மண்சரிவில் பெற்றோரை இழந்த 3 பிள்ளைகள் உறவினர்களிடம் ஒப்படைப்பு-

கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் மண்சரிவினால் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகள் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய மூன்று பிள்ளைகளும் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோரை இழந்த மூன்று சிறுவர்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. மண்சரிவினால் இடம்பெயர்ந்துள்ள பிள்ளைகளை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான செயற்பாடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதன்பொருட்டு விசேட உத்தியோகத்தர்கள் குழுவொன்று இடம்பெயர் முகாம்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, மீரியபெத்தயில் மண்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவம் குறிப்பிடுகின்றது. சீரான வானிலை நிலவுமிடத்து, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியுமென மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார். பிரதேச மக்களின் தகவல்களுக்கு அமைய, மீட்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளில் 11 சடலங்களும், மேலும் சில உடற்பாகங்களும் மீட்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் மனோ பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் தொடர்பில் 175 முறைப்பாடுகள் பதிவு-

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்ட அமர்வில் 175பேர் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒட்டுசுட்டான் மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 19,766 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அடங்கலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்படி கடந்த 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாவது முறையாகவும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கை கண்டனம்-

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீட் ராட் அல் ஹ{சேன் வெளியிட்டிருந்த கருத்துக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஜெனீவாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையரசு சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்காத நிலையில் இலங்கையின் நேர்மைத் தன்மை குறித்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ஆணையாளர் கூறியிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் குறித்து விசாரணை செய்வதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் அரசாங்கம் மற்றும் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதப்படும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க மறுத்து வருகிறது. அரசாங்கம் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், விசாரணையின் நம்பிக்கைத் தன்மையில் பாதிப்பு ஏற்படாது. ஆனால் இலங்கை மீதான நம்பிக்கைத் தன்மையில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார். அத்துடன் இந்த விசாரணைக்குழுவுக்கு சாட்சிகளை வழங்க முற்படுகின்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இவ்வாறு கடுமையான சொற்களை பயன்படுத்தி, ஐ.நா சபையில் அங்கம் வகிக்கின்ற ஒருநாட்டின் இறைமையை அவர் தாழ்மைப்படுத்தி இருப்பதாக ரவிநாத் ஆரிசிங்க கூறியுள்ளார்.

வவுனியாவில் சமூர்த்தி அலுவலகத்திற்கு தீ வைப்பு-

வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியில் அமைந்திருக்கும் சமுர்த்தி அலுவலகத்திற்கு இன்றுகாலை இனம் தெரியாத சிலர் தீவைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று சிரமதான வேலைக்குச் சென்றவர்கள் அங்கு சிரமதானம் செய்து கொண்டிருக்கும்போது, சமுர்த்தி அலுவலக ஜன்னல் ஊடாக புகை வந்ததை அவதானித்துள்ளனர். பின்னர் தொலைபேசி மூலம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சமுர்த்தி ஆவணங்கள் பல தீ மூட்டப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரு ஜயசூரியவை பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரியவை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக கரு ஜயசூரிய போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. கரு ஜயசூரியவுக்கு, மக்கள் விடுதலை முன்னணியும் தனது ஆதரவை வழங்க உள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில் எவரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கரு ஜயசூரியவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மாதுலுவாவே சோபித்த தேரருடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 10ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படுமென்றும் தெரியவருகிறது.

காலிமுகத்திடல் வர்த்தகர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை-

உணவுப் பராமறிப்பு தொடர்பில் காலிமுகத்திடல் வர்த்தகர்களை தெளிவுபடுத்துவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நாளாந்தம் பெரும் எண்ணிக்கையானோர் தங்களின் ஓய்வைக் கழிப்பதற்காக காலி முகத்திடலை நாடி வருவதாக மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிடுகின்றார். காலிமுகத்திடலுக்கு வருவோருக்காக சுகாதாரப் பராமறிப்புடன் கூடிய உணவுகளை தயாரித்தல் மற்றும் விற்பனை தொடர்பில் வர்த்தகர்களை தெளிவுபடுத்தியதாக பிரதம சுகாதார வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.