கமலேஷ் ஷர்மா இன்று இலங்கைக்கு விஜயம்-

(பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதே கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயத்தின் நோக்கமென கூறப்படுகிறது. அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சிலரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு-

பொலிஸாருக்கு எதிராக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரினால் தங்களின் சத்தியாக்கிரக கூடாரம் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை தவறாகப் பயன்படுத்தி பொலிஸார் செயற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக பொலிஸார் செயற்பட்டிருப்பின் அதுகுறித்து மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலோ அல்லது நீதிமன்றத்தை நாட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு-

கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகத்தை நேற்று திறந்துவைத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் செயலகம் இயங்கிவந்த கட்டட தொகுதியில், இந்த தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட், வட மாகாண தேர்தல் ஆணையாளர் நமீல், மேலதிக அரசாங்க அதிபர், உதவி தேர்தல் ஆணையாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மூதூர் களப்பு பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கல்-

திருகோணமலை மூதூரிலுள்ள களப்பு பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சம்பூர் இறால் பாலம் அருகில் பெருமளவான மீன்கள் கரையொதுங்குவதால் ஆற்றை நம்பி மீன்பிடியில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச மீனவர் சமாஜ தலைவர் எஸ்.கிருஷ்ணபிள்ளை கூறியுள்ளார். களப்பில் நேற்றுக் காலைமுதல் மீன்கள் கரையொதுங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பூர் இறால் பாலத்திற்கு அருகில் மீன்கள் கரையொதுங்கியமை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் நிறைவடையும்வரை களப்பு மீன்பிடிகளை தற்காலிகமாக தடை செய்யுமாறு பொலீசாருக்கு அறிவித்திருப்பதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் திருமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க….

யாழில் முன்பள்ளி சென்ற சிறுவன் சடலமாக மீட்பு-

யாழில் 6வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து நேற்று உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கிரேசியன் (வயது6) என்ற சிறுவனே பலியாகியுள்ளார். குறித்த சிறுவன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள முன்பள்ளிக்குச் சென்றுள்ளார். 12மணியான போதிலும் பிள்ளையை காணவில்லை என பெற்றோர்கள் இளவாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலைநேரம் பல பகுதிகளில் தேடிய பின் முன்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள கிணற்றில் சிறுவன் சடலமாக மிதந்துள்ளார்.

தெஹிவளையில் துப்பாக்கி, ரவைகள் மீட்பு-

கொழும்பு புறநகர் தெஹிவளை கவுடான பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் ஒருதொகை ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அருகாமையிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாதநிலையில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கற்பிட்டியில் தீ: ரூ.70 இலட்சம் நாசம்-

புத்தளம், கற்பிட்டியிலுள்ள மொத்த களஞ்சிய சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயினால் 70 இலட்சம் ரூபாய்க்கு அதிகமான பொருட்கள் கருகி நாசமாகிவிட்டதாக களஞ்சிய சாலையின் உரிமையாளர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலையேறிய ஜேர்மன் பெண்ணை காணவில்லை-

மகியங்கனை வீதி ஹ_ன்னஸ்கிரிய, உடதும்பர தொத்துராகலை மலையில் ஏறிய ஜேர்மன் நாட்டு பிரஜையான 70 வயதுடைய பெண்ணை காணவில்லை என ஹ_ன்னஸ்கிரிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்துபேர் கொண்ட குழு இந்த மலையில் நேற்று ஏறியுள்ளது. அதில் சென்ற இந்த பெண் சுமார் 300 மீற்றர் தூரம் ஏறியதன் பின்னர் தன்னால் இனிமேல் மலையேற முடியாது என்றும் தான் திரும்பி போவதாகவும் தெரிவித்ததாக அக்குழுவில் சென்றவர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர். அதன் பின்னர், அப்பெண் தொடர்பில் எவ்வாறான தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் அக்குழுவினர் முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

பாவனையற்ற கிணற்றிலிருந்து சிறுத்தை மீட்பு-

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் பாவனையற்ற கிணற்றில் சிறுத்தை ஒன்று வீழ்ந்துள்ளது. சிறுத்தை கிணற்றில் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் குறித்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.