Posted by plotenewseditor on 31 October 2014
Posted in செய்திகள்
ஏழு மாவட்டங்களில் தொடரும் மண்சரிவு அபாயம்-
பதுளை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7மணிவரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு பணிமனை அறிவித்துள்ளது. இதன்படி பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பதுளை மாவட்டத்தின் எல்லை – வெல்லவாய, ஹப்புத்தளை – பெரகலை, பெரகலை – வெல்லவாய, பதுளை – இஸ்பிரிங்வெளி, பசறை – லுணுகலை, அட்டாம்பிட்டி – வெலிமட, பதுளை – பண்டாரவளை, பதுளை – மகியங்கனை மற்றும் ஹாலிஎல –வெலிமட வீதிகளை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மீரியாபெத்த மண்சரிவு காரணமாக மலையகத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது மலையகத்திலுள்ள பிரதான நகரங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் வெள்ளை மற்றும் கறுப்பு நிறக்கொடிகளை ஏந்தி தமது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மூன்றாவது நாளாக மோப்ப நாய்களைக் கொண்டு தொடரும் மீட்பு பணி-
பதுளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது.. இராணுவத்தினர் இரண்டு பிரிவாக பெக்கோ இயந்திரங்களை கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசேட தேடுதலும் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரேன் பெனாண்டோ, ஐதேக தேசிய அமைப்பாளர் தயா கமகே உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன், உரையாடி, அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.
மண் சரிவில் 144 பேர் மாயம், இடம்பெயர்ந்தவர்கள் விபரம்-
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய புதுப்பிக்கப்பட்ட தகவலின்படி மீரியாபெத்த மண்சரிவு காரணமாக 144 பேர் இன்னும் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 410 குடும்பங்களைச் சேர்ந்த 1,413பேர் இவ் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு கொஸ்லாந்தை சிறிகணேசா தமிழ் வித்தியாலயத்திலும், பூனாகலை தமிழ் வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர எல்லை, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு ஏற்படுமென்ற அச்சம் காரணமாக 76 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மீரியாபெத்தை அனர்த்தத்தை தொடர்ந்து, பூனாகலை எல்.எல்.ஜீ. தோட்டப் பிரிவில் உள்ள மக்கள் அப்பிரிவில் ஏற்பட்ட நில வெடிப்பின் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அதேநேரம், அச்சத்தில் இடம்பெயர்ந்த மற்றொரு பிரிவினர் பூனாகலை ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை வாசிக்க….. Read more