மலையகமெங்கும் துக்கதினம் அனுஸ்டிக்க கோரிக்கை
பதுளை. கொஸ்லாந்தை, மீறியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையக மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலையகமெங்கும் ஒருவார காலம் துக்க தினம் அனுஸ்டிக்க வேண்டும் என மலையக சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மலையக சிவில் அமைப்புக்களான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம் மற்றும் மலையக பாட்டாளிகள் கழகம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதுளை – கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு, கறுப்புநிற உடை அணிந்து, இன்று வியாழக்கிழமை 30ஆம் திகதி முதல் ஒரு வார காலத்தை, சோக வாரமாக அனுஷ்டிப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொஸ்லாந்தைக்கு விஜயம்-
பதுளையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மீறியபெந்த தோட்டத்தை பார்வையிடவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுமுற்பகல் கொஸ்லாந்தை பகுதிக்குச் சென்றிருந்தார். அவர் அங்குள்ள பாதிக்கபபட்ட மக்களுடன் உரையாடியுள்ளார். மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை பாதுகாக்குமாறு சிறுவர் பாதுகாப்பு சபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
பேதமின்றி மீரியபெத்த மக்களுக்கு உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை-
இன மதபேதமின்றி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு உதவ இலங்கையர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து எமது சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். உதவியற்ற மக்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமை என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா, ஐ.நா உதவத் தயார்-
பதுளை, கொஸ்லாந்தை – மீறியபெத்தை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. மண்சரிவு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ_டன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தகவல் அறிந்துள்ளதோடு உதவி அறிவிப்பையும் விடுத்துள்ளார். இந்தியாவின் உதவி அறிவிப்புக்கு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை மீரியாபெத்தையில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஐ.நா சபையின் மனிதாபிமான பிரிவு அறிவித்துள்ளது. ஐ.நாவின் பேச்சாளர் ஸ்ரீவன் டுஜாரிக் இதனைத் ஐ.நாவின் செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.
இலங்கை தொடர்பில் இன்று மேலுமொரு அறிக்கை-
இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இன்று வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்களின் அமுலாக்கம் குறித்து ஆராய்வதற்கான கூட்டத்தொடரின் போது, இலங்கை தொடர்பில் கடந்த 8ம் மற்றும் 9ம் திகதிகளில் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. ஜெனீவாவில் இடம்பெற்றிருந்த இந்த கூட்டத்தின் போது சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் இலங்கை தொடர்பான அறிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கைகளின் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றே இன்று வெளியிடுவதாக கூறப்படுகிறது.
மீனவர் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வு-
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இடைக்கால தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். மீனவர் விடயத்தில் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதுவரையில், தற்காலிக தீர்வு வழங்குவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா அவர்கள் கூறியதுடன், கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை மீட்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இ.போ.ச பஸ் மீது கிளிநொச்சியில் கல்வீச்சு-
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின்மீது கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பஸ் மீதே கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸார் கூறுகின்றனர். கல்வீச்சுக்கு இலக்கான பஸ், கிளிநொச்சி பொலிஸாரின் பொறுப்பில் உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.