முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம்-

yaal seithiyaalarkalukuசிவி.விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்றுகாலை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். சென்னையில் நடைபெறும் அரச சார்பற்ற அமைப்பான மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்.) விழாவில் பங்கேற்கவென அவர் இந்தியா சென்றுள்ளார். பி.யூ.சி.எல். அமைப்பு சார்பில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தியாகராய நகர், திருமலை சாலையிலுள்ள வித்யோதயா பள்ளியில் காலை 11ற்கு தொடங்கவுள்ள இந்நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வாரென கூறப்படுகிறது. “பாதுகாப்பையும், இறையாண்மையும் காத்தல்” என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றவுள்ளதாகவும், இதில் தென்னாப்பிரிக்க நீதிமன்ற முன்னாள் நீதிபதி சக்கரியா முகமது யாகூப், எழுத்தாளர் வசந்த் கண்ணபிரான் ஆகியோரும் பங்கேற்பரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கருத்து தெரிவிக்காது-

mahinda_bodhi_002எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றுக்கு எழுத்துமூல ஆவணம் சமர்பிக்கப்பட மாட்டாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால் ஏதேனும் தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி அஜித் பத்திரண தெரிவித்துள்ளார். மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியட முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளமை தொடர்பில் இன்றுமாலை 3 மணிக்கு முன்னர் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமையால் கருத்து தெரிவிப்பதை தமது சங்கம் தவிர்த்துள்ளதாக அஜித் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளரை முன்னிறுத்தும் வேலைத்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி-

chandrikaஎதிர்கட்சிகள் யாவற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் ஒரு பொது வேலைத்திட்டத்தை அமைப்பதில், நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முக்கிய பங்கெடுத்து வருவதாக தெரியவருகிறது. ஆனால், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை என்றும் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து வலுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்துக்கு தலைமை தாங்கும் வண.மாதுலுவாவே சோபித தேரர், ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அவர் சந்தித்து வருகின்றார். இந்த கூட்டங்கள் கோட்டையிலுள்ள அவரது விகாரையில் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிரியா போராளிகளுடன் இணையச் சென்ற மாலைத்தீவு பிரஜைகள் இலங்கையில் கைது-

சிரிய போராளிக் குழுக்களுடன் இணையும் நோக்கில் சென்ற மூன்று மாலைதீவுப் பிரஜைகள் இலங்கையில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டு மாலைதீவுக்கே நாடு கடத்தப்பட்டுள்ளதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 23 மற்றும் 23 வயதான இரண்டு ஆண்களும் 18 வயதான பெண்ணுமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாக மாலைதீவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மூவரும் துருக்கியின் ஊடாக சிரியாவுக்குள் பிரவேசிக்க திட்டமிட்டதோடு மருத்துவ வியடம் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது ஒருவழி விமான அனுமதிச் சீட்டுக்களையே கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரில் 23 வயதான ஆணும் 18 வயதான பெண்ணும் சட்டபூர்வமற்ற முறையில் திருமணம் செய்து கொண்டவர்கள் எனவும் குறித்த பெண் தற்போது 7 மாதக் கர்ப்பிணியாக உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்களின் கவனத்திற்கு-

இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் 50,000 மாணவர்கள் தேசிய அடையாள அட்டை பெற வேண்டியுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது. மூவாயிரம் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பத்தில் பிழைகள் இருப்பதால் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. மேலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகளும் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீரியபெத்தயில் மற்றொரு சடலம் மீட்பு-

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தயில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 54 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் தற்போது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மண்சரிவினால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உதவியை நாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

புலிகளின் தொண்டு நிறுவனங்களுக்கு தடை-

பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை நடத்த அனுமதிக்கப் போவதில்லை என்று பிரித்தானிய பிரதமர் அண்மையில் அறிவித்திருந்தார். இதன் கீழ் புலிகள் பிரித்தானியாவில் நடத்துவதாக கூறப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு மேலதிகமாக பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை காணப்படுகிறது. இதன் கீழ் விரைவில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான தொண்டு நிறுவனங்கள் சுற்றிவளைக்கப்படலாம் என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடு செல்வோரின் தேசிய அடையாள அட்டைக்கு புதிய சிக்கல்-

6 மாதங்களுக்கு அதிகமாக வெளிநாட்டில் தங்கியிருப்பதற்காகச் செல்லும் இலங்கையர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் விநியோகிக்கப்படவுள்ள புதிய அடையாள அட்டை, வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு அதிகமாக வைத்திருந்தால் அது செல்லுபடியற்றதாகிவிடும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் சரத் குமார கூறியுள்ளார்.