கொழும்பு மெரைன் ட்ரைவ் வீதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்-

puttalam colombo roadகொழும்பு மரைன் ட்ரைவ் வீதியில் இன்றுமுதல் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த விதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அலுவலக நாட்களில் காலை 7மணி தொடக்கம் 9 மணி வரை மரைன் ட்ரைவ் வீதியின் வெள்ளவத்தை இராமகிருஸ்ணா சந்தியிலிருந்து கின்றோஸ் பிளேஸ் சந்திவரை கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்களை மாத்திரமே செலுத்த முடியும். பிற்பகல் 4.30 தொடக்கம் மாலை 6.30 வரை பம்பலப்பிட்டி கின்றோஸ் பிளேஸ் சந்தியிலிருந்து வெள்ளவத்தை இராமகிருஸ்ணா சந்திவரை தெஹிவளை பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மாத்திரமே செலுத்தப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவிள்ளது. இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை நாட்களில் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மீறியபெத்தை மீட்பு பணியில் இன்று இரு சடலங்கள் மீட்பு-

kkoslantha_bodyபதுளை மாவட்டம் கொஸ்லாந்தை, மீறியபெத்தை தோட்ட மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இன்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லையெனவும், சேறு கலந்திருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்படி மண்ணுக்குள் புதையுண்ட 7பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீட்புப் பணிகள் எக்காரணம் கொண்டும் இடைநிறுத்தப்பட மாட்டாதென பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் சிக்கல்-

எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாறை, பொத்துவில், பசறிச்சேனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு, உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும், எனவே எதிர்காலத்தில் பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் இடாப்பு இன்று முதல் மக்கள் பார்வைக்கு-

தேர்தல்கள் ஆணையாளரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு இன்று முதல் காட்சிபடுத்தப்படவுள்ளது. இதற்கமைய, இந்த வாக்காளர் இடாப்பை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பார்வையிட முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் வாக்களிப்பதற்கான தகைமை 2014 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு மாத்திரமே உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க………

பஸ்கள் – கார் மோதி 22 பேர் காயம்-

கம்பஹா மாவட்டம் நிட்டம்புவ, கம்புறுதெனிய பிரதேசத்தில் 3 பஸ்கள் மற்றும் கார் என்பன ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 22பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இ.போ.ச பஸ்கள் இரண்டு, தனியார் பஸ் ஒன்று, கார் ஒன்று இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி விபத்தினில் காயமடைந்த 20பேர் வரக்காபொல வைத்தியசாலையிலும் இருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் புலி உறுப்பினர் கைது

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், தற்போது கட்டாரிலிருந்து இலங்கை வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் இவர் கட்டாருக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் மாணவன் உயிரிழப்பு-

யாழ். வட்டுக்கோட்டை மாவடியில் நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிளொன்று மதிலுடன் மோதியதால், மாணவனான எஸ்.சுகராஜ் (வயது 16) உயிரிழந்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் கூறியுள்ளனர். தலைக்கவசத்தை மோட்டார் சைக்கிளின் கைபிடியில் கொழுவியவாறு பயணித்த இந்த மாணவன், சந்தியில் திரும்பும்போது தலைக்கவசமானது கைபிடிக்கும் எரிபொருள் தாங்கிக்கும் இடையில் சிக்கிக்கொண்டது. இந்நிலையில், மோட்டார் சைக்கிள் எதிரே இருந்த மதிலுடன் மோதியது. இதில் படுகாயமடைந்த இந்த மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்தவராவர்.

ஒரு இலட்சம் பேருக்கு அடையாள அட்டை-

தேசிய அடையாள அட்டை இல்லாத ஒரு இலட்சம் பேருக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பிரதேச செயலகங்களுக்கு இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிகளவு முறைபாடுகள்-

இணையதள மோசடி தொடர்பாக அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 200 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர உதவி பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 2,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தமக்கு கிடைக்கப்பெற்ற முறைபாடுகளில் 100ற்கு 90வீதமானவை போலி முகப்புத்தக கணக்குகள் தொடர்பானவை என அந்த பிரிவு கூறுகின்றது.

திருமலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்; மூவர் காயம்-

திருகோணமலை லிங்கநகர் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர்களில் இருவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மரண வீடொன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்