பொதுநலவாய செயலாளர் கமலேஷ் ஷர்மாவின் யாழ்.ப்பாண விஜயம்-

Kamaleshபொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா வடபகுதிக்கான முதலாவது விஜயத்தை இன்றுமுற்பகல் மேற்கொண்டுள்ளார். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியை சந்தித்து, வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கமலேஷ் ஷர்மா கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து இன்று மதியம் 1.30மணிக்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் சிவில் சமூகத்தினரை சந்தித்துள்ளதுடன் மாலை இந்தியன் வீட்டுத்திட்டம் குறித்து நேரில் சென்று பார்வையிடவும் ஏற்பாடாகியுள்ளது. இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா நேற்று பிற்பகல் இலங்கைக்கு வருகைதந்திருந்தார். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதே, கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயத்தின் நோக்கமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சிலரை பொதுநலவாய செயலாளர் நாயகம், சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ் – கொழும்பு ரயிலுக்கு, வியாழன் வரை ஆசனப் பதிவு இல்லை-

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் ஆசனப் பதிவுகள் இடம்பெறாது எனவும் யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் தெரிவித்துள்ளார். யாழிலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களை முற்பதிவு செய்துகொள்வதற்காக கடந்த வாரம் அதிகளவான பொதுமக்கள் புகையிரத நிலையம் வருகை தந்தனர். இந்நிலையில், யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட கடுகதி, கடுகதி, யாழ்.தேவி, தபால் புகையிரதம் ஆகிய ரயில்களின் இருக்கைகள் முழுவதும் முற்பதிவு செய்யப்பட்டன. அத்துடன், யாழ் – கொழும்பு – மாத்தறை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) செல்லும் ரயிலுக்கான இருக்கைகளும் முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளன. இதனால், இன்று முதல் தொடர்ந்து வரும் 5 நாட்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் முற்பதிவு செய்யப்பட்டுவிட்டன என அவர் மேலு; சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…..

கடற்படை தளபதி இந்தியாவிற்கு விஜயம்-

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா நேற்றைய தினம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்திய கடற்படை தளபதியின் அழைப்புக்கு அமையவே இந்த விஜயம் அமைந்துள்ளது. இதன்போது, அவர் இந்திய கடற்படை தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளார். இதனிடையே, இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு உடன்படிக்கைகளை விஸ்தரிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கமாண்டர் கோஷல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். நவீன வசதிகளுடன் இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள கடற்படை இயந்திரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறந்தவருக்கு வடக்கு செல்ல கட்டுப்பாடில்லை-

வடக்கிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி வடக்கிற்கு வருகின்றவர்களில் இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டவர்களுக்கு பயணக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வரும் இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொண்டிருப்போர் தமது உறவுகளை பார்வையிட செல்லும்போது அவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதி தேவையில்லை. எனினும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் வடக்குக்கு சுற்றுலாவாகவோ அல்லது அபிவிருத்தி திட்டங்களுக்காகவோ செல்லும்போது, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆதிக்க அதிகரிப்பு தொடர்பில் இந்திய அதிருப்தி-

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது தொடர்பில் இந்திய கவலையடைந்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவிடம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மத்திய பாதுகாப்பமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது கடந்த மாதம் இலங்கை துறைமுகத்துக்கு வருகைதந்த சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பதாய் அமைந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளரிடம், இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது அணுசக்தி வாய்ந்த சங்ஸெங் 2 என்ற இந்த சீன நீர்மூழ்கிக் கப்பல் கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தது இவ்வாறானதோர் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை வந்தடைந்தது இதுவே முதல்தடவை என த ஹிந்து சுட்டிக்காட்டுகிறது சீனாவின் இரு போர்க் கப்பல்களும் கடந்தமாதம் 7ஆம் திகதிமுதல் 13ஆம் திகதிவரை இலங்கை துறைமுகத்தில் தரித்துநின்றதாக இலங்கை பத்திரிகையொன்றினை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது

கிழக்கு மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு-

கிழக்கு மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்படும் பணிப் புறக்கணிப்பு ஏழாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இதுவரை மாகாண சுகாதார திணைக்களத்தால் தங்களின் கோரிக்கைகளுக்கு எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளவில்லை என அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் ஜீ. சரவணபவன் கூறியுள்ளார். குறித்த பொது சுகாதார உத்தியோகஸ்தருக்கு உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மட்டக்களப்பு பிராந்தியத்திலிருந்து கல்முனைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த இடமாற்றம் தொடர்பில் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பீ. கே. ஞானகுணாலன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மீது கல்வீச்சு-

கல்முனை பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியின்மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பஸ் மீதே, காலை ஒன்பது மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரால் பஸ் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். எனினும் சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். தாக்குதலில் பஸ் கண்ணாடிகளுக்கு சேதமேற்பட்டுள்ள போதிலும், சாரதிக்கும் பயணிகளுக்கும் எவ்வித பாதிப்புகள் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தங்க காற்சட்டை அணிந்திருந்தவர் கைது-

லூப்பில் தங்கத்தை வைத்து தைக்கப்பட்டிருந்த காற்சட்டையை அணிந்து கொண்டும் தங்கத்துண்டுகளை மலவாயில் மறைத்து வைத்துக்கொண்டும் இந்தியாவை நோக்கி பயணிக்கவிருந்த இலங்கை பிரஜையொருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். கொழும்பு, குணசிங்கபுரத்தை சேர்ந்த 34 வயதான புடவைக்கடை வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் நிறை 289கிராம் என்றும் அதன் பெறுமதி 14 இலட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய் என்றும் சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் இலங்கை விமான சேவையின் யு.எல்173 என்ற விமானத்திலேயே பெங்களுரை நோக்கி பயணிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.

கல்குடா கடலில் உலகப்போர் விமான பாகம் மீட்பு-

மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் இருந்து 10 கீலோ மீற்றர் தூரத்தில் உள்ள கடலில் 42 மீற்றர் ஆழத்தில் உலக போரின் போது மூழ்கியதாக கூறப்படும் விமானங்களின் பாகங்கள் கிடைத்துள்ளதாக கடல் தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டுள்ள தர்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அலுமனியம் துண்டு ஒன்றை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விமான பாகங்கள் கிடைத்துள்ளன. கடலில் இருந்து கிடைத்த இந்த விமான பாகங்கள் கெட்டலினா விமானத்தின் பாகங்கள் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கெட்டலினா விமானங்கள் உலக போரின் போது உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டன. பாரிய விமானமான இந்த விமானம் சுமார் 18 மணிநேரம் பறக்கக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைப் படிவம் விநியோகித்தவர் கைது-

ஐ.நா போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிப்பதற்கெனத் தயாரிக்கப்பட்ட படிவங்களை கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் மக்களுக்கு படிவங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போதே நேற்று கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கைதான நபரிடமிருந்து போர்க்குற்ற விசாரணைக்காக சமர்ப்பிக்கப்படவிருந்த படிவங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், அவரை வவுனியாவுக்கு கொண்டுசென்று விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கைதானவர் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.