இயற்கையின் கோர தாண்டவத்தில் அல்லலுறும் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிடுவோம்..!!
பதுளையில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற இயற்கையின் கோர தாண்டவத்தில் அல்லலுறும் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிடுவோம். இன்று மண்சரிவால் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள எமது உறவுகளான தமிழ் மக்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழர்களினதும் தலையாய கடமையாகும். உலகெங்கும் பரந்து வாழும் எம் மக்கள் மலையகத்தில் நிர்க்கதிக்கு உள்ளான உறவுகளுக்கு உதவ விரும்பி நேரடியாக உதவ முடியாது போனால், உடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களது உதவிகளை அந்த மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான உதவிகளை நாம் செய்து தருவோம். உறவுகள், உடமைகளை இழந்து தவிக்கும் எமது தமிழ் மக்களுக்கு உடனடியாக உதவ வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். “அதிரடி” இணையத்தளம், மற்றும் பிரித்தானியாவின் “வெற்றி” வானொலி, “பூர்வீகம்” செய்திகள் ஆகியவற்றின் ஆதரவுடன் “வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தினரால்” எமது உறவுகளுக்கான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. நல்லுள்ளம் படைத்த எமது உறவுகள் உதவிட கழகத்தினருடன் தொடர்பு கொள்ளவும். நேரடியாக பொருட்களை எமது அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும். எமது அலுவலக முகவரி…
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம் இலக்கம் 56, 5ஆம் ஒழுங்கை,
கோவில்குளம், வவுனியா.
மேலதிக தகவல்களுக்கு-
“வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தினருடன்” தொடர்பு கொள்ள முடியும்….
0757729544 (திரு.காண்டீபன்) 0766644059 (திரு.நிவேதன்)
காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு-
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் இன்று மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்றன. இன்று முதல் 5ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி இன்று மற்றும் நாளை கரைத்துரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளன. மேலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நவம்பர் 4 மற்றும் 5ம் திகதிகளில் ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அடங்கலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளது.
பிரித்தானியாவில் 3000 இலங்கையர்கள் தலைமறைவு-
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3000 இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் சுமார் 50 ஆயிரம் வெளிநாட்ட பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளபோதிலும், அவர்கள் கைதுகள் மற்றும் நாடுகடத்தல்களில் இருந்து தப்பியுள்ளனர். கல்வி மற்றும் சுற்றுலா வீசாக்களில் பிரித்தானியாவுக்குள் பிரவேசித்து, வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் அங்கு இவ்வாறான எண்ணிக்கையானர்கள் தலைமறைவாக வாழ்கின்றனர். அவர்களில் 3000 இலங்கையர்கள் இருப்பதாக கூறப்படுகிறபோதும், உறுதியான எண்ணிக்கை தெரியவில்லை. அவர்களை தேடி கைதுசெய்து இலங்கைக்கே நாடுகடத்த முயற்சிக்கிறபோதும், அவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இல்லாததால் இதனை மேற்கொள்ள முடியாதிருக்கிறது என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு-
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், எதிர்காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்படும் என மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். அத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீனும் இச்சந்திப்பு இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளார். அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்-
2015ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது 157 வாக்குகள் ஆதரவாகவும், 57 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜாதிக ஹெல உறுமய வாக்களிப்பில் பங்குகொள்ளாதிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை வாசிக்க…………….
விசேட தேர்தல் அடையாள அட்டைகளுக்கு கோரிக்கை-
தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான அடிப்படைய ஆவணங்களை கொண்டிராதவர்களுக்கு, தேசிய மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் வாக்களிப்பதற்கான நீண்டகால அடையாள அட்டை ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் இந்த கோரிக்கையை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு முன்வைத்திருக்கிறது. தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு நீண்டகாலத்துக்கான தேர்தல் அடையாள அட்டை ஒன்றை வழங்குமாறு வலியுறுத்தும் வகையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டம்-
பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ்சின் இலங்கை விஜயத்திற்குத் தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வத்திக்கான் மற்றும் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை ஆகிய இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த வருடம் (2015) ஜனவரி 12ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி-
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவின் மற்றொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று, இந்தியா எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கொழும்பு துறைமுகத்தில் அக்கப்பல் நுழைய இலங்கை அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வியட்நாம் பிரதமர் நுகுயென் டான் டங்கின் இந்திய விஜயத்தின் பின்பு, சீனா தனது நீர்மூழ்கி கப்பலை இரண்டாவது முறையாக இலங்கைக்குள் அனுப்ப உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என இந்தியா தனது கடும் எதிர்ப்பை இம்முறை தெரிவிக்கும் என்று இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மீனவர்களுக்கு கருணை காட்டுமாறு கோரி போராட்டம்-
போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் 8பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட யாழ் மீனவர்கள் மூவரினதும் உறவினர்கள் மற்றும் கிராமமக்களும் கருணை காட்டுமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையலுவலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இதன்போது மகஜர் ஒன்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.