முன்னாள் மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு காலமானார்-
யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட நீதிபதியான மு.திருநாவுக்கரசு அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். இவர் தமிழின்மீதும் சைவத்தின்மீதும் அதிக பற்றுக் கொண்டவர் மாத்திரமல்லாமல் தமிழ் தேசியத்துக்காக 70களில் தொடக்கம் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் பிரசாரக் கூட்டங்களிலே மிகத் தீவிரமாக பங்காற்றி வந்தவர். இவர் மக்களைக் கவரக்கூடிய விதத்திலே அழகான தமிழிலே மிகவும் அழகாகப் பேசக்கூடிய ஒருவர். அன்னாருடைய இழப்பானது தமிழ் மக்களுக்கு ஒரு மிகப் பெரிய பேரிழப்பாகும். இவர் அண்மையில்கூட யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தந்தை செல்வநாயகம் அவர்களின் ஞாபகார்த்தக் கூட்டத்திலே ஞாபகார்த்த உரையினை நிகழ்த்தியிருந்தார். இவர் தான் சரியென்று கருதுகின்ற விடயங்களை எவருக்குமே அஞ்சாது அது தொடர்பான கருத்துக்களை மக்களிடம் எடுத்துக்கூறி வந்தவர். இவர் அரசியலில் மாத்திரமல்லால் சைவப் பிரசங்கங்களிலும் சிறந்து விளங்கி மக்கள் மத்தியிலே பெருமதிப்பைப் பெற்றிருந்தவர். அன்னாருக்கு புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது அஞ்சலியை செலுத்துவதுடன், அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாவட்ட நீதிபதி மு. திருநாவுக்கரசு அவர்களுக்கு அஞ்சலி-
சுகயீன காரணத்தினால் இன்று காலமான யாழ். அளவெட்டியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு அவர்களுக்கு வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது அஞ்சலியினைச் செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில், அமரர் மு. திருநாவுக்கரசு அவர்கள் ஒரு சமூகப் போராளியாக தமிழ் சமூகத்தையும், தமிழ் இளைஞர்களையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்காக பாடுபட்டவர். அவர் கட்சி பேதங்களுக்கு அப்பால் தமிழ் உணர்வினையும், தமிழர்கள் இப்படித்தான் வாழ வேண்டுமென்ற யதார்த்தத்தையும் ஏற்படுத்தியதுடன், அதற்கு எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தவர். இளைஞர்களை ஊக்குவிப்பதில் என்றும் சளைக்காத அவர், சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதிலே முன்னின்று செயற்பாட்டார். அவரால் விகடகவி என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகள் தமிழ் சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாகும். அன்னாரது இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும், உறவினர் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது,