத்து வாங்கிய மேலைத்தேய வாத்தியக் கருவிகளை (பாண்ட் வாத்தியக்கருவிகள்) ஆயக்கடவைப் பிள்ளையார் கோவிலில் வைத்து திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய அதிபரிடம் கையளித்தார். இதன்மூலம் முதற்தடவையாக இப்பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கப்பட்டு பாண்ட் வாத்தியக்குழு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆசியுரையினை திரு. சிவஸ்ரீ சோ.கெங்காதரக்குருக்கள் அவர்கள் வழங்க, உப அதிபர் திரு. சி.முரளிதரன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் து.லோகேஸ்வரன் (லோகன்) அவர்கள் உரை நிகழ்த்தினார்.

punnalaikattuvan (8)இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், ஐந்தாம் வகுப்புப் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது, என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் இன்று மாறுபட்டு மாணவர்களிடையே ஒரு போட்டிப் பரீட்சையாகவே மாற்றப்பட்டிருக்கின்றது. அது இன்றைக்கு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் அழுத்தத்தைக் கொடுக்கின்ற ஒரு விடயமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே இப் பரீட்சையானது பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலே இருக்கக்கூடிய பாடசாலைகளில் வாய்ப்பு வசதியற்ற திறமையான மாணவர்களுக்கு நகரப் பகுதிகளிலுள்ள பெரிய பாடசாலைகளில் வாய்ப்பளித்து அவர்களுடைய கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடனேயே ஆரம்பிக்கப்பட்டது. அந்த நோக்கம் இன்று முற்றுமுழுதாக முறியடிக்கப்பட்டு ஒரு போட்டியாகவே இடம்பெற்று வருகின்றது. இதை சீர்படுத்த வேண்டும். அதாவது எந்த நோக்கத்திற்காக புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவுசெய்யக்கூடிய வகையிலே அது நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பாடசாலைப் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

punnalaikattuvan (10)punnalaikattuvan  (11)punnalaikattuvan (12)punnalaikattuvan  (6)punnalaikattuvan (7)punnalaikattuvanpunnalaikattuvan (15)punnalaikattuvan (19)punnalaikattuvan (2)punnalaikattuvan  (4)

கமலேஷ் ஷர்மா இன்று இலங்கைக்கு விஜயம்-

(பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதே கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயத்தின் நோக்கமென கூறப்படுகிறது. அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சிலரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு-

பொலிஸாருக்கு எதிராக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரினால் தங்களின் சத்தியாக்கிரக கூடாரம் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை தவறாகப் பயன்படுத்தி பொலிஸார் செயற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக பொலிஸார் செயற்பட்டிருப்பின் அதுகுறித்து மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலோ அல்லது நீதிமன்றத்தை நாட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு-

கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகத்தை நேற்று திறந்துவைத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் செயலகம் இயங்கிவந்த கட்டட தொகுதியில், இந்த தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட், வட மாகாண தேர்தல் ஆணையாளர் நமீல், மேலதிக அரசாங்க அதிபர், உதவி தேர்தல் ஆணையாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மூதூர் களப்பு பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கல்-

திருகோணமலை மூதூரிலுள்ள களப்பு பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சம்பூர் இறால் பாலம் அருகில் பெருமளவான மீன்கள் கரையொதுங்குவதால் ஆற்றை நம்பி மீன்பிடியில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச மீனவர் சமாஜ தலைவர் எஸ்.கிருஷ்ணபிள்ளை கூறியுள்ளார். களப்பில் நேற்றுக் காலைமுதல் மீன்கள் கரையொதுங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பூர் இறால் பாலத்திற்கு அருகில் மீன்கள் கரையொதுங்கியமை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் நிறைவடையும்வரை களப்பு மீன்பிடிகளை தற்காலிகமாக தடை செய்யுமாறு பொலீசாருக்கு அறிவித்திருப்பதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் திருமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more