மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் பலர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்-
பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஆயினும் அரசாங்க புள்ளிவிபரத் தகவல்களின்படி 350 பேர் வரை மண்சரிவுக்குள் அகப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீரற்ற காலநிலையால் நேற்றுமாலை நிறுத்தப்பட்ட மண்சரிவு மீட்புப்பணிகள் இன்றுகாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மண்சரிவால் இடம்பெயர்ந்துள்ள 818 பேர் இரு பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொஸ்லாந்தை தமிழ் வித்தியாலயத்தில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேரும் பூணாகலை தமிழ் மாகா வித்தியாலயத்தில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியிலுள்ள 300ற்கும் அதிகமான குடும்பங்களின் 1,200 பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட செயலர் டீ.பீ.ஜி.குமாரசிறி தெரிவிக்கின்றார். நுவரெலியா பிரதேச செயலர் பிரிவில் இதுவரையில் 104 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவர்களது வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் லபுகல தோட்டத்திலிருந்து 150 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொத்மலை வௌண்டன் தோட்டத்தில் 17குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. 50 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். மண்சரிவு அபாயத்தினால் வலப்பனை லிடெஸ்டெல் தோட்டத்தில் 17 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார்.