ஏழு மாவட்டங்களில் தொடரும் மண்சரிவு அபாயம்-
பதுளை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7மணிவரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு பணிமனை அறிவித்துள்ளது. இதன்படி பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பதுளை மாவட்டத்தின் எல்லை – வெல்லவாய, ஹப்புத்தளை – பெரகலை, பெரகலை – வெல்லவாய, பதுளை – இஸ்பிரிங்வெளி, பசறை – லுணுகலை, அட்டாம்பிட்டி – வெலிமட, பதுளை – பண்டாரவளை, பதுளை – மகியங்கனை மற்றும் ஹாலிஎல –வெலிமட வீதிகளை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மீரியாபெத்த மண்சரிவு காரணமாக மலையகத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது மலையகத்திலுள்ள பிரதான நகரங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் வெள்ளை மற்றும் கறுப்பு நிறக்கொடிகளை ஏந்தி தமது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மூன்றாவது நாளாக மோப்ப நாய்களைக் கொண்டு தொடரும் மீட்பு பணி-
பதுளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது.. இராணுவத்தினர் இரண்டு பிரிவாக பெக்கோ இயந்திரங்களை கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசேட தேடுதலும் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரேன் பெனாண்டோ, ஐதேக தேசிய அமைப்பாளர் தயா கமகே உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன், உரையாடி, அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.
மண் சரிவில் 144 பேர் மாயம், இடம்பெயர்ந்தவர்கள் விபரம்-
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய புதுப்பிக்கப்பட்ட தகவலின்படி மீரியாபெத்த மண்சரிவு காரணமாக 144 பேர் இன்னும் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 410 குடும்பங்களைச் சேர்ந்த 1,413பேர் இவ் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு கொஸ்லாந்தை சிறிகணேசா தமிழ் வித்தியாலயத்திலும், பூனாகலை தமிழ் வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர எல்லை, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு ஏற்படுமென்ற அச்சம் காரணமாக 76 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மீரியாபெத்தை அனர்த்தத்தை தொடர்ந்து, பூனாகலை எல்.எல்.ஜீ. தோட்டப் பிரிவில் உள்ள மக்கள் அப்பிரிவில் ஏற்பட்ட நில வெடிப்பின் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அதேநேரம், அச்சத்தில் இடம்பெயர்ந்த மற்றொரு பிரிவினர் பூனாகலை ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை வாசிக்க…..
காணிகளை சுவீகரித்தேனும் வழங்குவோம் – அரசாங்கம் –
பாதுகாப்பற்ற பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் குடியேறுவதற்கு பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தோட்ட நிர்வாகமும், பெருந்தோட்ட யாக்கமும் கண்டிப்பாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர இன்று இதனை நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளில் குடியேறுவதற்கு தோட்ட நிர்வாகம் அனுமதிக்காத பட்சத்தில், தோட்ட காணிகளை அரசாங்கம் சுவீகரித்தேனும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகளுக்க போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லாத பட்சத்தில், அது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வேவண்டனில் 57 குடும்பங்களை வலுகட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை-
கொத்மலை, வேவண்டனில் 57 குடும்பங்களை வலுகட்டயமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நுவரெலியா மாவட்ட செயலர் டி.பி.ஜி.குமாரசிரி இன்று தெரிவித்துள்ளார். மேற்படி பிரதேச மக்களுக்கு பலமுறை அறிவித்தல்கள் விடுத்தும் அவர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறவில்லை. இந்நிலையில், இவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அனர்த்தங்களில் இவர்கள் சிக்கிக்கொள்ளும் இவர்களுக்கு நாம முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மேலிடத்திலிருந்து எழுகிறது. இந்நிலையிலே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அனர்த்த நிலைமைகளில் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களிலிருந்து வெளியேறிவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நிதி வழங்கியுள்ளது. இந்நிதியொதுக்கீட்டின் மூலம் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு மற்றும் ஏனைய நிவாரண உதவிகளை செய்து வருகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொதிகள் –
