பொதுநலவாய செயலாளர் நாயகம் ஜனாதிபதி சந்திப்பு-

kamalesh_meetஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகைதந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் கமலேஷ் சர்மாவுடன் வருகைதந்திருந்த ஐந்து பிரதிதிகளும் பங்கேற்றிருந்தனர். இதேவேளை, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை, கமலேஷ் சர்மா தலைமையிலான குழுவினர் ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று மாலை 3 மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் திருமலை விஜயத்தை முன்னிட்டு விசேட விடுமுறை-

திருகோணமலை மாவட்டத்தில் 15ற்கும் அதிகமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் திருமலை மாவட்டத்திற்கான விஜயத்தை முன்னிட்டு, நாளையும், நாளை மறுதினம் பாடசாலைகள் மூடப்படவுள்ளன. பாதுகாப்பு படையினர் தங்குவதற்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, திருகோணமலை, கிண்ணியா, மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளுக்குப் பதிலாக எதிர்வரும் வாரஇறுதி நாட்களான நவம்பர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் பாடசாலைகள் நடைபெறும் எனவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவருக்கு பிணை-

துறைமுக வளாகத்திற்குச் சொந்தமான அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேர், 10 இலட்சம் ரூபா பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலினி கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களிடம், பாராளுமன்றத்திற்குச் சென்று வாக்குமூலம் பதிவுசெய்யுமாறு நீதவான் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏனைய இருவரையும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்குச் சென்று, வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

வெள்ளவத்தையில் காவல்துறை அலுவலரின் சடலம் மீட்பு-

கொழும்பு வெள்ளவத்தை 42வது ஒழுங்கைக்கு முன்னால் உள்ள கடற்கரைப்பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், வெள்ளவத்தை காவல்நிலையத்தில் கடமை புரியும் காவல்துறை அலுவலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று முற்பகல் கரையோரத்தில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின்படி சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகள் இடம்பெற்று வருகின்றன.