மண்சரிவு அபாயம்: 2521 பேர் 20 முகாம்களில் தங்கவைப்பு-
நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் காணப்படும் இடங்களை பரிசோதனை செய்வதற்காக, தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுனத்தை சேர்ந்த ஆறு குழுக்கள் அடங்கிய அதிகாரிகள் தற்போது பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார். நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் இடங்களான கொத்மலை இறம்பொடை, லெவன்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, ஹட்டன், நுவரெலியா, எலமுல்ல, இராகலை தியனில்ல ஆகிய பகுதியில் 564 குடும்பங்களை சேர்ந்த 2521 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், இவர்கள் 20 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
மனித உரிமை ஆணையகத்தால் முறைப்பாடுகள் பெறுவது குறித்து அரசாங்கம் அதிருப்தி-
இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தால் இன்னும் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்கின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. எதுஎவ்வாறிருப்பினும் குறித்த காலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மறுக்கப்பட மாட்டாது என மனித உரிமைகள் ஆணையகம் அண்மையில் அறிவித்தது. இது ஒரு தரப்பினரின் நலன்கருதி எடுக்கப்பட்ட தீர்மானம் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் பக்கச்சார்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இது குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள அமைச்சர் பீரிஸ், இதனால் நீதி, நியாயம் மீறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உலகின் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியல் வெளியானது-
போப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகில் அதிகாரம்வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் பராக் ஒபாமாவை பின்தள்ளி ரஷ்ய ஜனாதிபதி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு இரண்டாம் இடமே கிடைத்துள்ளது போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் உலகின் பலம்வாய்ந்த 72 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 ஆவது இடம் கிடைத்துள்ளது மோடி பிரதமராக பதவியேற்று குறுகிய காலத்திற்குள் இந்த இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங், பிரேஸில் ஜனாதிபதி டில்மா ருஸெல்ப் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர் போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் இந்தியத் தொழிலதிபர்களான அனில் அம்பானி மற்றும் லஷ்மி மிட்டல் ஆகியோரும் உள்ளனர்.
ஆட்சியை மாற்றும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே-விக்கிரமபாகு-
நிலவும் ஆட்சியை மாற்றும் தலைவர் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே என நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டம் ஏற்று கொள்ளக் கூடியது. எனக்கு ரணில் விக்கிரமசிங்க அவசியமில்லை. எனக்கு அவர் ஜனாதிபதியாக வந்தாலும் கூட அவர் குறிப்பிடதக்க சேவையினை தொழிலாளர்களுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எப்படியிருப்பினும், இந்த தருணத்தில் சர்வாதிகார, சமய கடும்போக்கு, ஆட்சியை கட்டுபடுத்த கூடிய ஒரேயொரு தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நுவரெலியாவிற்கு விஜயம்-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் நேற்று மலையகத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிரு;தார். இதன்படி அவர் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டப்புறங்களுக்கு விஜயம் செய்து, அங்குள்ள குடியிருப்பு கட்டமைப்புகளை பார்வையிட்டுள்ளார். அத்துடன் அவர் நேற்று பிரதி அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். சதாசிவம் ஆகியோரையும் சந்தித்திருந்தார். இதேவேளை நுவரெலியா பீட்ரூ தோட்டத்துக்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், மலையகத்தில் விசேட தேவை உடையோர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். அவர்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிகூறியுள்ளார்.
மங்கள சமரவீர எம்.பி. ஆளும்தரப்பிற்கு மாறுவது குறித்து பேச்சு-
ஐ.தே.கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி மங்கள சமரவீர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஆளும் தரப்பிற்கு மாறி வெளிவிவகார அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள மங்கள சமரவீர எம்.பி. இந்த விஜயத்திற்கு முன்னரே ஜனாதிபதியையும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.தே.க.வின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டதிலிருந்து கட்சியின் தலைமைபீடத்துடன் மங்கள சமரவீர எம்.பி. முரண்பட்டு வந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே அவர் ஆளும் தரப்பு பக்கம் மாறவிருப்பதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பரீட்சையில் தோற்றும் மீரியபெத்த மாணவர்களுக்கு அடையாள அட்டை-
கொஸ்லந்தை – மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது-
காலி,எல்பிட்டிய அகலிய பொலிஸ் காவலனில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர், ஐவரை கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைதான நபர் இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் அகலிய பொலிஸ் காவலரனில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவரையே இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
3ஆம் முறை தேர்தலில் போட்டியிடும் விவகாரம் ஆராய்வு-
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிடமுடியுமா முடியாதா என்பது தொடர்பில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான ஏழு நீதியரசர்கள் கொண்ட முழுமையான குழாம் ஆராயவிருப்பதாகவும் நீதிமன்றத்தின்; வியாக்கியானம், ஜனாதிபதி காரியலாயத்துக்கு திங்கட்கிழமை எழுத்துமூலம் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.