பதுளை கொஸ்லாந்த, மீரியபெத்தவில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதற்காக யாழ்.மாவட்டத்திலுள்ள உணவு விடுதிகளில் இருந்து பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த உணவுப் பொதிகள் கிறீன் கிறாஸ் உணவு விடுதியிலிருந்து சேகரிக்கப்பட்டு வேறு பல உணவு விடுதிகளுக்கும் சென்று பொருட்கள் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் இன்றையதினம் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் இன்று பிற்பகல் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. மேலும் வடமாகாண சபையும் இந்த நடவடிக்கைக்கான உதவிகளை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புத்தளம் – மன்னார் வீதி எழுவக்குளம் பகுதிக்கு பூட்டு-
புத்தளம் – மன்னார் பிரதான வீதி எழுவக்குளம் பகுதியில் மூடப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. கலாஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வீதி மூடப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்திற்கு இடையில் உள்ள இந்த வீதி எழுவக்குளம் பகுதியில் கலாஓயாவை கடந்து செல்கிறது. கலாஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வீதி நீரில் மூழ்கும் அபாயமுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே புத்தளத்தில் இருந்து எழுவக்குளம் செல்லும் வீதியை பயன்படுத்த வேண்டாம் என வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
கொள்ளுபிட்டியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் படுகாயம்-
கொழும்பு – கொள்ளுபிட்டி மகானாம கல்லூரிக்கு அருகில் நேற்று இரவு பாரிய மரமொன்று சரிந்து பிரதான வீதிக்கு குறுக்கே விழுந்ததில் ஒருவர் காயமடைந்ததோடு முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் ஆகியவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாரிய மரத்தில் முச்சக்கரவண்டி சிக்குண்டதுடன் சாரதி காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டுப்லிகேசன் வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ் விபத்தில் குடும்பஸ்தர் பலி, ஊடகவியலாளர் மீது தாக்குதல்-
யாழில் நேற்றுமாலை 5.30அளவில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் இனம்தெரியாத நபரொருவரால் தாக்கப்பட்டுள்ளார். ஓட்டுமட சந்திக்கு அருகில் நடைபெற்ற விபத்தில், சூரிய வெளி – நாவாந்துறையை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான நிக்லஸ் டொமினிக் (வயது 45) என்பவர் பலியானார். மாதகலில் இருந்து யாழ் நகர் நோக்கி வந்து கொண்டிருந்த மினிவேன் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த இ.போ.சபை பேருந்தை முந்துவதற்காக முற்பட்டவேளை, எதிர் திசையில் வந்தவர்மீது மோதியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவரது உறவினர்கள் நண்பர்கள் ஒன்றுகூடி குறித்த வேன்மீது தாக்குதல் நடாத்த முற்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெருமளவு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் அங்கிருந்த ஒருவரால் தாக்கப்பட்டார். இது குறித்து ஊடகவியலாளரினால் யாழ். பொலிஸில் முறையிட்டுள்ளார்.
வரவு –செலவுத்திட்ட வாக்கெடுப்பில் சமுகமளிக்காதிருக்க ஹெலஉறுமய தீரமானம்-
நாளை நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது, சமுகமளிக்காமல் இருப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய இன்று தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஜாதிக ஹெல உறுமயவினால் சமர்ப்பிக்கப்பட்ட யாப்புத்திருத்தங்கள் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது, சமுகமளிக்காமல் இருப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுன்னாகத்தில் எண்ணெய் கசிவு விடயமாக உதவி வழங்க ஜப்பான் இணக்கம்-
யாழ். சுன்னாகத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு நீர்நிலைகள் பாதிக்கப்படுவதை தடுக்க, ஜப்பான் தொழில் நுட்ப உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜப்பானிய தூதுவர் நுபுஹிட்டோ ஹோபோ வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை நேற்றையதினம் சந்தித்த போது, இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மத்திய அரசாங்கத்துக்கும், ஜப்பானிய அரசாங்கத்துக்கும் இது தொடர்பில் அறிவித்து, விரைந்து செயற்படவிருப்பதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.